tamilnadu

img

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்தது என்ன?

2017 டிசம்பர் 6 அன்று தி வயர் இணைய இதழ் நடத்திய கலந்துரையாடலின் போது,25 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்டவேளையில், அங்கே செய்திகளைச் சேகரித்த தங்களுடைய அனுபவங்களை சில மூத்த பத்திரிக்கையாளர்கள் நினைவு கூர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசியவர்களில் பெரும்பாலானோர், ஒரு நாள் முன்பாக, அதாவது 1992ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்றே, மசூதியை இடிப்பதற்கான ஏற்பாடுகள் இருந்தது தங்களுக்குத் தெளிவாகத்தெரிந்தது என்று தெரிவித்தனர். மசூதியை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற  திட்டத்துடனே ஆயிரக்கணக்கில் அன்றைய தினம் அயோத்தியில் சங்பரிவாரத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் கூடியிருந்தனர் என்றும் அந்தப் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும்என்ற சங்பரிவாரின் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும்வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ராம ஜென்மபூமி இயக்கத்தின் உண்மையான நோக்கம் மசூதியை இடிப்பதாகவே இருந்தது என்பது, அந்த நிகழ்வின் நேரடி சாட்சியங்களாக இந்த கலந்துரையாடலில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள்  அனைவருடைய  பேச்சிலும் தெரிந்தது.மசூதியை இடிப்பது என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதியாகஇருந்ததா என்பது தற்போது நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. மூத்த பாஜக தலைவர்கள்எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷிஉள்ளிட்ட பலர் மீதும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட நாளில் பெருமளவிலான வன்முறைகளுக்கு மத்தியில் இருந்து செய்திகளைச்சேகரித்த போது, தங்களுக்கு இருந்த பெரும் அபாயங்களைப் பற்றி சீமா சிஸ்தி (துணை ஆசிரியர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்) மார்க் டல்லி (பிபிசி முன்னாள் தலைமை ஆசிரியர்), பிரவீன் ஜெயின் (இணை ஆசிரியர் (புகைப்படம்) தி இந்தியன் எக்ஸ்பிரஸ்), ருசிரா குப்தா, சயீத் நக்வி (தனிப்பட்ட பத்திரிகையாளர்கள்)  உள்ளிட்ட பலரும் பேசினர்.மசூதியை இடிக்கும் புகைப்படங்கள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் இருப்பதற்காக சங்பரிவாரத்தைச் சேர்ந்த  கரசேவகர்கள் அங்கே இருந்த நிருபர்கள் மற்றும்புகைப்பட பத்திரிகையாளர்களை எவ்வாறு திட்டமிட்டுத் தாக்கினார்கள் என்பது குறித்தும் அந்த நிகழ்ச்சியில்   பேசினர். மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பாக அங்கே இருந்த பத்திரிகையாளர்கள், பெண்கள் மீது வன்முறைகள் நடத்தப்படுவது குறித்து அத்வானி மற்றும் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களிடம் தொடர்ச்சியாக தாங்கள் எச்சரித்து வந்த போதும், அந்த தலைவர்கள்  அதை அலட்சியம் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

