tamilnadu

img

தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்பதை எங்கள் தந்தை கற்றுத் தந்துள்ளார்

புதுதில்லி:

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட சாமியாரும், தற்போது போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிப்பட்டு இருப்பவருமான பிரக்யா சிங் தாக்குர், அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். 


அதில், “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கால், நான் ஏராளமான கொடுமைகளை அனுபவித்தேன்; அதற்கு என்னைக் கைது செய்த ஹேமந்த் கார்கரேதான் காரணம்; அதனால் நான் அவரைச் சபித்தேன்; அவருடைய குடும்பமே அழிந்து போக வேண்டும் என்று சபித்தேன்; என் சாபம் பலித்தது; அவருடைய கர்மவினையால் அந்த வருடமே அவர் கொல்லப்பட்டார்” என்று கூறியிருந்தார்.


இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு அதிகாரியை, ‘சாக வேண்டும் என்று சபித்தேன்’ என்பதா? என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

“அசோக் சக்ரா விருது பெற்ற மறைந்த ஹேமந்த் கார்கரே, பயங்கரவாதிகளுடன் போராடி மகத்தான தியாகம் செய்துள்ளார்; அவரை ஒரு வேட்பாளர் தனது அறிக்கை மூலம் அவமானம் செய்வதை நாங்கள் கண்டிக்கிறோம்; நமக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும், பிரக்யா சிங் தாக்கூரின் பேச்சை கண்டித்தது.


எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, கார்கரே குறித்து, தான் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாக பிரக்யா சிங் பின்வாங்கினார்.இதனிடையே, அமெரிக்காவில் இருக்கும், ஹேமந்த் கார்கரேவின் மூத்த மகள் ஜுயி நவாரே, பிரக்யா சிங்கின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 


“எனது தந்தை ஹேமந்த் கார்கரேவைப் பற்றி, சாமியாரிணி பிரக்யா குற்றம் சாட்டியதைச் செய்தித்தாள்களில் படித்தேன். இதுகுறித்து நான் அவரைத் தவறாக நினைக்கவில்லை. நான் எனது தந்தையின் அருங்குணங்கள் பற்றி மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்; எனது தந்தை, கடமையை ஒழுங்காக செய்து, மற்ற அதிகாரிகளுக்கு வழிகாட்டியாக விளங்கியவர்; எங்களுக்கும் அவர், தீவிரவாதத்திற்கு தனிமதம் இல்லை என்பதையும், எந்த மதமும் மற்றவரைக் கொல்ல வேண்டும் என்று போதிக்கவில்லை என்பதையும் கற்பித்துள்ளார்; 24 ஆண்டு காவல்துறைப் பணியில் அவர் தனது கொள்கையில் இருந்து மாறியதில்லை. தனது உயிரையும் கூட, மும்பை நகரையும், இந்த நாட்டையும் காப்பதற்காகவே விட்டுள்ளார்; எனவே, அவருடைய நினைவுகளை யாரும் மறைத்துவிட முடியாது” என்று ஜுயி நவாரே கூறியுள்ளார்.


;