tamilnadu

img

‘நல்லாட்சி’ மதிப்பீடு: அறிவியலா? அரசியலா? - அ.அன்வர் உசேன்

‘நல்லாட்சி’ குறியீடு அட்டவணையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. புளகாங்கிதம் அடைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் உலகிலேயே எடப்பாடி அரசாங்கம் தான் சிறந்த ஆட்சி தருகிறது எனும் அளவிற்கு பேசுகின்றனர். கூட்டணி கட்சியான பா.ம.க. தலைவர் ராமதாசும் எடப்பாடி அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அரசங்கத்தின் ஊழல் மற்றும் திறமையின்மையால் கியா மோட்டார்ஸ் போன்ற பல நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன என கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் இன்று “கூட்டணி தர்மம்” அவரது சுருதியை மாற்றி அமைத்துள்ளது.

மறுபுறத்தில் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்ச னம் செய்துள்ளன. தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக சூழல்களை உற்று நோக்கும் எவரும் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்தான் வெளிப்படுத்துவர் எனில் மிகை அல்ல.

மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள விவரங்கள் படி தமிழகம் பெற்ற மதிப்பெண்களும் தரவரிசையும்:

 

                                                                              மதிப்பெண்                          தர வரிசை
                                                                                     (1க்கு)                                (18) பெரிய                                   

                                                                                                                              மாநிலங்களில்)

விவசாய வளர்ச்சி                                                   0.45                                            9       
வணிகம் மற்றும் 

தொழில் வளர்ச்சி                                                    0.86                                          14       

மனித வள மேம்பாடு                                             0.64                                           5       

பொது ஆரோக்கியம்                                             0.78                                            2       

பொது உள்கட்டுமானம்                                       0.74                                            1        

பொருளாதார நிர்வாகம்                                      0.58                                            5       

சமூக நலன் மற்றும் வளர்ச்சி                            0.49                                           7       
நீதித் துறை மற்றும் 

பொது பாதுகாப்பு                                                    0.56                                           1       

சுற்றுச் சூழல்                                                             0.58                                            3

 

ஒட்டு மொத்தமாக தமிழகம் முதல் இடத்தை பெற்றுள் ளது என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் எடப்பாடி அரசாங்கம் இந்த பெருமையை சொந்தம் கொண்டாட முடியுமா என்பது கேள்விக்குரியது. ஏனெனில் பல கணக்கீடுகள் 2016 மற்றும் 2017ம் ஆண்டின் விவ ரங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. அப்பொழுது ஒரு கட்டம் வரையில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார்; மற்றொரு கால கட்டத்தில் ஆட்சி பீடத்தில் யார் அமர்வது என்பதில் பெரும் குழப்பமும் உள்கட்சி பூசல்களும் முன் வந்தன. அத்தகைய சூழல்களில் எப்படி நல்லாட்சி சாத்தியம் எனும் கேள்வியை மிக எளிதில் புறம்தள்ள முடியாது.

தமிழகம் முதலிடம்  பிடித்துள்ள பிரிவுகள்

பொது உள்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது தமிழகம். இந்த பிரிவின் உட்கூறுகளாக குடிநீர் வசதி/மின்வசதி/கிராமங்கள் சாலை மற்றும் தகவல் மூலம் இணைப்பு/ சமையல் எரிவாயு வசதி கள்/ திறந்த வெளி கழிப்பிடங்கள் அகற்றுதல் ஆகியவை உள்ளன. 2019 கோடை காலத்தில் மாநிலம் முழுதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியதை எவராவது மறக்க இயலுமா? குறிப்பாக சென்னையின் துன்பங்கள் உலகம் முழுதும் எதிரொலித்தது. 2018ம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு தமிழ கத்தில் சுமார் 68% பேர் சுத்திகரிக்கப்படாத குடிநீரையே உபயோகிக்கின்றனர் என கூறுகிறது.

