tamilnadu

img

புதுச்சேரியில் விடுதலை தின கொண்டாட்டம்!

புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்பித்தார்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி பிரிட்டிஷ் அரசு, இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தது. ஆனால், பிரெஞ்சு காலனியிடம் இருந்து புதுச்சேரிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி விடுதலை அளிக்கப்பட்டு, இந்தியாவுடன் இணைந்தது. இதன்படி இன்று புதுவையின் விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. 

இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்பித்தார். இதை அடுத்து, காவல் துறையினர் அணி வகுப்பு, பள்ளி என்.சி.சி மாணவர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பரதநாட்டியம், காளியாட்டம், நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம், வீர விளையாட்டுகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுல கிருஷ்ணன், சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

;