எங்கே போனது அரசாங்கம்!
“... கரசேவகர்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பகுதிக்குள் நுழைந்து பத்திரிகையாளர்களைத் தாக்கி, அவர்களிடமிருந்த கேமராக்களை உடைத்தார்கள்... திடீரென்று பெரிய கும்பல் ஒன்று மசூதியை நோக்கி நகர ஆரம்பித்ததை நான் கண்டேன். காவல்துறை தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் காட்டப்படவில்லை... அங்கிருந்து காவல்துறையினர் கிளம்பிச் சென்றதைக் கண்டேன். அயோத்திக்குச் செல்கின்ற பிரதான சாலை எரிந்து கொண்டிருக்கும் கார்களைக்கொண்டு அடைக்கப்பட்டிருந்தது.... நான் மசூதிக்குள் நுழைந்தபோது, கரசேவகர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். சிலர் என்னைத் தாக்கவும் முயன்றனர். அங்கே இருந்த சிலர் ‘பிபிசி உலகப் புகழ் பெற்ற தொலைக்காட்சி, அதனைத் தாக்குவது நமக்கு நல்லதல்ல’என்றுஅவர்களிடம் வாதிட்டனர்” என்று சொன்ன மார்க் டல்லி, அதற்குப் பிறகு இந்தியப் பத்திரிகையாளர்கள் சிலரோடுசேர்த்து என்னையும் அங்கே இருந்த தர்மசாலாவிற்குள் அவர்கள் பூட்டி வைத்து விட்டனர் என்றார். அருகே இருந்த கோவிலின் மடத் தலைவர் தன்னை இறுதியில் விடுவித்ததாக அவர் கூறினார். “அன்றைய அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தை முழுமையாக இழந்து விட்டது என்பது அவமானகரமானதாக இருந்தது. உண்மையில், அன்றைய தினம் அரசாங்கம் என்ற ஒன்று இருந்ததாகவே தெரியவில்லை” என்று கூறிய அவர், அங்கே பெரும் எண்ணிக்கையில் இருந்த மத்திய படை வீரர்கள் அந்தக் கும்பலுக்கு எதிராக சிறிய அளவில்கூடச் செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டார். 

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று அங்கே ராமர் கோவில் குறித்து எழுந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல், முஸ்லிம்களுக்கு எதிரான அநாகரிகமான முழக்கங்கள் மட்டுமே எழுப்பப்பட்டன. அன்றைய தினம் அயோத்தியில் நடந்தவை, இந்திய அரசியலில் அவை ஏற்படுத்தியிருக்கும் தொடர் தாக்கம் ஆகியவை எவ்வாறாக இருந்த போதிலும், இந்திய ஆன்மாவுடன் முழுமையாகப் பின்னிப்பிணைந்து இணைந்திருக்கும் மதச்சார்பின்மையின் மீது தான் இன்னும் முழுநம்பிக்கை வைத்திருப்பதாகவும் டல்லி கூறினார். 

அயோத்தியில் அன்றைய தினம் ராமர் கோவில் பிரச்சனைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்று கூறிய நக்வி, “வட்டமாக அங்கே அமர்ந்திருந்த இளம் பெண்கள், பாகிஸ்தானில் ஏற்றப்பட்டிருக்கும் கொடியை இது இல்லாமல் செய்து விடும் என்று பாடிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். சில இளைஞர்கள் பாகிஸ்தான் மீது குண்டு விழப் போகிறது, நாம்இனி ராவல்பிண்டிக்குச் செல்ல வேண்டும், இனி லாகூருக்குச் செல்ல வேண்டும் என்று உரக்கக் கத்திக் கொண்டிருந்தனர். அங்கே ராமர் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லப்படவில்லை, அவர்கள் கூறியது அனைத்தும்பாகிஸ்தானைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. அங்கிருந்தவர்களிடம் மொகலாயர்களைத் தோற்கடித்ததான, நரேந்திர மோடி சொல்வதைப் போல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த வெளிநாட்டவர்களின் ஆட்சியைத் தோற்கடித்ததான உணர்வே முழுமையாக இருந்தது.” என்றார் நக்வி. இவர், ‘வேர்ல்டு ரிப்போர்ட்’ என்ற பத்திரிகைக்காக செய்தி சேகரிக்க அங்கு  சென்றிருந்த பத்திரிகையாளர்