மின் பற்றாக்குறை கடந்த காலத்தில் தொழில்துறையை கடுமையாக பாதித்தது. மாநிலத்தில் குறிப்பிடத்தக்க மின் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வெளிச் சந்தை யில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் பெரிய ஊழல்கள் நடக்கின்றன என புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. உதய் திட்டத்தை எடப்பாடி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதால் மின்வாரியத்தின் விநியோக பிரிவு கடும் நட்டத்தை சந்திக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. தமிழக அரசாங்கத்தை நம்பி முதலீடு செய்யப்பட்ட காற்றாலைகள் நட்டம் காரணமாக மூடுவிழாக்களுக்கு திட்டமிட்டு வருகின்ற னர். தமிழக கிராமப்புறங்களில் கழிப்பிடம் இல்லாத வீடுகள் 37% எனவும் நகரங்களில் சுமார் 6% எனவும் தேசிய மாதிரி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

குடிநீர்/ மின்சாரம்/ கழிப்பறைகள் பற்றாக்குறை என இவ்வளவு குறைகள் இருந்தும் பொது உள்கட்டமைப்பு பிரிவில் தமிழகத்திற்கு முதல் இடத்தை மத்திய அரசாங்கம் அளித்துள்ளது. நீதித்துறை மற்றும் பொது பாதுகாப்பில் தமிழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த பிரிவில் நீதித்துறையின் செயல்பாடுகளும் காவல்துறையின் செயல்பாடுகளும் அடங்கிய ஐந்து உட்கூறுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி அரசாங்கத்தின் கீழ் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு/ எட்டுவழிச்சாலை/டாஸ்மாக்/மீத்தேன்/ஆகிய பல எதிர்ப்பு போராட்டங்களில் பொதுமக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. அரசு ஊழியர்கள், போக்கு வரத்து ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் மீதும் தாக்கு தல்கள் நடத்தப்பட்டன; வழக்குகள் போடப்பட்டன. சில சமயங்களில் நீதித்துறையும் போராடுபவர்களுக்கு எதிரான நிலை எடுத்தது. காவல்துறையில் காலிப்பணியிடங்களும், நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களும் ஏராளமாக நிரப் பப்படாமல் உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது எனவே இந்த பிரிவில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்தால் அது பெருமைக்குரியது அல்ல! 

பொது ஆரோக்கியத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பிரிவின் இரண்டு முக்கிய உட்கூறுகளாக சிசு மரணமும்(Infant mortality rate) பிரச விக்கும் தாய்மார்கள் மரணம் (maternal mortality rate) ஆகியவற்றை குறைப்பது என்பது தலா 0.30 என மொத்தம் 0.60 மதிப்பெண்கள் உள்ளன. இவை இரண்டிலும் தமிழகம் கேரளாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பல ஆண்டுகளாக உள்ளது. இதனை எடப்பாடி அரசாங்கத்தின் சாதனை என எடுத்துக் கொள்ள முடியாது. அதே சமயத்தில் ஏனைய உட்கூறுகளான ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் செவிலியர்கள் நியமனம் மற்றும் இவற்றை 24 மணி நேரமும் செயல்படுத்துவது ஆகிய வற்றில் தமிழகம் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது.  சுற்றுச் சூழல் பிரிவில் தமிழகம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. இந்த பிரிவில் இரண்டே உட்கூறுகள்தான் உள்ளன. 1. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல் திட்டம்(0.4 மதிப்பெண்). 2. வனப்பகுதிகளின் பரப்பளவில் மாற்றம் (0.6 மதிப்பெண்). தமிழகத்தில் 7 முதல் 10% அதி கரித்த வனப்பகுதியின் பரப்பளவு 2015ம் ஆண்டு 20.26% லிருந்து 2017ம் ஆண்டு 20.21% ஆக குறைந்துள்ளது. எனினும் தமிழகத்திற்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும்  தொழிலில் கடும் வீழ்ச்சி

விவசாய வளர்ச்சி விகிதம்/உணவுப் பயிர் உற்பத்தி/ தோட்டப் பயிர் உற்பத்தி/பால் உற்பத்தி/மாமிச உற்பத்தி/ பயிர் காப்பீடு என விவசாயப் பிரிவு ஆறு உட்கூறுகளை கொண்டுள் ளது. இதில் தமிழகம் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 0.45 மட்டுமே அதாவது பாதிக்கும் குறைவாகவே மதிப்பெண் கள் கிடைத்துள்ளன. ஹரியானா, உத்தரப்பிரதேசம், பாலை வனத்தை கொண்டுள்ள ராஜஸ்தான்,பீகார் ஆகிய மாநி லங்கள் தமிழகத்திற்கு முன்னே உள்ளன. சமீப காலம் வரை தமிழகம் விவசாயத்தில் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் இன்று மிகவும் பின் தங்கியுள்ளது கவலை அளிக்கும் ஒன்றாகும்.

