tamilnadu

img

நாம் நடத்தும் போராட்டம் உயிர் வாழ்வதற்காக! - பெ.சண்முகம்

மனித குலம் இதுவரை இப்படியொரு நெருக்கடியை சந்தித்திருக்காது. கொரோனா எனும் புதிய தொற்று நோய் உலகை முடக்கிப் போட்டுவிட்டது. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தான் அதிகமாக பாதிப்புகளும், அதிகமான உயிரி ழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உலகமே எனது கைக்குள் தான் என்று ஆணவமாக பேசித்திரிந்த அமெரிக்கா செய்வதறியாது கையை பிசைந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞா னத்தின் அபாரமான வளர்ச்சியில் இதை ஒழித்து கட்டுவதற்கான தடுப்பு மருந்துகள் கட்டாயம் கண்டுபிடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. 

உலகம் முழுவதும் ஊரடங்கும், தன்விலக்கல் என்பதும் பொதுவிதியாக்கப் பட்டிருக்கிறது. இதன் விளைவாக அன்றாடம் உழைத்து ஊதியம் பெற்று வாழும் கோடிக்கணக்கான மக்கள், இடம்பெயர் தொழி லாளர்கள், பழங்குடியினர், நாடோடி சமூகங்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் நாடு முழுவதும் பட்டினிச்சாவுகள் தவிர்க்க முடியாததாகிவிடும். ஒரு பொட்டல சோற்றுக் காக மணிக்கணக்காக கடும்வெயிலில் காத்திருக்கும் கொடுமை இதை உறுதிப்படுத்து கிறது. 

உயிர்வாழ்வது என்றால்...

மனித உரிமைகளில் உயிர்வாழும் உரிமை என்பது முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். இந்திய அரசியல் சாசனமும்இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், உயிர்வாழும் உரிமை என்பது ஏதோ மிருகம் போல் உயிரு டன் இருப்பது என்றில்லாமல் மனிதன் தன்மா னத்துடன் உயிர் வாழ்வது என்றே பொருள். 

தனிமனிதனின் மரியாதையும், தன்மான மும் இப்போதைய நிலையில் கேள்விக் குள்ளாகியுள்ளது. நல்லதங்காள் கதை நாட்டில் 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது மகா அவமானம் என்ற குற்றஉணர்ச்சி கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை. சிவில் சமூகம், தன்னார்வலர்கள் எவ்வளவு தான் உதவினாலும் மாதக்கணக்கில் கோடிக்க ணக்கான மக்களை அரசின் உறுதியான ஆதரவில்லாமல் பாதுகாக்க முடியாது. ஆனால், இதை மத்திய-மாநில ஆட்சியா ளர்கள் கடுகளவும் உணர்ந்ததாக தெரிய வில்லை. 

அதனால் தான் மத்திய அரசு, மாநில அரசுகள் கேட்ட நிதியை தர மனமின்றி உபதேசம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. வெற்று வசனங்கள் பசியைப் போக்காது. மக்கள் வாழ வழியைச் சொல் என்று ஆட்சியாளர்களின் முகத்திலறைந்து நாட்டு மக்கள் கேட்க வேண்டும். வெறும் உத்தரவு போடுவது மட்டுமே ஆட்சியாளர்களின் செயலாக இருக்க முடியாது. அதனால் ஏற்படும் விளைவுகளிலிருந்து மக்க ளைப் பதுகாக்க வேண்டியதும் ஆட்சியாளர்க ளின் கடமை. 

தொழிற்சாலைகள், வேளாண் பணிகள் நிறுத்தம். அதனால் வேலை இல்லை, கூலி இல்லை! எப்படி வாழ்வதென்று தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் சிக்கியவர்கள் போல் உழைக்கும் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான நிலையிலிருந்து மக்களை காக்க, உதவித்தொகை, உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிப்பது போன்ற நிவாரணப் பணிகளுக்கு ஆட்சியாளர்கள் முன்னுரிமை தர வேண்டும். மாறாக, ஏதோ பிச்சை போடுவதைப் போல ஆயிரம், ஐநூறு என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

