tamilnadu

img

10 மாநிலங்களில் மொத்த இடங்களும் பாஜக-வுக்கே போனது

புதுதில்லி;
மக்களவைத் தேர்தலில், வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 7 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் ஓரிடத்தைக் கூட எதிர்க்கட்சிகளால் பெற முடியவில்லை. அனைத்து இடங்களையும் பாஜகவே வென்றுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகள், ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், உத்தரகண்ட்டில் 5 தொகுதிகள், இமாசலபிரதேசத்தில் 4 தொகுதிகள், அருணாசல பிரதேசத்தில் 2 தொகுதிகள், திரிபுராவில் 2 தொகுதிகள் என முழுமையாக பாஜக வெற்றிபெற்றுள்ளது. இவற்றில் ராஜஸ்தானில் பாஜக கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி பெற்ற ஓரிடமும் அடங்கும். இவைதவிர, யூனியன் பிரதேசங்களான தில்லியில் இருக்கும் 7 தொகுதிகள் மற்றும் சண்டிகர், டாமன் டையூ தொகுதிகளையம் பாஜக கைப்பற்றியுள்ளது.

பிற மாநிலங்களின் நிலவரம்
பிற மாநிலங்களைப் பொறுத்தவரை, ஆந்திரா மாநிலத்தின் 25 மக்களவைத் தொகுதிகளில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்–22 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம்–3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.அசாமில் மொத்தம் இருக்கும் 14 தொகுதிகளில் 9 தொகுதிகளில் பாஜகவும், 3 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. ஐக்கிய ஜனநாயக முன்னணி–மற்றும் சுயேச்சை தலா ஓரிடத்தை வென்றுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் 40 தொகுதிகள் இருக்கும் நிலையில், பாஜக 17 தொகுதிகளிலும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் –16 தொகுதிகளிலும், பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி –6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரசுக்கு 1 தொகுதி கிடைத்துள்ளது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக 9 தொகுதிகளிலும், காங்கிரஸ்–2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. யூனியன் பிரதேசமான கோவா-வில், பாஜக-வும், காங்கிரசும் தலா ஒரு தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டுள்ளன.

காஷ்மீர் மாநிலத்தில் 6 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், இவற்றில் பாஜக–3 தொகுதிகளிலும், உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றுள்ளன. காங்கிரஸ், மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.ஜார்கண்ட் மாநிலத்தின் 14 தொகுதிகளில் 11 தொகுதிகளை பாஜக பிடித்துள்ளது. ஜார்க்கண்ட் முப்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஜார்கண்ட் மாணவர் கூட்டமைப்பு (ஏஜேஎஸ்யு) ஆகியவை தலா ஓரிடங்களை கைப்பற்றியுள்ளன.கர்நாடக மாநிலத்திலுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளை அள்ளியிருக்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், சுயேச்சை ஆகியோருக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்துள்ளன.

கேரளத்தில் இருக்கும் 20 இடங்களில், பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு–15 இடங்களும், அதன் கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 இடங்கள், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ் (எம்) ஆகியவற்றுக்கு தலா ஒரு இடங்களும் கிடைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழப்புழா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.மத்தியப்பிரதேசத்தில் 29 தொகுதிகளில் பாஜக–28 தொகுதிகளை அள்ளியுள்ளது. காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. சிந்த்வாரா மக்களவை தொகுதியில் கமல்நாத்தின் மகன் நகுல் நாத், பாஜக வேட்பாளர் நாதன் சகாவை, 37 ஆயிரத்து 536 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், மொத்தமுள்ள 48 இடங்களில், பாஜக–23 தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 18 தொகுதிகளையும் வென்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, சுயேச்சை ஆகியோர் தலா ஒரு இடத்தில் வந்துள்ளனர்.

மணிப்பூரிலிருக்கும் 2 தொகுதிகளில் பாஜக ஒன்றையும், நாகா மக்கள் முன்னணி ஒன்றையும் பங்கிட்டுக் கொண்டுள்ளன. இதேபோல மேகாலயாவில் காங்கிரஸ்–ஒன்றையும், தேசிய மக்கள் கட்சி–1 ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளன.மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களில் இருக்கும் தலா ஒரு இடங்களை, முறையே, மிசோரம் தேசிய முன்னணி, தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா ஆகியவை கைப்பற்றியுள்ளன. 

ஒடிசாவிலிருக்கும் 21 தொகுதிகளில், பிஜூ ஜனதாதளம் 12 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வென்றுள்ளன. காங்கிரஸ் 1 தொகுதியைக் கைப்பற்றியுள்ளது. 
பஞ்சாப் மாநிலத்தில் 13 இடங்களில் காங்கிரஸ் 8 இடங்களையும் அகாலிதளம் 2 இடங்களையும் வென்றுள்ளன. ஆம் ஆத்மி ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடைப்பெற்ற 38 இடங்களில், பாஜக-வுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. திமுக 19 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி ஆகியவை தலா ஓரிடத்திலும் வென்றுள்ளன. அதிமுகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

தெலுங்கானாவின் 17 தொகுதிகளில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி–9 தொகுதிகளிலும், பாஜக–4, காங்கிரஸ்–3, மஜ்லிஸ் கட்சி–1 என்ற அடிப்படையிலும் வெற்றி பெற்றுள்ளன.உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், பாஜக–62 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ்–10, சமாஜ்வாதி 5, அப்னாதளம் 2, காங்கிரஸ் 1 என இடங்களைக் கைப்பற்றியுள்ளன. 

மேற்குவங்கத்தின் 42 தொகுதிகளில், திரிணாமுல் காங்கிரசுக்கு–22 தொகுதிகளே கிடைத்துள்ளன. பாஜக 18 இடங்களை பிடித்துள்ளது. காங்கிரஸ்–2 இடங்களில் வந்துள்ளது.
யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரும், லட்சத்தீவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரும், தாதர் நாகர் ஹவேலியில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.