.மசூதி இடிக்கப்பட்ட செயல் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு விஷயங்களுக்கான காரணமாக மாறிப் போனதாக கூறிய சீமா சிஸ்தி, “அன்று அங்கே நடந்த விஷயங்களில் தெளிவான வழிமுறை இருந்தது. நிருபர்களுடன் சண்டையிட்டு எப்படியாவது அந்த நிகழ்வு குறித்த செய்திகளை அவர்கள் சேகரித்து வெளியிடுவதைத் தடுத்து நிறுத்துவதை உறுதிப்படுத்துவதே அங்கிருந்தவர்களின் முக்கிய எண்ணமாக இருந்தது. அப்போதிருந்த நிலைமைக்கும், இப்போதுள்ள நிலைமைக்குமிடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாக அதுதான் இருக்கிறது. இப்போது 2017இல் அவர்கள் மசூதியை இடிக்க வேண்டுமென்றால், அவ்வாறு நிருபர்களைத் தாக்குவதற்கான தேவை அவர்களுக்குத் தேவைப்படப் போவதில்லை. ஆனால் அந்தச் சமயத்தில், செய்திகள் எதுவும் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ள வேண்டியிருந்தது” என்றார்.  

“அயோத்தி இந்தியாவின் மிக அழகிய நகரங்களில் ஒன்றாகும். கோவிலைக் கட்டுவோம் என்ற அவர்களுடைய முழக்கம், சீதாவைப் பற்றியோ அல்லது அயோத்திபிரதிபலிக்கின்ற பல்வேறு தொன்மங்களின் சங்கமத்தைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட பேசாமல், ராமரைப் பற்றி மட்டுமே பேசுவதாக இருந்தது.  கோவில் கட்டுமானத்தைப் பற்றியே நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். மசூதி இடிக்கப்படுவதைப் பற்றி நாங்கள் அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை... என்னைப் பொறுத்தவரை, மசூதியை இடித்துத் தள்ளிய செயல் மக்களின் குடியுரிமை குறித்த வரையறைகளைச் சீரழித்து விட்டதாகவே இருந்தது” என்றும் சிஸ்தி கூறினார். 

மசூதியை இடிக்க ஒத்திகை 
மசூதி இடிக்கப்படுவதற்கு முந்தைய நாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை வெளியிட்ட புகைப்பட பத்திரிகையாளர் பிரவின் ஜெயின், தான் ஒருவன் மட்டுமே அந்தஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவராக இருந்ததாகத் தெரிவித்தார். “அந்த ஒத்திகை நிகழ்வில், பி.எல்.சர்மா பிரேம் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் உதவியுடன்என்னால் கலந்து கொள்ள முடிந்தது. விஎச்பி அடையாளஅட்டை  ஒன்று எனக்கு வழங்கப்பட்டது. பல்வேறு இயந்திரங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு மசூதியை இடிப்பதற்கான பயிற்சி அங்கே கூடியிருந்தவர்களுக்கு முழுமையாக அளிக்கப்பட்டது. கயிற்றைக் கொண்டு பல்வேறு ஆயுதங்களுடன் அங்கே இருந்த குவிமாட வடிவ அமைப்புகொண்ட பகுதியின் மீது ஏறுவதற்கான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டது. மசூதியை இடித்து வீழ்த்துவதற்கு இந்த முறையைத்தான் நாங்கள் பயன்படுத்த இருக்கிறோம் என்று என்னிடம் பிரேம் கூறியதை நான் பின்னர் ஊடகங்களில் இருந்தவர்களிடம் தெரிவித்த போது, யாருமே அதை நம்பவில்லை” என்று ஜெயின் கூறினார்.

“இந்துத்துவா தீவிரவாதிகள், குறிப்பாக புகைப்படப்பத்திரிகையாளர்களையே குறிவைத்தனர். எங்களிடமிருந்த கேமராக்களை அவர்கள் பறித்து, அவற்றை கட்டிடங்களின் உச்சியில் இருந்து கீழே தூக்கி எறிந்தார்கள். நானும்அவர்களால் தாக்கப்பட்டேன். அங்கே இருந்த அத்வானியைச் சந்தித்து என்னைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். அங்கேஇருந்த தலைவர்கள் அனைவரும் மசூதி இடிக்கப்படுவதையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியுமாறு அங்கிருந்த மக்களைக் கேட்டுக்கொண்டனர் என்றாலும் அந்தக் கும்பலிலிருந்து சிரிப்பையே அவர்களுடைய அந்தவார்த்தைகளால் வரவழைக்க முடிந்தது” என்று ஜெயின் மேலும் கூறினார். 

