tamilnadu

img

அதானி நிறுவனத்துக்காக வண்டித்தடத்தில் மின்கம்பம் அமைக்க முயற்சி

எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல்

திருப்பூர், ஜன. 29 – திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்தில் கார்ப்பரேட் முதலாளி அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனத் திற்காக வண்டிப்பாதையில் மின் கம்பம் அமைக்க முயற்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குடிமங்கலம் காவலர்கள் அராஜகமான  முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்த கடவு ஊராட்சியில், வாட்ஸன் இன்ஃப்ரா பில்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெய ரில் அதானிக்குச் சொந்தமான சூரிய மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின்தக டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு  உற்பத்தியாகும் மின்சாரத்தை கொண்டு  செல்வதற்காக மின்பாதை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதில் ஆமந்தக்கடவு ஊராட்சிக்குள் 3 கிலோ மீட்டர் தூரம் விவசாயிகள் பயன்படுத் தக்கூடிய வண்டிப்பாதையாக இருக் கிறது. அந்த பாதையிலேயே மின் கம்பங்களை நடுவதற்கு அந்த நிறு வனத்தினர் முயற்சித்து வருகின்றனர்.  இதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமும், காவல் துறையும் உடந் தையாக உள்ளனர்.

வண்டிப்பாதையில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டால் விவசாயம் தொடர் பான பணிகளுக்குரிய போக்குவரத்து பாதிக்கும் என்பதுடன், மழைக்காலத் தில் தண்ணீர் செல்வதும் பாதிக்கப்படும் என உள்ளூர் விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதனன்று சம்பந்தப் பட்ட தனியார் நிறுவனத்தினர் விவசாயி களின் ஆட்சேபத்தை புறந்தள்ளிவிட்டு வண்டிப்பாதையில் மின் கம்பங்கள் நடுவதற்கு பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களுடன் வந்துள்ள னர். அவர்களுக்கு குடிமங்கலம் காவல் துறையினர் பாதுகாப்புக்கு வந்துள் ளனர். இந்நிலையில் தங்கள் வாழ்வாதா ரத்தைப் பாதிக்கும்படி வண்டிப்பாதை யில் அமைக்காமல், விதிமுறைப்படி பாதையைத் தவிர்த்துவிட்டு மின் கம்பங் களையும், மின்பாதையையும் மாற்றி  அமைக்க வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர். மின் கம்பம் அமைக்கும் பணிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இந்நிலையில் குடிமங்கலம் காவ லர்கள் வலுக்கட்டாயமாக விவசாயி களை அங்கிருந்து இழுத்துச் சென்று  அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் மகேஷ்குமார் என்ற விவசாயியின் காலில் நான்கு காவலர்கள் ஒன்றாக பூட்ஸ் காலால் ஏறி நின்று அராஜகமாக  தாக்கியுள்ளனர். இதில் மகேஷ்குமா ருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு  வேதனையில் கதறித்துடித்தார். காவல் துறையினர் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு  ஆதரவாக அராஜகமாக செயல்பட்ட தற்கு எதிர்ப்புத் தெரிவித்து கனகராஜ் என்ற விவசாயி தீக்குளிக்க முயற்சித் துள்ளார். அப்போது அங்கிருந்த மற்ற விவசாயிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். உள்ளூர் விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை ஏற்காமல், கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக நடந்து கொள்ளும் காவல் துறைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். காவல் துறையின் அத்துமீறிய இச்சம்பவம் காணொளியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தலையிட்டு உடுமலை கோட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோரிடம் இப்பிரச்சனை யைக் கொண்டு சென்ற நிலையில், காவல் துறையினரின் அத்துமீறல் நிறுத் தப்பட்டது. மேலும் வியாழனன்று முத்த ரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவது என் றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்

குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவு ஊராட்சியில் அதானியின் மின் நிலையத்திற்கு மின்கம்பம் அமைத்து மின்கம்பி இழுத்துச் செல்கின்றனர். அவை விவசாய நிலத்திற்கு செல்லும் பாதைக்கு இடையூறாக உள்ளது என்று கேட்ட விவசாயிகளை புதனன்று காலை குடிமங்கலம் காவல்துறையினர் அடாவடியாக அடித்து, இழுத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதில் ஒரு விவசாயியின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கதறி கொண்டுள்ளார். காவல்துறையே கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக விவசாயிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கையை பரிசீலிக்காமல் விவசாயிகளை அடக்கி ஒடுக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிப்பதுடன், விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றியக்குழுவும் போலீசாரின் அத்துமீறிய அராஜகத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

;