tamilnadu

img

பீகார் மாநிலத்தில் கொத்துக் கொத்தாக மடிந்த குழந்தைகள்

முசாபர்பூர்:
பீகார் மாநிலத்தில், 150-க்கும் மேற்பட்டகுழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பலியான சம்பவம், பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. 223 பேர் பெண் குழந்தைகளும் 159 ஆண் குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் குழந்தைகளைத் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இரத்தத்தில் சர்க்கரை குறைவு, அம்மை நோய் உள்ளிட்ட குறைபாடுகளையே ஏ.இ.எஸ். பாதிப்பு (Acute Encephalitis  Syndrome - AES) என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக வெயில், வெப்பம், மழையின்மை போன்ற காரணங்களால் ஏ.இ.எஸ். பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த நோய் தாக்கியதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இதனிடையே, குழந்தைகள் லிச்சிபழங்களை சாப்பிட்டதாலேயே பாதிப்புஏற்பட்டதாக ஒரு கருத்து வேகமாக பரவியது. இது உண்மையாக இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகங்களை வெளியிட்டனர். ஆனால், மருத்துவ வல்லுநர்கள், அந்தக் கருத்தை அடியோடு மறுத்துள்ளனர். 

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 150 பேர் இறந்துள்ளனர். 223 பேர் பெண் குழந்தைகளும் 159 ஆண் குழந்தைகளும் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நோயாளிகள்  (84 பெண் குழந்தைகள் மற்றும் 51 சிறுவர்கள்) 1 முதல் 3 வயதிற்குஉட்பட்டவர்கள். இவர்கள் லிச்சி பழத்தோட்டங்களை பார்வையிட வாய்ப்பே இல்லை. 
நோயாளிகளில் பெரும்பான்மையானவர்களுக்கு (97 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள்) இருந்த பிரச்சனை என்னவென்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தது என்பதுதான். எனவே, குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழங்கள் காரணமல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழமல்ல; அவர்களைப் பீடித்திருந்த வறுமைதான் முக்கியக் காரணம் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.முசாபர்பூரில், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 289 குடும்பங்களில் 280 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவை; இக்குடும்பங்களின் தலைவர்கள் தினக்கூலிகள். அதிகபட்ச மாத வருமானமே ரூ. 5700 மட்டும்தான். பாதிக்கப்பட்ட குடும்பங்களில், 96 குடும்பங்களுக்கு ரேசன் கார்டு இல்லை. 124 குடும்பங்களுக்கு கடந்த மாதம் பொது விநியோக முறையிலிருந்து ரேசன் கிடைக்கவில்லை என்பன போன்ற அதிர்ச்சியான தகவல்கள்தற்போது வெளிவந்துள்ளன. குறிப்பாக,காய்ச்சலுக்கு முந்தைய நாள் இரவுகூட,இக்குடும்பங்கள் அனைத்தும் பட்டினியோடுதான் உறங்கியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பின்னரும், இந்த குடும்பங்களில் 159 பேருக்கு மட்டுமே, குழந்தைகளை முசாபர்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைத்த
தாக ஆய்வு ஒன்றில் வெளிப்பட்டுள்ளது.எனவே, மாநிலத்தை ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர், குழந்தைகள் இறப்புக்கு இனியும் லிச்சி பழத்தை காரணம் காட்டுவதை விட்டு, மக்களின் வறுமையைப் போக்கவும், சுகாதார வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.கடந்த ஆண்டு, உலகளவில் பசி குறியீடு அடிப்படையில் பட்டியலிடப்பட்ட 119 நாடுகளில் இந்தியா மிகமோசமான முறையில் 103-ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

;