தொழில் மற்றும் வணிகத்தில்தான் மிக அதிகமான சரிவு தமிழகம் கண்டுள்ளது. தமிழகம் மிகவும் பின் தங்கி 14வது இடத்தில் உள்ளது. ஆனால் இதில் நகை முரண் என்ன வெனில் தமிழகம் 0.86 அதாவது 86% மதிப்பெண்கள் பெற்றுள்ளது. எனினும் 14வது இடத்தில் கீழே உள்ளது. இந்த பிரிவில் 1) தொழில் தொடங்க உடனடி சுலபமான அனுமதி (Ease of doing business) 2) பெரிய தொழில்கள் உருவாதல் 3) நடுத்தர மற்றும் சிறு தொழில் வளர்ச்சி ஆகிய மூன்று உட்கூறுகள் உள்ளன. ஆனால் முதல் உட்கூறுக்கு 0.90 மதிப்பெண்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கூறுக்கு தலா வெறும் 0.05 மதிப்பெண்கள் மட்டுமே வடிவமைக் கப்பட்டுள்ளன.

தொழில் தொடங்குவதில் உடனடி சுலபமான தன்மை என்பதன் பொருள் என்ன? கார்ப்பரேட் பெரு நிறுவனங்க ளுக்கு இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க விரைவா கவும் உடனடியாகவும் அனுமதி வழங்குவது என்பதே இதன் பொருள். தமது நிலம் அல்லது வாழ்வாதாரம் பாதிக் கப்படும் என மக்கள் எதிர்த்தால் கடும் அடக்குமுறை ஏவப்பட வேண்டும். இதுதான் எட்டு வழி சாலையிலும் மீத்தேன் போராட்டங்களிலும் தமிழகம் கண்கூடாக பார்த்தது. இந்த உட் கூறுக்கு ஏன் 0.9 அதாவது 90% மதிப்பெண் அளிக்கப்பட வேண்டும்? தொழில் வளர்ச்சிக்கு ஏன் வெறும் 0.1 அதாவது 10% மட்டுமே தரப்பட வேண்டும்? வரைவு அறிக்கை தயா ரிக்கும் பொழுது  இந்த உட்கூறுக்கு 0.4 மட்டுமே மதிப்பெண் தரப்பட்டிருந்தது. ஆனால் இறுதி அறிக்கையில் அது 0.9 ஆக உயர்த்தப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு நிலையை இது வெளிப்படுத்துகிறது.

இதே கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை காரணமாகவே தமிழகம் 0.86 மதிப்பெண்கள் பெற்றது. தொழில் வளர்ச்சி யில் தமிழகம் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை. தங்களிடம் லஞ்சம் கேட்டதாகவும் அதனால்தான் தாங்கள் தமிழகத்திலிருந்து வெளியேறுகிறோம் எனவும் கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான ‘கியா மோட்டார்ஸ்’ 2017ம் ஆண்டு பகிரங்கமாக குற்றம் சாட்டியது. கார்ப்பரேட்டுகளுக்கு கட்டற்ற அனுமதி வழங்கும் அதே நேரத்தில் தமது பைகளை நிரப்பிடவும் ஆள்வோர் முயற்சித்துள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டு காரணமாக ஐம்பதாயிரம் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டு ஐந்து லட்சம் பேர் வேலை இழந்தனர் என மாநில அரசாங்கமே சட்டமன்றத்தில் கூறியது. எனினும் 0.86 மதிப்பெண்கள் பெற்றாலும் தமிழகம் 14வது இடத்திற்கு சரிந்தது. ஏனெனில் தமிழகத்தைவிட கூடுதல் கார்ப்பரேட் ஆதரவு நிலை எடுக்க பா.ஜ.க. மற்றும் மாநில கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் தயாராக உள்ளன. அதே சமயத்தில் இந்த பிரிவில் தமிழகம் வாங்கிய 0.86 மதிப்பெண்கள்தான் முதல் இடத்தை பிடிக்க தமிழகத்திற்கு உதவியது. மத்திய அரசாங்கம் தனது வரைவுத் திட்டத்தில் குறிப்பிட்டது போல தொழில் தொடங்குவதில் எளிமைத் தன் மைக்கு 0.4, பெரிய தொழில் வளர்ச்சிக்கு0.3, சிறு குறு தொழி லுக்கு 0.3 என மதிப்பெண்கள் அளித்திருக்க வேண்டும். அது தான் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின் தொழில் வளர்ச்சி குறித்த சரியான மதிப்பீடை வெளிப்படுத்தியிருக்கும்.

