tamilnadu

மக்களுக்கு தெரிந்தது நிபுணர்களுக்கு தெரியலையே

இராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்,     30 குழந்தைகளுக்கு குறைவாக  இருக்கும் பள்ளிகளைக் கூட மூடிவிட்டார்கள். எட்டாம் வகுப்பு வரை இடை நிறுத்தம் கூடாது என்ற கல்வி உரிமைச் சட்டப் பிரிவுகளையும்  உதாசீனம் செய்து விட்டார்கள்.  ஆனால் என்ன வேடிக்கை என்றால், இவற்றை யெல்லாம் செய்யலாமா என்று இப்போது தான் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வழியாக  கருத்துக் கேட்பு தொடங்கியிருக்கிறார்கள்.  தற்போதைய  மத்திய வரவு செலவு அறிக்கையிலும்  உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவும்  வரைவுக் கல்விக் கொள்கையின்  முடிவு எடுக்கப்படாத அம்சமே.  அரசின் நிர்வாக உத்தரவுகள்,   தேவைப்படும் போது சட்டமியற்றும் அதிகாரம் என  எல்லாம் இருந்தும் மத்தியில் ஆட்சிக்கு வந்த  பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே ஒரு கல்விக் கொள்கையை கொண்டு வர துடிக்கிறது. காரணம், தனது  சித்தாந்தத்திற்கு  ஏற்றவாறு இந்திய நாட்டின் கல்வி முறையை  மாற்றியமைக்க  இன்னும் விரிவான சட்டரீதி யான வெளி அதற்கு  தேவைப்படுகிறது. 

வெளி வேஷம்...
புதிய கல்விக் கொள்கை முன்னெடுப்புகளின் துவக்கம் முதல் பல நிலைகளில் கருத்து கேட்பதை பல்வேறு வழிகளில் இந்த அரசு நடத்தியது. மிகுந்த ஜனநாயக தன்மை யோடும் பரந்த மற்றும் திறந்த மனத்தோடும் கருத்து கேட்பதாக தன்னைக் காட்டிக் கொண்டது. மின்னஞ்சலில் தாமாகவே கருத்துகளை அளித்தவர்கள் தவிர மீதமுள்ள எந்தவொரு கல்வியாளர்களிடமும் முற்போக்கு மாணவர் ஆசிரியர் இயக்கங்களிடம் கருத்து கேட்பு நடத்தவில்லை. தாமாக தொகுத்து அளித்த எந்தவொரு கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படவும் இல்லை.  இந்த நிலையில் தான் சுமார் 500 பக்க வரைவு கல்விக் கொள்கையை ஆங்கிலத்தில் சுற்றுக்கு விட்டு விட்டு ஒரே மாதத்தில் கருத்துக் கூறும் படி மத்திய அரசு கட்டாயப் படுத்தியது. மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஒரு மாத காலம் நீட்டிப்புச் செய்தது.  கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை சமூக நீதிக்கு எதிரானது. குலக் கல்வி முறையை கொண்டு வரும் திட்டம் என்று கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டை  தமிழ் நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எடுத்துள்ளன.  இந்த நிலையில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தனது இருபதாவது மாநில மாநாட்டை ஒட்டி காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் கல்வி மாநாடு நடத்தியது. இதனை ஒட்டி புதிய கல்விக் கொள்கை மீதான மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்தது. மதுராந்தகத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் இருபது பேரை மாநாட்டு பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர்களோடு கலந்துரையாடினர். ஒரு பன்னிரண்டு கேள்விகளை அவர்கள் முன் வைத்தனர்.

