tamilnadu

img

தேர்தல் பத்திரங்கள் மூலம் பலனடைந்த அரசியல் கட்சிகள் யாவை?  2020 அக்டோபர் வரை காத்திருக்க வேண்டியதுதானா? -பரத் கஞ்சர்லா

2017-18  பட்ஜெட்டின் போது  அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் என்கிற திட்டத்தை  2018 ஜனவரி 02 அன்று  மத்திய  அரசு   நடைமுறைப்படுத்தியது. கணக்கில் காட்டப்படாத பணம் அரசியல் அமைப்பிற்குள் பாய்வதைக் கட்டுப்படுத்துவதும், நிதி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுமே தேர்தல் பத்திரத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய  காரணங்களாக கூறப்பட்டன.

தேர்தல் பத்திரங்கள் குறித்து விளக்குகின்ற கட்டுரையை இதற்கு முன்பே ஃபேக்ட்லி வெளியிட்டுள்ளது. இந்த பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆண்டு காலத்தில், வெளிப்படைத்தன்மையைக்  கொண்டு வருவதில் இந்த தேர்தல்  பத்திரங்களின்  எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பது குறித்தும்,  இந்த திட்டத்தின் நோக்கத்தை  தவறாகப்  பயன்படுத்தி அரசியல் அமைப்பிற்குள் கணக்கில் காட்டப்படாத பணத்தை கொண்டு வருவது குறித்தும் பல விவாதங்களும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் நடைபெற்றிருக்கின்றன. விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலைமையில், இந்த திட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து தேர்தல் பத்திரங்கள்  தொடர்பாக உள்ள தரவுகளின் விரிவான பகுப்பாய்வு  இங்கே தரப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஃபேக்ட்லி தகவல்களைப் பெற்றுள்ளது. பின்வரும் பகுப்பாய்வு பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து (எஸ்பிஐ) பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலே செய்யப்பட்டுள்ளது.

2019  ஏப்ரலில்  மட்டும் மிகப் பெரிய தொகைக்கு  தேர்தல்  பத்திரங்கள் விற்கப்பட்டன

2019  மார்ச் 01 முதல் இன்றுவரை, 12 கட்டங்களாக பல்வேறு நகரங்களில்  உள்ள எஸ்பிஐயின்  பல கிளைகளில்  தேர்தல் பத்திரங்களை  வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முறையே 15 மற்றும்  20 நாட்கள்  என்று மிக நீண்ட காலத்திற்கு 8ஆவது மற்றும் 9ஆவது கட்டங்கள்  நடைபெற்றன.

2019 ஏப்ரல் 01 முதல் 20 வரையிலான  9ஆவது கட்டத்தில்தான் மிக அதிக அளவிற்கு, அதாவது மொத்தம் 2256.4 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள்  விற்கப்பட்டன. இதற்கு அடுத்து அதிகபட்ச தொகையான 1365.7 கோடி மதிப்பிலான பத்திரங்கள் அதற்கு முந்தைய கட்டத்தில்,  அதாவது 2019 மார்ச் 01 முதல் 15  வரையில் நடைபெற்ற 8ஆவது கட்டத்தின் போது விற்கப்பட்டன.

 

கட்டம்

நாட்கள்

கால அளவு (நாட்கள்)