சமூக நீதியில் சரிவு

சமூக நலன் மற்றும் வளர்ச்சியில் தமிழகம் 7வது இடத்திற்கு கீழிறங்கியது மட்டுமல்ல; மதிப்பெண்கள் 0.49 அதாவது பாதிக்கும் குறைவாகவே பெற்றுள்ளது. இந்த பிரிவில்தான் சமூக நீதியை நிலை நிறுத்தும் பட்டியலின/பிற்படுத்தப்பட்ட/சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்த மூன்று உட்கூறுகள் உள்ளன. மேலும் குழந்தை பிறப்பில் பாலின விகிதம்/மகாத்மா காந்தி கிராமப்புற வேலை திட்டம்/ஒட்டு மோத்த  மாநி லத்தின் வேலையின்மை/மருத்துவ காப்பீடு/ வீட்டு வசதி என மொத்தம் 8 உட்பிரிவுகள் உள்ளன.  சமூக நீதி உள்ளடக்கிய இந்த அம்சத்தில் கூட மத்திய பிரதேசம்/ராஜஸ்தான்/ஒடிசா ஆகிய மாநிலங்கள் தமிழகத்தைவிட முன்னிலையில் உள்ளன. மாநிலத்தின் பொருளாதார மேலாண்மையிலும் தமிழகம் பின்தங்கி 5வது இடத்தை பிடித்துள்ளது. தனிநபர் சராசரி பொருள் உற்பத்தி/ வரிவருவாய்/ நிதி பற்றாக்குறை/ கடன் ஆகிய உட்கூறுகள் இந்த பிரிவில் உள்ளன. தமிழகத்தின் கடன் 3.97 லட்சம் கோடியாக உள்ளது. வருவாயைவிட செலவு அதிகமாக உள்ளது. பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் தமிழகம் பின் தங்கியே உள்ளது.

சுருக்கமாக கூறினால் சில சமூக குறியீடுகளில் கேரளா வுக்கு அடுத்தபடியாக தமிழகம் முன்னிலையில் உள்ளது. ஆனால் அது பல ஆண்டுகளாக தொடரும் ஒன்றுதான்! அது எடப்பாடி அரசாங்கத்தின் சாதனை என கூற இயலாது. அதே சமயத்தில் விவசாயம்/தொழில்/சமூக நீதி/பொருளாதார நிர்வாகம் ஆகிய முக்கிய பிரிவுகளில் தமிழகம் சரிவு கண்டுள்ளது என்பது இந்த குறியீடுகளை ஆழமாக ஆய்வு செய்தால் விளங்கும். இதற்கு பிறகும் தமிழகம் முதல் இடத்தை பிடிக்கிறது எனில் ஒன்று மத்திய அரசாங்கம் எடப்பாடி அரசாங்கத்திற்கு செயற்கையாக இந்த நிலையை உருவாக்கியிருக்க வேண்டும்; அல்லது இந்த குறியீடுகளை கணக்கீடு செய்து மதிப்பீடு செய்யும் முறை மிகவும் தவறா னதாக இருக்க வேண்டும். எனவே எதிர்கட்சிகளின் விமர்ச னம் நியாயமற்றது என புறம்தள்ள முடியாது.

(ஆதாரங்கள்: மத்திய நிர்வாக சீர்திருத்த அமைச்சகத்தின் இணையதளம்/ தமிழ் இந்து- 28.12.2019/ இந்துஸ்தான் 
டைம்ஸ்- 03.05.2017/ 76வது தேசிய மாதிரி ஆய்வு/ தமிழக அரசாங்கத்தின் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் இணையதளம்/ஆங்கில இந்து 14.06.2019)


 

 

;