tamilnadu

img

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அலட்சியம்

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அலட்சியம்.  கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கண்டனம் 


தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அலட்சியம் காட்டும் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று நோய் அச்சம் மனித குலத்தையே நடுநடுங்கச் செய்துள்ளது. நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொள்ளை நோயில் இருந்து மக்களை காக்க மருத்துவர்களோடு இணைந்து தூய்மைப் பணியாளர்கள் ஆகப்பெறும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் இவ்வூழியர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. 

கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் எந்த ஒரு நபரும் பாதிக்கப்படக்கூடாது என்கிற எண்ணம் இத்தொழிலாளர்களுக்கு பொருந்தாதோ என மாநகராட்சி நிர்வாகம் நினைக்கிறதோ என்கிற அச்சம் எழுகிறது. வெறுமனே அமைச்சரின் பின்னால் செல்வதல்ல கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கை. இப்பணியில் ஈடுபடுகிற ஊழியர்களின் தேவையறிந்தும், உணர்ந்தும் நிறைவேற்ற வேண்டும். உடனடியாக அனைத்து தூய்மைத் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை கோவை மாநகராட்சி ஆணையர் உறுதிசெய்திட வேண்டும். 

மேலும், இத்தொழிலாளர்கள் உள்ளூரில் இருந்து சிறப்பு பணி என்பதன் பெயரில் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு தேவையை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது தெரியவருகிறது. ஆங்காங்கே இவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர் என்பது ஆறுதல். அதேநேரம், மாநகராட்சி நிர்வாகம் உணவு அளிப்பதற்கு பிரத்தியோக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை இத்தொழிலாளர்களிடம் பேசுகையில் தெரிந்து கொள்ள முடிந்தது. காலை 6 மணிக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் மதியம் 2 மணிவரை பணியாற்றுகையில் குறைந்த பட்சம் காலை உணவு மற்றும் இரண்டு வேளை தேநீர் தருவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். 

மேலும், கோவை விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் உள்ளது. விமான போக்குவரத்து அற்ற இந்நேரத்தில் இந்த நவீன தீயணைப்பு வாகனத்தை கோவை மாநகராட்சி பயன்படுத்தி சந்தை, மார்க்கெட் போன்ற மக்கள் கூடுகிற பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பதற்கு பயன்படுத்துவது இக்காலத்திற்கு உதவிகரமாக இருக்கும். தூய்மை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, உணவு வழங்குவது ஆகிய இன்றியமையாத தேவைகளை உடனடியாக கோவை மாநகராட்சி ஆணையர் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோவை மசக்காளிபாளையம் சாலையில் உள்ள ஹர்சா மஹாலில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அமைப்பினர் கடந்த பத்து நாட்களாக வடமாநிலத்தவர் மற்றும் ஆதரவற்ற மக்களுக்காக ஒரு நாளைக்கு 500 பேருக்கான உணவை சமைத்து விநியோகம் செய்து வருகின்றனர். இச்செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்துவது குறித்த ஆலோசனையினை தொழிற்சங்க நிர்வாகிகளோடு பி.ஆர்.நடராஜன் மேற்கொண்டார். இதில் சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி, கே.மனோகரம், ரத்தினகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
(படம் உள்ளது)
 

;