tamilnadu

img

 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி ஆட்டோமோடிவ் கம்பெனி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

புதுதில்லி(குருகிராமம்), ஜூலை 15-

பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காகவும், புதுதில்லி-குருகிராமம் அருகிலுள்ள பினோலாவில் இருக்கின்ற ஆட்டோமோடிவ் கம்பெனி தொழிலாளர்கள் ஞாயிறு அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றார்கள்.  இவர்களின் போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்தன.

பினோலாவில் இயங்கம் சிவா ஆட்டோ டெக் லிமிடெட் என்னும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள்தான் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் தங்கள் நிறுவனத்திலிருந்து பழிவாங்கப்பட்டு வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை உள்ளடக்கி நிர்வாகத்திடம் சென்ற ஆண்டு மே மாதத்தில் ஒரு கோரிக்கை சாசனத்தை அளித்திருந்தார்கள். ஆயினும் அவற்றின்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, தொழிற்சங்க இயக்கங்களின் முன்னணியில் நின்ற 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒழுங்கீனமாக நடந்துகொண்டார்கள் என்று கூறி வேலைநீக்கம் செய்தது.

நான்கு நாட்களுக்கு முன்பு தொழிற்சங்க முன்னணி ஊழியர்கள் நான்கு பேரை தொழிற்சாலைக்குள் வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தியிருக்கிறது. இதன்பின்னர்தான் சிவா ஆட்டோ டெக் லிமிடெட் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதன் பொதுச் செயலாளர் முகேஷ் யாதவ் தலைமையில் மேற்கண்டவாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்கள். வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் வேலைக்கு மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராக அமல்படுத்த வேண்டும் என்றும், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் மற்றும் தாங்கள் அளித்திட்ட  கோரிக்கை சாசனத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் வைத்திட்ட மிகவும் முக்கியமான கோரிக்கை, தொழிற்சாலைக்குள் காவல்துறையை அனுமதிக்கக் கூடாது என்பதுமாகும்.

(ந.நி.)

;