பாலியல் துன்புறுத்தலும்... 
தான் பாலியல் ரீதியாக அங்கே கூடியிருந்த கும்பலால் துன்புறுத்தப்பட்டதாக பத்திரிகையாளர் ருசிரா குப்தா கூறினார். “ஆக்கிரமிப்பைத் தூண்டக்கூடிய விஷத்தால் தோய்க்கப்பட்ட ‘ஆண்மை’ நிறைந்த முழக்கங்கள் அங்கேஎழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. சாத்வி ரிதம்பரா, உமாபாரதி ஆகியோர் பல நேரங்களில் அங்கே இருந்தஆண்களைப் பார்த்து, நீங்கள் எல்லாம் வளையல்களையா அணிந்து இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நான் மசூதிக்குள்ளே செல்வதற்குமுடிவு செய்தேன். மசூதி முழுக்க இந்துத்துவா தீவிரவாதிகளால் நிரம்பியிருந்தது. அவர்களை முந்திக் கொண்டு செல்வதற்கு நான் முயன்றேன். என்னைப் பார்த்த யாரோஒருவர் திடீரென்று முசல்மான் என்று உரக்கக் கத்தினார். உடனடியாக என்னுடைய கழுத்தை சில கைகள் நெருக்கின.சில விநாடி நேரத்தில் நான் இறந்து விடப்போவதாகவே எண்ணினேன்.  என் உடலின் மீது அவர்களுடைய கைகள் ஊர்வதை உணர்ந்தேன். என்னுடைய மார்பகங்களைக் கசக்க அவர்கள் முயன்றார்கள். என்னுடைய இடுப்பையும் அவர்கள் பலவந்தமாகப் பிடித்து இழுத்தார்கள். அங்கே நிலைமை மிக மோசமாக இருந்தது. இடைவிடாமல் நான் ஒரு இந்து என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தேன்” என்று தனக்கு நேர்ந்த துயர அனுபவங்களை குப்தா விளக்கினார். 

“அதற்கு முந்தைய நாள் நான் நேர்காணல் செய்திருந்தஒருவர் என்னைக் காப்பாற்றி, நான் அத்வானி இருந்த இடத்திற்குச் செல்வதற்கு உதவினார். நான் அங்கே சென்றடைந்தபோது, அத்வானி தன்னிடம் இருந்த பைனாகுலர் மூலமாக ஏதோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். தலைவிரி கோலமாக அங்கே சென்ற நான் அவரிடம், பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு அங்கிருப்பவர்களைக் கேட்டுக்கொள்ளுமாறு கூறினேன். அதற்கு அத்வானி, உங்களுக்கு என்ன நடந்தது என்பதை மறந்து விடுங்கள்; இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்பதைப் பாருங்கள். நீங்கள் இந்த இனிப்பை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவருடைய பாதுகாவலர்களில் ஒருவர் தான் வைத்திருந்த இனிப்பை என்னிடம் வழங்கினார். அந்த பைனாகுலரை அத்வானி என்னிடம் தந்தார். நான் இப்போது எதையும் பார்க்க விரும்பவில்லை என்று அவரிடம் சொன்ன போது, இழப்பீடு பெறுவதற்காக தங்கள் சொந்த வீடுகளுக்கே முஸ்லிம்கள் தீ வைத்திருப்பதைப் பாருங்கள் என்றார். மசூதி இடிக்கப்பட்ட போது அதற்கு முற்றிலும் உடந்தையாக, பாஜகவின் உயர்மட்டத் தலைவரான அவர் அங்கேயே இருந்தார்” என்று குப்தா சுட்டிக் காட்டினார்.

நன்றி: தி வயர் இணைய இதழ் 

லிங்க்  : https://thewire.in/202549/babri-masjid-demolition-happened-reporters-look-back/

தமிழில்: தா.சந்திரகுரு

;