tamilnadu

img

ஆயுதப்படை தியாகத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் மோடி!

புதுதில்லி:

மோடி அரசைப் போல, ஆயுதப்படையினரின் தியாகங்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் மிகமோசமான அரசை இதுவரை இந்தியா பார்க்கவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.


இதுதொடர்பாக, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் மிகவும் பாதுகாப்பான தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு துணிச்சலான நம்முடைய 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழக்கின்றனர் என்றால், இது புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் ஏற்பட்ட மோசமான தோல்வியாகும். 


சிப்பாய்களை வான்வழியாக மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றே சிஆர்பிஎப் மற்றும் பிஎஸ்எப் ஆகியவை கோரியுள்ளன. ஆனால் மோடி அரசாங்கம் மறுத்துள்ளது. பயங்கரவாத அமைப்பினர் வீடியோ எச்சரிக்கை செய்துள்ளனர். அதனையும் கவனத்தில் கொள்ளாமல் மோடி அரசு கண்களை மூடிக்கொண்டு இருந்துள்ளது. தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையையும் மோடி அரசு புறக்கணித்து விட்டது.


கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் பாம்பரே, ஊரி, பதான்கோட், குர்தாஸ்பூர், சஞ்வான் போன்ற ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் அமர்நாத் யாத்திரையிலும் தாக்குதலை நடத்தினர்.பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட போது விசாரணை செய்ய பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மோடி அரசாங்கத்தால் அழைக்கப்பட்டது. இது மிகப்பெரிய வியூக தவறாகும். அப்போதே நம்முடைய பாதுகாப்பு படைகளின் நம்பிக்கை சிதைக்கப்பட்டு விட்டது.


காங்கிரஸ் ஆட்சியின் போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூகமான நடவடிக்கையாக இருந்தது, இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு எதிராகவே மேற்கொண்டோம், ஆனால் அதனை வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தவில்லை. 


கடந்த 70 ஆண்டுகளில் அதிகாரத்தில் இருக்கும் ஒரு அரசாங்கம் தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள நமது ஆயுதப்படைகளின் சக்திக்கு பின்னால் ஒளிந்து கொண்டது கிடையாது. நம்முடைய ஆயுதப்படைகளின் நடவடிக்கையை அரசியல்மயமாக்கும் முயற்சியானது மிகவும் வெட்கக்கேடானது, மேலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, கிராமப்புற இன்னல்கள் மற்றும் முறைசாரா துறை ஆகியவற்றில் மோடி அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்பாட்டால் நாடு பெரும் தோல்வியை தழுவியுள்ளது, இவற்றில் இருந்து கவனத்தை திசைத்திருப்பவே ராணுவம் இழுக்கப்படுகிறது.இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


;