tamilnadu

img

அனைத்துப் பகுதி மக்களாலும் நேசிக்கப்பட்டவர் தோழர் எம்.உடையப்பன்... உ.வாசுகி புகழாரம்....

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களாலும் நேசிக்கப்பட்டவர் தோழர் எம்.உடையப்பன் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், இரண்டு முறை கறம்பக்குடி பேரூராட்சி மன்றத்தின் தலைவராகவும், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகளின் மாவட்டச் செயலாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி மறைந்த தோழர் உடையப்பனின் படத்திறப்பு நிகழ்ச்சி கறம்பக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தோழர் உடையப்பனின் படத்தை திறந்துவைத்து உ.வாசுகி பேசியது:

இங்கு வருவதற்கு முன்பாக தோழர் உடையப்பனின் குடும்பத்தினரை அவரதுவீட்டில் சந்தித்தேன். அவர் கட்சிப்பணி யாற்றிய விதத்தை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஒருநாள்கூட ஓய்வு எடுக்காதவர் ஊரடங்கு காலத்தில் மாதக் கணக்கில் வீட்டில் முடங்கி இருந்தது அவருக்கு பெரிதும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கும் அதுவும் ஒரு காரணமாகிவிட்டது என்றனர். தோழர் உடையப்பனை சுதந்திரமாக கட்சிபணியாற்ற குடும்பத்தினர் அனுமதித்ததன் காரணமாகவே மக்கள் தலைவராக உயர்ந்தார்.

இதர கட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பதவிக் காலத்தில் சொத்துக்களை சேர்த்து வருவதை பார்க்கிறோம். ஆனால், தோழர் உடையப்பன் பேரூராட்சிமன்றத் தலைவராக இருந்தபோது இருந்த சொத்துக்களையும் இழந்துள்ளார். தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இங்கே அவரை உச்சத்தில் வைத்துப் பாராட்டினர். கம்யூனிஸ்ட்டுகளை மனதில் வைத்துப் பூஜிக்கின்றனர். அவர்களிடம் எங்களுக்கு அங்கீகாரம் இருக்கிறது என்பதே எங்களுக்குப் பெருமை.தோழர் உடையப்பனின் பன்முகத் தன்மையை பலர் எடுத்துக்காட்டினர். அனைத்து சமூகத்தினரின் விழாக்களிலும் பங்கெடுத்தார். அனைத்துப் பகுதி மக்களின் பிரச்சனையை தீர்த்து வைத்தார். போராட்டக்களங்களில் முன்னிலையில் இருந்தார். அவரை கம்யூனிஸ்ட் என்ற வரையறைக்குள் மட்டும் அடைக்கமுடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.அவரது அனைத்துச் செயல்பாடுகளும் கம்யூனிஸ்ட் என்ற வரையறைக்கு உள்ளானதே.

சொல், செயல், சிந்தனை அனைத்திலும் ஒரு நேர்கோட்டில் நின்று செயல்பட்டவர் தோழர் உடையப்பன். ஒடுக்கப்பட்டமக்களுக்காக, ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்காக, உழைப்பாளி மக்களுக்காக எண்ணற்ற போராட்டங்களுக்கு அவர் தலைமை வகித்துள்ளார். கிராமப்புரத்தில் விவசாயிகள் இயக்கத்தை கட்டியெழுப்பியதில் அவர் மகத்தான் பங்களிப்பை செலுத்தினார். தோழர் உடையப்பன் இன்று உயிரோடு இருந்திருந்தால் தில்லிக்கு ஒரு பத்துப் பேரையாவது அழைத்துச் சென்று விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்று இருப்பார்.

தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில்ஆண்கள் மட்டுமல்ல. பெண்களும் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். பஞ்சாபில் இருந்து 70 வயது பெண்மணிடிராக்டரை தானே ஓட்டி வந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். முன்பெல்லாம் ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்று வந்தனர். தற்பொழுது கார்ப்பரேட்டுகளை எதிர்த்து பணக்காரவிவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப்பகுதி யினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள னர்.புதிய மின்சார சட்டம் ரத்துசெய்யப் பட்டது விவசாயிகள் போராட்டத்தின் முதல் வெற்றி. அடுத்து வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடம் ஒத்திபோடமுன்வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள் ளது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதைப் போல மக்கள் திரள் வரலாற்றை திருப்பி எழுதும் என்பதற்கு தில்லி போராட்டமே சாட்சியாக உள்ளது. இவ்வாறு உ.வாசுகி தனது பேச்சில் குறிப்பிட்டார்.நிகழ்ச்சிக்கு கட்சியின் கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் வி.முத்துகிருஷ்ணன், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராமதாஸ், மதிமுக ஒன்றியச் செயலாளர் கே.சேதுமாதவன், ஓய்வுபெற்ற தொடக்கக்கல்வி அலுவலர் சிவ.திருமேனிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச்செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்.
 வி.மணிவேல் வரவேற்க, பி.வீரமுத்து நன்றி கூறினார். முன்னதாக தோழர் உடையப்பன் நினைவாக கட்சி கொடியை உ.வாசுகி ஏற்றி வைத்தார். கல்வெட்டை ஐ.வி.நகராஜன் திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, என்.பொன்னி, ஏ.ஸ்ரீதர், வி.துரைச்சந்திரன், ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;