விவசாயிகளின்  பெரும் துயரம்

விவசாயம் முடங்கிக்கிடக்கிறது. விவசாயம் செய்ய முதலீடு வேண்டும். ஏற்கனவே, உற்பத்தி செய்ய வேளாண் விளை  பொருட்கள் விற்பனையானால் தான் விவசாயிகளின் கையில் பணப்புழக்கம் ஏற்படும். ஆனால் போக்குவரத்து வசதியில்லாதது, வியாபாரிகள் வராதது மக்கள் கையில் பணமில்லாதது போன்ற காரணங்களால் பெரும் பாதிப்புக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். அதே நேரத்தில் கோடை கால சாகுபடி உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். ஆகவே தான், சென்னை உயர்நீதிமன்றம் சிறு-குறு விவ சாயிகளுக்கு தலா 10 ஆயிரம் உதவித்தொகை யாக வழங்க வேண்டுமென்று அரசுக்கு அறி வுறுத்தியது. ஆனால் அது குறித்து முத லமைச்சர் விவசாயி மூச்சே விடவில்லை. நெல் தவிர இதர வேளாண் விளைபொருட்கள் விற்பனை என்பது வியாபாரிகளைச் சார்ந்தே இருந்து வருகிறது. திடீரென்று அதை தலை கீழாக மாற்ற முடியாது. நெல் கொள்முதலே இங்கு முழுமையாக நடக்கவில்லை. பெய்த கோடை மழையில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நாசமாகிவிட்டன. இந்த நிலையில், பழங்கள், பூ, காய்கறிகள் போன்றவற்றை அரசு உடனடியாக கொள்முதல் செய்வ தற்கான கட்டமைப்பு வசதியே அரசிடம் இல்லை. ஆகவே, ஊரடங்கால் வேளாண் விளை பொருட்களை விற்க முடியாமல் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு இழப்பீடு வழங்குவது தான் அவர்களை இழப்பிலிருந்து பாதுகாக்க உதவும். 

விவசாயப் பணிகளுக்கு நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களை பயன்படுத்திட அரசு உத்தரவிட வேண்டும்.  விவசாயிகள் கையில் பணம் இல்லாத நிலையில் இது பேரு தவியாக இருக்கும். இந்தக் கோரிக்கைகளை யெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் ஆட்சியாளர்களின் செவிகளுக்கு எட்டவில்லை. ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வீதிக்கு வந்து அரசுக்கு எதிராக போராட மாட்டார்கள் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். அதனால் தான் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூட செவி சாய்க்க மறுக்கிறார்கள். மாறாக, உயரழுத்த மின்கோபுரம் அமைப்பது போன்ற விவசாயி களுக்கு விரோதமான திட்டங்களை இந்த ஊரடங்கு காலத்தில் செய்து விடலாம் என்று கீழ்த்தரமான செயலில் ஆட்சியர்கள் ஈடு படுகின்றனர். கிராமப்புறங்களில் கிருமி நாசினி தெளிக்கும் குறைந்தபட்ச ஆரம்பகட்ட தடுப்பு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கூட அனை வருக்கும் பரிசோதனை என்பது மேற்கொள்ளப் படவில்லை. மொத்தத்தில் தமிழக அரசின் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை என்பது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது என்றால் மிகை அல்ல!

அலட்சியத்தை அம்பலப்படுத்துவோம்!

ஆகவே தான் ஆட்சியாளர்களின் அலட்சி யத்தை அம்பலப்படுத்தவும், உழவர்கள் மற்றும் மக்களின் நியாயமான தவிர்க்க முடியாத கோரிக்கைகளை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நிர்பந்தத்தை அரசுகளுக்கு ஏற்படுத்திடும் வகையில் ஏப்ரல்-25ந் தேதி காலை 10 மணிக்கு மாநிலம் முழுவதும் விவசா யிகளின் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி நமது உணர்வுகளை வெளிப்படுத்துவது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 144 தடை உத்தரவு, ஊரடங்கு எதுவாக இருந்தாலும் நமது உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்க முடியாது. ஆட்சியா ளர்கள் கடமை தவறினால் வேளாண் சமூகம் வேடிக்கை பார்க்காது என்பதை பறைசாற்றிடும் வண்ணம் தமிழகம் கருப்புக் கொடிகளால் நிறையட்டும். பல லட்சக்கணக்கான உழவர்க ளின் இல்லங்களில் கருப்பு கொடி ஏற்றுவதன் மூலம் நமது ஒன்றுபட்ட போராட்டத்தை ஆட்சி யாளர்களை அறியச் செய்வோம்! உயிர் வாழ்வதற்கான இந்தப் போராட்டத்தில் எல்லோரும் இணைவீர்!
 

;