12 கேள்விகள்
♦புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை வந்திருப்பது தங்களுக்கு தெரியுமா?
♦ கல்வி என்பது யாருடைய பொறுப்பிலும் கடமையாகவும் இருக்க வேண்டும்? 
♦ ஒவ்வொரு ஊரிலும் ஒரு தொடக்கப்பள்ளி இருப்பது அவசியமா? 
♦ பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது எந்த வகுப்பில் இருந்து தொடங்கலாம்.
♦ குழந்தைகள் எத்தனை மொழிகள் கற்கலாம். 
♦ பள்ளி கல்லூரிகளின் கட்டணத்தை அந்தந்தப் பள்ளி/ கல்லூரிகளே தீர்மானிக்கும் முறை சரியா?
♦ உயர்கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு தேவையா?  
♦ மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் தரமானது எது? 
♦ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் அதிகாரம் பல்கலைக் கழகத்திடமே இருக்க வேண்டுமா அல்லது அந்தந்த கல்லூரி பட்டம் அளிக்கும்  அதிகாரம் வழங்கலாமா?  
♦ கல்வி  மாநில அரசின் பட்டியலில் இருக்க வேண்டுமா? அல்லது மத்திய அரசிடம் இருக்க வேண்டுமா? 
♦ கல்விக் கொள்கை ஒன்றை தயாரிக்கும் போது மக்களிடம் கருத்து கேட்க வேண்டுமா? 
♦ புதிய கல்விக் கொள்கை  மீதான கருத்து கேப்பு கடைசி நாள் எது என்று தெரியுமா 

என்று பன்னிரெண்டு கேள்விகளை மக்களிடம் முன் வைத்தனர். அவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர்.  புதிய கல்விக் வரைவு அறிக்கை வந்திருப்பது தெரியுமா என்ற கேள்விக்கு நூற்றுக்கு 75 விழுக்காட்டினர் (15 பேர்) தெரியவில்லை என்று பதிலளித்தனர். அதேசமயம் புதிய வரைவு கல்விக் கொள்கைக்கு கருத்து கூறும் கடைசி தேதி தெரியுமா என்ற கேள்விக்கும் அனைவரும் தெரியாது என்றே பதிலளித்துள்ளனர். பத்து பெண்கள் பத்து ஆண்டுகளோடு கலந்துரையாடினர். இவர்களில் பலர் உழைப்பாளி மக்கள். மூவர் ஆசிரியர்கள்.  படிப்பறிவு குறைந்தவர்களும் உண்டு. பெரும்பாலானவர்கள் சாமானிய மக்கள். இவர்கள் கல்விக் கொள்கை மீது என்ன கருத்து கூற முடியும் என்று பலர் நினைக்கலாம். ஆனால் கள யதார்த்தம் அப்படி  இல்லை என்பதை அவர்களு டனான கலந்துரையாடல் வெளிப்படுத்தியது. 

அரசின் கடமை
வரைவுக் கல்வி ஆவணம் பொதுப் பள்ளி முறைமை பற்றி அருகமைப் பள்ளி பற்றி வாய்திறக்கவில்லை. கல்வி அளிப்பது அரசின் பொறுப்பு கடமை என்று கஸ்தூரிரங்கன் குழு ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நம்மோடு கலந்து ரையாடல் நடத்திய மக்கள் அனைவரும் ஏகமனதாக கல்வி அளிப்பது அரசின் பொறுப்பு கடமை என்று தெள்ளத் தெளிவாக கூறினார்கள்.  அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சுருங்கி வருகிறது. குறைவான எண்ணிக்கை உள்ள சுற்றுவட்டார கிராமப்புற பள்ளிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டுப் பள்ளிகளை உருவாக்குவோம். அதுவே புத்தி சாலித்தனம் என்கிறார் கஸ்தூரி ரங்கன். ஆனால் படிப்பறிவு குறைவாக இருக்கும் மக்கள் உறுதிபடக் கூறுகின்றனர். ஊர் தோறும் ஒரு தொடக்க பள்ளி வேண்டும். ஊருக்குள் கோயில் இருப்பது போல் பள்ளி வேண்டும் என்கின்றனர். பிஞ்சுக் குழந்தைகளை ஊர் எல்லை தாண்டி எப்படி அனுப்புவது என்று எதிர் கேள்வி கேட்கின்றனர். இந்த பட்டறிவு மோடி அரசுக்கோ அவரது அரசு அமைத்த கல்விக் குழுவுக்கோ இல்லை.

