சென்னை, ஜூலை 16- தமிழ்நாடுவிவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதற்கு ஜுலை 14ந் தேதி முதல் தடைவிதித்திருந்தது. தமிழக அரசின் இந்த தடாலடியான நடவடிக்கைக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. தமிழ்நாடு முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பாக ஜுலை 17ந் தேதி (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், வியாழனன்று (16.7.2020) பிற்பகல் கூட்டுறவுத்துறையின் சார்பில் 16ந் தேதி முதல் வழக்கம் போல் நகைக்கடன் வழங்கலாம் என்று கூட்டுறவு வங்கி கிளை செயலாளர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளனர். நகைக்கடன் வழங்குவதற்கான தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டதால் 17ந் தேதி நடத்துவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடன் தள்ளுபடி, நிபந்தனைகள் இன்றி கடன் வழங்க வேண்டும், கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜுலை 17ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.