கிளைகளின் எண்ணிக்கை

ஒன்று

2018  மார்ச் 01 முதல் 09 வரை

09

04

இரண்டு

2018  ஏப்ரல் 02 முதல் 10 வரை

09

11

மூன்று

2018  மே 01 முதல் 10 வரை

10

11

நான்கு

2018  ஜுலை 02 முதல் 11 வரை

10

11

ஐந்து

2018  அக்டோபர் 01 முதல் 10 வரை

10

29

ஆறு

2018  நவம்பர் 01 முதல் 10 வரை

10

29

ஏழு

2019 ஜனவரி 01 முதல் 10 வரை

10

29

எட்டு

2019  மார்ச் 01 முதல் 15 வரை

15

29

ஒன்பது

2019   ஏப்ரல் 01 முதல் 20 வரை

20

29

பத்து

2019  மே 06 முதல் 10 வரை

05

29

பதினொன்று

2019  ஜுலை 01 முதல் 10 வரை

10

29

பனிரெண்டு

2019  அக்டோபர் 01 முதல் 10 வரை

10

29

2019 மே 06 முதல் 10க்கு வரையிலான மிகக் குறுகிய 10ஆவது கட்டத்தில், அதாவது 5 நாட்களில்  மட்டுமே, 822. 25 கோடி ரூபாய் என்ற அளவில் மூன்றாவது மிகப் பெரிய தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாக உள்ளது. இந்த  மூன்று கட்டங்களுமே 2019 மக்களவைத் தேர்தல் காலத்தில் நடந்தவையாக இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுத் தேர்தலின் போது நடந்த இந்த மூன்று கட்டங்களில் மட்டும் மொத்தம் 4,444.32 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மொத்த மதிப்பின் அடிப்படையில் 73% தேர்தல் பத்திரங்கள் இந்த மூன்று கட்டங்களில்  மட்டும் வாங்கப்பட்டிருக்கின்றன.

2019 - 20 நிதியாண்டில் மட்டும் 55% விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள்

நடப்பு 2019-20 நிதியாண்டில் இதுவரை மொத்தம் 3355.93 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.  முந்தைய நிதியாண்டில்  விற்கப்பட்ட பத்திரங்களின் மொத்த தொகை 2550.78 கோடி ரூபாயாக இருந்தது. 2017-18 நிதியாண்டில் 2018 மார்ச் மாதம்  முதற்கட்டமாக நடைபெற்ற விற்பனையில் 220  கோடி ரூபாய் மதிப்புள்ள  தேர்தல் பத்திரங்கள் மட்டுமே விற்பனையானதாகப் பதிவாகி உள்ளது.

வாங்கப்பட்ட பத்திரங்களில் 99.7%  1 கோடி மற்றும் 10 லட்சம் மதிப்பிலானவை

ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி ரூபாய் என்ற அளவுகளில் தேர்தல்  பத்திரங்கள் கிடைக்கின்றன. 2019 அக்டோபர் வரையிலும், மொத்தம் 12313 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் 5624 பத்திரங்கள் 1 கோடி ரூபாய் என்ற மிக உயர்மதிப்பிலானவை,  அடுத்து மிக  உயர்ந்த  10  லட்சம் ரூபாய் மதிப்பில் 4877 பத்திரங்களும், 1 லட்சம் மதிப்பில் 1695 பத்திரங்களும் விற்கப்பட்டுள்ளன. 1000, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில்  முறையே 47  மற்றும் 70 தேர்தல் பத்திரங்கள் மட்டுமே. விற்கப்பட்டிருக்கின்றன.

மொத்த  தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கையில் 1 கோடி ரூபாய் உயர் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் 45.68% ஆக இருக்கும்போது, அவற்றின்  மதிப்போ  மொத்த  மதிப்பில் 91.76% ஆக இருக்கிறது. மற்ற பிரிவு பத்திரங்களின் மதிப்புடன்  ஒப்பிடும்போது  இதன் மதிப்பு மிக அதிகமாக உள்ளது. 10 லட்சம் ரூபாய் பத்திரங்களின் மதிப்பு 7.95% ஆகவும், 1 லட்சம் ரூபாய் பத்திரங்களின் மதிப்பு 0.27%  ஆகவும் இருக்கின்றன. மொத்த மதிப்பில் குறைந்த தொகையிலான பத்திரங்களின் மதிப்பு மிகமிகக் குறைவாகவே உள்ளது. அதிக  பணமதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டிருப்பது, சில விதிவிலக்குகள் இருக்கலாம் என்றாலும், தனிநபர்களைக் காட்டிலும்  பெருநிறுவனங்களால்  அந்த பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதையே குறிப்பிட்டு காட்டுவதாக இருக்கிறது.

