tamilnadu

img

இழுத்து மூடும் நிலையில் 1.75 கோடி சிறு வியாபார நிறுவனங்கள்.... 10 கோடி பேரின் வேலைவாய்ப்பு - வருவாய் பறிபோகும் ஆபத்து

புதுதில்லி:
நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 75 லட்சம் சிறு வியாபார நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் (small traders) மூடப்படும் நிலையில் இருப்பதாக வர்த்தகர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

2016-இல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம், 2018-இல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவை ஏற்கெனவே இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தது. கோடிக்கணக்கானோரின் வேலைவாய்ப்பை பறித்தது. இந்நிலையில், கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையாக, தொழில்களை மேலும் சிக்கலில் நிறுத்தியுள்ளது.

இந்தியாவில் சிறு வணிகர்கள், கடைகள், சுய தொழில் செய்வோர், நடைபாதை வியாபாரிகள் என பலரும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.இந்நிலையில்தான், நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1 கோடியே 75 லட்சம் சிறு கடைகள், தொழில்கள் மூடப்படும் அபாய நிலையில் இருப்பதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. கர்நாடகாவின் சில பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய இனிப்பு கடைகள், பிளாஸ்டிக், பொம்மைகள், பைகள் மற்றும் பிற சிறிய பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஏற்கெனவே அருகி விட்டனர். அவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினர், இப்போது அவர்களே வேலை தேடுகிறார்கள். கடுமையான பணப் பிரச்சனை உள்ளது.மும்பையில் மட்டும் குறைந்தது 30 சதவிகித கிரானா கடைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுப் பிரிவு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது. கிராமப்புறங்களிலும் நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளதால் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களின் விநியோகஸ்தர்கள், (Fast-moving consumer goods) 20 சதவிகித விற்பனை இழப்பை சந்தித்து வருகின்றனர்.

கொரோனாவால் உள்நாட்டு வர்த்தகம் நூற்றாண்டு காணாத வகையில் மோசமான நாட்களைச் சந்தித்து வருகிறது. கொரோனாவால் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகளும் இல்லை.இந்திய உள்நாட்டு வர்த்தகத்தில் 7 கோடிக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் இருக்கின்றனர். இவர்களால் 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இந்த வர்த்தகர்களுக்கு போதிய கடனுதவி வழங்க வங்கித் துறை தவறிவிட்டது. வெறும் 7 சதவிகித வர்த்தகர்களுக்கு மட்டுமே கடன் கிடைத்திருக்கிறது.

இதன் காரணமாக, மீதமுள்ள 93 சதவிகித வர்த்தகர்கள் கந்துவட்டிக் காரர்களையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 25 சதவிகித தொழில்கள் மூடப்படும் அபாயநிலை உருவாகியுள்ளது. எனவே, வர்த்தகர்களின் நிலையை உணர்ந்து பிரதமர் மோடி இப்பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்த சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

;