இங்கிருந்து பொதுத் தேர்வு
கல்வித் தரம் பேண மூன்றாம் வகுப்பில் இருந்தே பொதுத் தேர்வு வேண்டும் என்கிறது கஸ்தூரிரங்கன் குழு. ஆனால் பத்தாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வுகள் தொடங்கி னால்  போதும் என்கின்றனர் மக்கள். “பிஞ்சுகளுக்கு சுமை எதுக்கு?” என்கிறார்கள். குழந்தைகளின் பரீட்சை சுமையை படிப்பறிவு குறைந்தவர்கள் புரிந்து கொண்ட அளவு கஸ்தூரிரங்கன் குழு புரிந்து கொள்ளாமை வேதனை அளிக்கிறது. இருபது பேரில் இரண்டு பேர் மட்டுமே எட்டாம் வகுப்பு முதல் தேர்வு இருக்கலாம் என்று கூறினர்.  குழந்தை எத்தனை மொழிகளை கற்கலாம் என்ற கல்விக்கு நான்கு மொழிகள் என்று ஒருவர் கூறினார். ஆறு பேர் இந்தி அவசியம் கற்கலாம் என்று ஒரு மாணவி தெரி வித்தார். பன்னிரெண்டு பேர் இரண்டு மொழிகள் போதும் என்றனர். விரும்பி எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கட்டும் விருப்பம் இன்றி எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்றனர். எவ்வளவு தெளிவு பாருங்கள். எந்த ஒரு மொழியையும் திணிக்க கூடாது என்று மக்களிடம் உள்ள தெளிவு ஆட்சியாளர்கள்/ கல்வி கொள்கை தயாரிப்பாளர்களிடம் இல்லையே. இந்த அவலத்தை என்ன சொல்ல?

எதற்காக நுழைவுத் தேர்வு
தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயம் அரசிடமே இருக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரே குரலில் கூறுகின்றனர். உயர் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு தேவையா என்று கேட்டபோது இரண்டு பேர் மட்டுமே ஆம் வேண்டும் என்றனர். பதினெட்டு பேர் உயர் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்றார்கள். குழந்தை ஒவ்வொரு வகுப்பைக் கடக்கும் போதும் சில குறைந்த பட்ச கற்றல் அடைவுகளோடு தானே வருகிறது. ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்கு தகுதி பெற்றுத் தானே வரத்து சேர்கிறார்கள். பின் எதற்காக நுழைவுத் தேர்வு? பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வே ஒரு வகை நுழைவுத் தேர்வுதானே என்றும் கூறினர்.  புதிய கல்விக் கொள்கையின் மற்றுமொரு அபாயகர மான பரிந்துரை தனியார் உட்பட அனைத்து கல்லூரிக ளும் தமக்கு தாமே பட்டம் கொடுத்துக் கொள்ள அனு மதிப்பது.. மதுராந்தகம் பகுதி பொது மக்கள் பட்டம் வழங்கும்  அதிகாரம் நிச்சயம் பல்கலைக்கழகத்தின் பணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எல்லோரும் கருத்து தெரி வித்தனர். அவசர நிலை காலம் தொட்டே நாம் பேசிவரும் ஒரு விசயம்“ கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும்  என்று எல்லோரும் கூறினர். அரசின் கடமை எது என்று மக்கள் தெரிந்தே வைத்து உள்ளனர். ஆனால் மத்திய அரசு இந்த அதிகாரப் பரவலை அல்லது அரசியல் சாசன உரிமையை மாநிலங்களுக்கு வழங்க மறுக்கிறது.  இந்த ஆய்வு அல்லது கலந்துரையாடல் தந்த உற்சா கத்தில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் இன்னும் பல இடங்களில் இத்தகைய உரையாடலை முன்னெக்க உள்ளது. புதிய வரைவு கல்விக் கொள்கை அபாயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளது. மக்களுக்கு எதுவும் தெரியாது என்று மோடி அரசும் அதன் ஏற்றாற்போல் கொள்கைகளை வடிவமைப்பு செய்து தர வரிசையில் காத்திருக்கும் கஸ்தூரி ரங்கன் போன்றவர்களுக்கும் தான் ஏதும் தெரியவில்லை என்று இந்த சிறிய உரையாடல் கற்றுத் தருகிறது.அர்த்தமுள்ள மனிதப் பேச்சு உலகை மாற்றும் என்றார் ஃபாலோ பிரைரே. மக்களிடம் ஆயிரம் ஆயிரம் உரையாடல் வழி புதிய கல்விக் கொள்கையின் பாதிப்புகளை எடுத்துச் செல்வோம்.

;