பெரும்பாலான பத்திரங்கள் மும்பையிலிருந்தே வாங்கப்பட்டுள்ளன

இந்தியாவில் 29 நகரங்களில் பரவியிருக்கும் எஸ்பிஐ கிளைகள் மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன. மும்பையில் உள்ள  எஸ்பிஐ கிளை அதிக அளவில் 1879.96 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு அடுத்ததாக கொல்கத்தாவில் 1440.33 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக தேசிய தலைநகரான  புதுடெல்லியில் 918.58 கோடி ரூபாய் அளவிற்கு பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.

வாங்கிய பத்திரங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, கொல்கத்தா 3478 தேர்தல் பத்திரங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து மும்பையில்  2899 பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.  தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கையில், கடந்த 18 மாதங்களுக்குள் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ள ஹைதராபாத், புவனேஷ்வர்  நகரங்கள்  நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.

புதுடெல்லியில் மட்டுமே கிட்டத்தட்ட  80.5%  தேர்தல்  பத்திரங்கள்  மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன

தேர்தல் பத்திரங்களை வாங்குவது ஒரு பக்கம் என்றால், அவற்றை மீட்டுக்கொள்வது என்பது அடுத்த பக்கமாக உள்ளது. தோராயமாக 6128.72  கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 99.67%  அதாவது  சுமார்  6108.47  கோடி  ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் அரசியல்  கட்சிகளால்  மீட்கப்பட்டுள்ளன.

பத்திரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 12313 தேர்தல் பத்திரங்களில் 12173 பத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.  தேர்தல் பத்திரத்தை 15 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அந்த தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு (பி.எம்.என்.ஆர்.எஃப்) மாற்றப்பட்டு விடும்.  அவ்வாறு இதுவரை மீட்கப்படாத பத்திரங்களின் மூலம் சுமார் 20.25 கோடி ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  அதில் ஏறக்குறைய  பாதி அதாவது 10 கோடி  ரூபாய் மூன்றாவது காலகட்டத்தில் (2018 மே) வாங்கிய பத்திரங்களுடன் தொடர்புடையது. மீட்டெடுக்கப்படாத 140 பத்திரங்களில் 74  பத்திரங்கள் நான்காவது கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டவை.

அதிக எண்ணிக்கையிலான தேர்தல் பத்திரங்கள் மும்பை. கொல்கத்தா ஆகிய நகரங்களில் வாங்கப்பட்டிருந்தாலும், வாங்கப்பட்ட பத்திரங்களில் மிகப்பெரிய பங்கை மீட்டெடுத்த நகரம் புதுடெல்லி ஆகும். அங்கே மீட்டெடுத்துக் கொள்ளப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பு 4917.51 கோடி ரூபாய் ஆகும். இது மொத்தத் தொகையில்  80.5% ஆகும்.  மீட்கப்பட்ட 12313 பத்திரங்களில்  புதுடெல்லியில்  மட்டும் 8903 பத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1255 பத்திரங்களில் இருந்து 512.3 கோடி ரூபாய் அளவிற்கு புதுடெல்லிக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக அதிகமான தேர்தல் பத்திரங்கள்  ஹைதராபாத்தில் மீட்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து புவனேஷ்வரில் 484 பத்திரங்களில் இருந்து 236.5 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மும்பை  மற்றும்  கொல்கத்தாவில் மீட்டெடுக்கப்பட்ட பத்திரங்களின்  மதிப்பு  புவனேஷ்வரை விட குறைவாக இருந்தாலும், அந்த பத்திரங்களின் எண்ணிக்கை முறையே 553, 713  என்று புவனேஷ்வரை விட அதிகமாகவே  உள்ளது.

இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்களின்படி,  இந்த பத்திரங்களை மீட்டுக் கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியும் எஸ்பிஐயில் ஒன்றுக்கு மேற்பட்ட  நடப்பு கணக்கை வைத்திருக்க முடியாது. எனவே, தேசியக் கட்சிகள் டெல்லியிலும், மாநிலக் கட்சிகள்  அந்தந்த  மாநிலத்  தலைநகரங்களிலும் நடப்புக் கணக்கை  பராமரிப்பதே வசதியாக இருக்கும் என்பதால், இந்த பத்திரங்களின் மூலம் அதிக பலனைப் பெற்றிருக்கும் பயனாளிகள்  தேசிய கட்சிகள் என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படுகின்ற தணிக்கை அறிக்கையே, தேர்தல்  பத்திரங்களின் மூலம் பலனடைந்த பயனாளிகள் பற்றிய தகவல்களுக்கான  ஒரே ஆதாரமாக உள்ளது

பத்திரங்களை மீட்பது தொடர்பாக எஸ்பிஐயிடமிருந்து பெறப்பட்ட இந்த தகவல்கள் மீட்டெடுக்கப்பட்ட பத்திரங்களின் மதிப்பு  மற்றும் அவை மீட்டெடுக்கப்பட்ட நகரம் பற்றிய  தரவுகளை மட்டுமே வழங்குகின்றன. ஆனால் அரசியல் கட்சிகள் அல்லது  இந்த பத்திரங்களின் பயனாளிகள் பற்றிய  தகவல்களை  அவை நமக்கு வழங்குவதில்லை.  

ஒரு அரசியல் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கின்ற வருடாந்திர தணிக்கை அறிக்கை மட்டுமே அந்த கட்சியால் மீட்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் அளவைக் கண்டறிவதற்கான ஒரே தகவல் ஆதாரமாக இருக்கிறது. முந்தைய  நிதியாண்டிற்கான வருடாந்திர தணிக்கை அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட  வேண்டும். இன்றைய நிலவரப்படி, அரசியல் கட்சிகளில் பாதிக்கும் மேற்பட்டவை 2018-19 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தணிக்கை அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. பாஜக, காங்கிரஸ் என்று  இரண்டு  பெரிய  தேசியக் கட்சிகளும்  2018-19 ஆம் ஆண்டிற்கான  தணிக்கை அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

இந்த  பத்திரங்களினால் பயனடைவது யார்?

தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் ஒரே வங்கிக் கணக்கு மூலமாக மட்டுமே மீட்டெடுக்க வேண்டும் என்பதால், பத்திரங்கள் மீட்கப்பட்ட நகரத்துடன் அரசியல் கட்சிக்கு உள்ள தொடர்பை முன்னர் குறிப்பிட்டபடி  ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதிக அளவு பத்திரங்களை மீட்டெடுத்த நகரமாக புதுடெல்லி இருப்பதால், தேசிய கட்சிகளே இந்த  பத்திரங்களின்  முக்கிய பயனாளிகளாக இருப்பதாக கருதலாம். 2017-18 ஆம் ஆண்டின் தணிக்கை அறிக்கைகள் மூலம் கிடைக்கின்ற தரவுகளும் இதையே  உறுதிப்படுத்துகின்றன. அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த 2017-18 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கைகளின்படி பார்த்தால்,  2017-18இல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 95%  பாஜகவுக்கு சென்றிருப்பது தெரிய வருகிறது.

பத்திரங்கள் மீட்கப்பட்ட நகரத்திற்கும் அரசியல் கட்சிக்கும் இடையில் உள்ள தொடர்பு ஹைதராபாத் மற்றும் புவனேஷ்வரில் மீட்கப்பட்ட பத்திரங்களின் அளவால் மிகத் தெளிவாகிறது. இந்த இரண்டு நகரங்களிலும் கணிசமான அளவு பத்திரங்கள் மீட்கப்பட்டன.  கடந்த ஒரு வருடத்தில் ஆந்திரா, தெலுங்கானாவுடன்  ஒடிசா சட்டமன்ற பொதுத் தேர்தல்களும் நடைபெற்றன. எதிர்பார்த்தவாறே, 2018-19இல் தேர்தல் பத்திரங்கள் மூலம் கணிசமான நன்கொடைகளைப் பெற்றதாக அறிவித்துக் கொண்ட கட்சிகளுக்குள் இந்த மாநிலங்களில் உள்ள பிரதான மாநிலக் கட்சிகளான பிஜேடி, டிஆர்எஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆகியவை அடங்கி இருந்தன. இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து 2018-19ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம்  450 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெற்றதாக அறிவித்திருந்தன.

