tamilnadu

img

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகர் ஏன் குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை?

புதுதில்லி:
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் தொடர்பான விவகாரத்தில், சபாநாயகர் ஏன் குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தமிழக சட்டமன்றச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும்  உத்தரவிட்டுள்ளது.

 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி  18 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தனது அரசுமீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தைகொண்டு வந்தார். அப்போது, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்பட 11 அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து 11 பேரையும் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டிடிவி. தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல்7 அன்று, தகுதி நீக்கம் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரிக்கப்படாமல்  நிலுவையில் இருந்தது. கடந்த வாரம் தலைமை நீதிபதியை சந்தித்து திமுக தரப்பில் முறையிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு  பிப்ரவரி 4 அன்று  விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது,  இந்த வழக்கில் 3 ஆண்டுகள் தாமதம் தேவையற்றது.  ஓபிஎஸ்உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் முடிவுஎடுக்காமல் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார்? தேர்தல் ஆணையத்தில் இருந்தவழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா?  இதில் சட்டப்பேரவைத்தலைவருக்கு உள்ள சிக்கல் என்ன? சட்டப்பேரவைத் தலைவர் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தாரா?  என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்து பதிலளிக்க தமிழக சட்டமன்றச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள்  உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;