tamilnadu

img

செய்திகள் மூன்று; உண்மை ஒன்றுதான்! - மதுக்கூர் இராமலிங்கம்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள்  அநியாய கட்டண உயர்வு மற்றும் விடுதிக் கட்டண உயர்வுக்கெதிராக தீரமுடன் போராடி வருகின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் என்று கூறிக்கொண்டே மாணவர்களின் மண்டையை உடைத்து ரத்தம் சிந்த வைக்கிறது காவல்துறை. எனினும் மாணவர்கள் நெஞ்சுரத்துடன் போராட்டக் கொடியை உயர்த்திப் பிடித்து களத்தில் நிற்கின்றனர்.  இதே நேரத்தில் காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். துணைவேந்தர் இல்லத்தின் முன்பு பூஜை சமஸ்காரம் செய்து போராட்டம் நடத்தியுள்ளனர். 

அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள சமஸ்கிருத துறையில் கடந்த ஐந்தாம் தேதி ஒரு துணை பேராசிரியர் பதவியேற்றிருக்கிறார். அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த மாணவர்களின் கோரிக்கை. அவர் செய்த தவறு என்ன? அவர் ஒரு முஸ்லிம் பெயரை வைத்திருப்பதுதான். அவரது பெயர் பிரோஸ்கான். அவர் கூறுகிறார்: நான் இரண்டாம் வகுப்பிலிருந்தே சமஸ்கிருத மொழி வழியாகவே படித்து வந்துள்ளேன். இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை சமஸ்கிருத மொழி படித்து பெற்றுள்ளேன். அப்போதெல்லாம் ‘நான் ஒரு முஸ்லிம்’ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதேயில்லை. ஆனால் தற்போது நீ முஸ்லிம் தான் என்ற எண்ணத்தை விதைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்கு காரணம் நான் சூடியிருக்கும் ‘முஸ்லிம் பெயர்தான்’ என்று குமுறியுள்ளார். இவர் இளங்கலை, முதுகலை மற்றும் ஆசிரியர் பட்டத்தை ஜெய்ப்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சமஸ்கிருத மொழியில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இந்தத் தகுதிகளின் அடிப்படையில்தான் அவர் துணை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒரு முஸ்லிம் சமஸ்கிருத மொழியை கற்பிக்கக் கூடாது என சாதி, மதவெறி உச்சந்தலையில் ஏற்றப்பட்ட ஒரு கூட்டம் அவருக்கெதிராக போராடுகிறது. பல்கலைக்கழக நிர்வாகமோ தகுதி அடிப்படையில்தான் அவர் நியமிக்கப்பட்டார் என்று கூறாமல் மவுனம் சாதித்து வருகிறது. உயர்கல்வி நிலையங்களில் இத்தகைய அணுகுமுறை பின்பற்றப்படுவது மிக மோசமான முன்னுதாரணம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கண்டித்துள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 1916ஆம் ஆண்டு மதன் மோகன் மாளவியாவால் உருவாக்கப்பட்டது. தற்போது மத்திய பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் கொடியை அகற்றியதற்காக பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி கிரண்தாம்லே கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு துரத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் வெளியாகியுள்ள இன்னொரு செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது. கேரளத்தில் 1987 முதல் 27 ஆண்டுகள் அரபி மொழி கற்பிக்கும் ஆசிரியையாக பணியாற்றிய கோபாலிகா அந்தர் ஜனம் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார். அவர் கூறுகையில், ‘என்னுடைய மாணவர்கள் என்னை மிகவும் நேசித்தார்கள். என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்து திருப்தியுடன் பணி ஓய்வு பெற்றுள்ளேன்.  தான் முதலில் சமஸ்கிருத மொழி படித்ததாகவும், பின்னர் அரபி மொழி மீது கொண்ட ஆர்வத்தால் அந்த மொழியை பயிலத் துவங்கியதாகவும் கூறியுள்ளார். நம்பூதிரி வகுப்பை சேர்ந்த இவரது குடும்பம் கொட்டியூர் கிராமத்தில் பூசாரியாக பணியாற்றி வந்துள்ளது.  எங்களது கிராமத்தில் மக்களிடையே எந்த வேற்றுமையும் இல்லை. நான் அரபு மொழி படிக்க விரும்பியதை அனைவரும் வரவேற்றார்கள். 

கடந்தாண்டு அரபு தினத்தன்று முஸ்லிம் அமைப்புகள் தமக்கு பாராட்டு விழா நடத்தியதாக அந்தர்ஜனம் கூறியுள்ளார். தற்போது கேரளத்தில் பலரும் மதங்களுக்கு அப்பாற்பட்டு அரபி மொழி பயில்வதாகவும் அரசு பள்ளிகளில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதோடு, அரபி ஒரு அழகான மொழி. அது எந்த ஒருமதத்தோடும் தொடர்புடையது அல்ல என்கிறார்.  என்னுடைய பெயர்தான் எனக்கு பிரச்சனை என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்க நேர்கிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த பிரோஸ்கான் மட்டுமல்ல, சென்னை ஐஐடியில் சித்ரவதைக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்ட பாத்திமா லத்தீப்பும் தன்னுடைய பெற்றோர்களிடம் இதே வார்த்தையை கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் மட்டும் கடந்த ஓராண்டில் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

சாதி மற்றும் மதவெறியின் கூடாரமாக ஐஐடிகள் மாறிவருகின்றன. சென்னை ஐஐடியில் 28 ஆண்டு காலம் பணியாற்றிய பேராசிரியர் வசந்தா கந்தசாமி, மாணவி பாத்திமாவின் தற்கொலை ஒரு நிறுவன படுகொலை என்றே சொல்ல வேண்டும். இங்கு தலித் மற்றும் சிறுபான்மையினர் படிப்பதே மிகப் பெரிய சவால்தான். அங்கு தலித் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களே இல்லை. என்னுடைய 28 ஆண்டுகால பணியில் 10 முஸ்லிம் மாணவர்கள் அதிகபட்சம் படித்திருக்கலாம். பாத்திமா ஒரு முஸ்லிமாக இருந்ததால்தான் மனரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அங்கு எந்த ஒரு இடஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்படாது. நீதிமன்ற உத்தரவையே அவர்கள் மதிக்கமாட்டார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஒரு பேராசிரியராக இருந்தும் கூட சாதியரீதியாக நானும் துன்புறுத்தப்பட்டிருக்கிறேன் என்கிறார் அவர். 

பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமாக குற்றம் சாட்டப்படும் சுதர்சன பத்மநாபன் ஆர்எஸ்எஸ் அமைப்போடு நெருக்கமான தொடர்புடையவர்.  மோடி அரசின் புதிய கல்விக்கொள்கை இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உயர்கல்வி நிலையங்களின் நிலை இதுதான் என்றால், குலக்கல்வி முறையை அடிப்படையாக கொண்ட அந்த நாசகரக் கொள்கையும் முற்றாக நடைமுறைப்படுத்தப்பட்டால் உயர்கல்வி நிறுவனங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் வெளியில் நின்று கூட வேடிக்கை கூட பார்க்க முடியாது. 

;