இந்த  55%  பத்திரங்களின் பயனாளிகள் குறித்த விவரங்கள்  2020 அக்டோபர்  வரையிலும் நமக்குத் தெரிய வராது

2018-19 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பித்த அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற மொத்த வருமானம் 599.07  கோடி ரூபாயாக உள்ளது.  இது 2018-19ல் வாங்கப்பட்ட மொத்த தேர்தல்  பத்திரங்களில்  23.5% மட்டுமே. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து  2018-19 ஆம் ஆண்டில் 70% க்கும் அதிகமான  பத்திரங்களைப் பெற்றிருக்க முடியும்.

இங்கே பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளின்படி, 2019 ஏப்ரல் மற்றும் மே காலகட்டத்தில் வாங்கப்பட்ட பத்திரங்களின் மதிப்பு சுமார் 3078.62 கோடி ரூபாய் என்ற அளவில் மிக  அதிகமாக உள்ளது. 2019-20ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கைகளை அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் போது மட்டுமே, அதன் பயனாளிகளை நம்மால்  அறிந்து கொள்ள முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 3300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களுக்கான பயனாளிகளின் விவரங்கள்  அக்டோபர் 2020இல்  மட்டுமே அறிய வரும்.

தாமதமாக  தெரிவிப்பதில் எந்த  பயனும் இல்லை

2019 நவம்பர்  நிலவரப்படி, 2018-19ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட கிட்டத்தட்ட 76.5% தேர்தல் பத்திரங்களுடன் எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் நாம் இணைத்துப் பார்க்க முடியாது. அரசியல் கட்சிகள் செய்கின்ற தாமதம் மற்றும் விதிகளைக் கடைப்பிடிக்காதது போன்றவை அத்தகைய அறிக்கைகளின் நோக்கத்தை தோற்கடிப்பதாகவே இருக்கின்றன. .

2019 மக்களவை பொதுத்தேர்தல்களுக்கு  அரசியல் கட்சிகள் பெற்றுக் கொண்ட நிதியின் அளவைப் பற்றிய எந்தவொரு முழுமையான பகுப்பாய்விற்கும் நாம் 2020 அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும்.  அதுவும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தணிக்கை அறிக்கைகளை சரியான நேரத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே. ஏனென்றால், தேர்தல் பத்திரங்களில் கணிசமான பகுதி (இன்றுவரையிலான  மதிப்பில் 73%) 2019 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலேயே வாங்கப்பட்டுள்ளது.  எனவே, எந்தவொரு பகுப்பாய்விற்கும் 2019-20க்கான தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிக்கப்படும் வரை நாம் காத்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், எங்களால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போக்குகளின்படி பார்த்தால்,  பெரும்பாலான அரசியல் கட்சிகள், குறிப்பாக பாஜக மற்றும்  காங்கிரஸ் ஆகியவை சரியான நேரத்தில் இதுவரையிலும் தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பித்ததாக தெரிய வரவில்லை.

அரசியல் கட்சிகள் பெறுகின்ற நிதியுதவி குறித்த எந்தவொரு அர்த்தமுள்ள பகுப்பாய்வையும் இத்தகைய தாமதம் தடுக்கவே செய்கிறது.  தேர்தல் பத்திரத் திட்டத்தில் உள்ள தகவலை வெளிப்படுத்த தேவையில்லை என்ற  பிரிவு  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பயனாளிகள் தொடர்பான எந்த தகவலும்  வெளியாவதைத் தடுக்கிறது. இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால், கட்சிகளால் பெறப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த  அறிக்கையை  தேர்தல்களுக்குப் பின்னால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று விதிகளைத் திருத்துவது மட்டும்தான்.

நன்றி: https://factly.in/one-has-to-wait-till-october-2020-or-more-to-know-which-parties-benefitted-from-electoral-bonds/

தமிழில்: முனைவர் தா. சந்திரகுரு விருதுநகர்.

 

;