அறந்தாங்கி, அக்.19- புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டு காலமாக போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியை சந்தித்து வந்த மக்களுக்கு கடந்த ஆண்டு கஜா புயலின் தாக்கத்தினால் தென்னை, தேக்கு, வாழை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமானது. அதே போன்று மழைக்காரணியான பனை மரங்களும் அடியோடு சாய்ந்து சேதமானது. அதனை மீட்டெடுக்கும் விதமாக அரசின் வேளாண்மைத் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியை அடுத்த ஆமாஞ்சி கண்மாயில் நடைபெற்ற பனைவிதை நடும் விழாவில் கோட்டாட்சியர் குணசேகரன் தலைமை வகித்தார். ஆயிரத்து 920 மீட்டர் நீளம் கொண்ட கண்மாயில் சுமார் மூவாயிரத்து ஐநூறு பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் கல்பனா உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.