tamilnadu

​​​​​​​மறந்து போன அயோத்தி பூசாரியும், அமைதிக்கான அவருடைய செய்தியும்

பாபா லால்தாஸின்  26ஆவது  நினைவு நாளில், அயோத்தியிலிருந்து அவரைப் பற்றிய நினைவுகள் கிட்டத்தட்ட அழிக்கப் பட்டு விட்டன. ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியின் கடுமையான எதிர்ப்பாளராக இருந்து வந்த லால்தாஸ், அயோத்தியிலிருந்து 20 கி.மீ தொலை வில் உள்ள ராணிபூர் சத்தார் என்ற கிராமத்தில் 1993 நவம்பர் 16 அன்று  நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை குறித்து இருந்து வந்த உண்மையான மர்மம் காவல்துறை யினரால் தீர்க்கப்படாமல், நிலப் பிரச்சனை தொடர்பாக கொலை நடந்ததாகக் கூறி வழக்கு தள்ளுபடி  செய்யப்பட்டது.

துவக்கத்திலிருந்தே...

உயிருடன் இருந்தபோது, வேறொரு நிலத் தக ராறோடு தொடர்புடையவராக லால்தாஸ் இருந் தார். நீதிமன்றத்தால் பாபர் மசூதியின் மத்திய குவிமாடத்தின் கீழ் அமைந்துள்ள சர்ச்சைக் குரிய ராம ஜென்மபூமி கோயிலின் தலைமைப் பூசாரியாக 1981ஆம் ஆண்டு அவர் நியமிக்கப் பட்டிருந்தார். இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்று  அறியப்படுகின்ற லால்தாஸ்,  விஎச்பியின் ராம ஜென்ம பூமி பிரச்சாரத்தை  அதன் துவக்கத்தில் 1984ஆம் ஆண்டிலிருந்தே  எதிர்த்து வந்தார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் 419 இடங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை 1991 ஜூன் மாதம் பாஜக வென்ற பிறகு, கல்யாண் சிங் மாநில முதலமைச்சராக்கப்பட்டார். “பெரிய ராமர் கோயிலைக் கட்டுகின்ற தங்களுடைய திட்டத்தி ற்கு ஒரு சில தடைகள் இருப்பதை விஎச்பி அடை யாளம் கண்டது. அவர்களைப் பொறுத்த வரை, பாபர் மசூதிக்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய தடையாக சர்ச்சைக்குரிய இடத்தில் கோவிலின் தலைமை பூசாரி என்றமுறையில் லால்தாஸ் இருந்தார்” என்கிறார்பை சாபாத்தைச்சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சுமன் குப்தா.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மசூதி இடிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, 1992  மார்ச் மாதம் லால்தாஸை தலைமைப் பூசாரி பதவியில் இருந்து கல்யாண் சிங் அர சாங்கம் நீக்கியது. லால்தாஸுக்குப் பதிலாக ராம ஜென்ம பூமி கோயிலின் தலைமைப் பூசாரியாக வந்த பூசாரி சத்யேந்திர தாஸ் “லால்தாஸுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவர் நீக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய நபராக இருந்த அவர் அயோத்திக்கு பொருத்தமற்ற வராக மாறினார். பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீண்ட காலத்திற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டார், ஏன் இப்போது அவரைப் பற்றி கேட்கிறீர்கள்?” என்று தொலைபேசி யில் பேசிய போது கேள்வியெழுப்பினார். தன்னை நீக்கியதற்கு எதிராக லால்தாஸ் வழக்கு தொடர்ந்தார். அலகாபாத் உயர் நீதிமன் றத்தின் லக்னோ அமர்வில் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

ராமர் கோயில் இயக்கம் என்பது ஹிந்து வாக்குகளைப் பெறுவதற்கான சர்ச்சை மற்றும் உணர்வுகளின் அரசியல் தவிர வேறொன்று மில்லை என்று அவாத்தின் ஒத்திசைவான பன்முக கங்கா – யமுனா கலாச்சார மரபுகளில் மூழ்கியிருந்த லால்தாஸ் கேலி செய்தார். அயோ த்தியில் இருந்த பெரும்பாலான கோவில்கள் அவாத்தின் முஸ்லிம் ஆட்சியாளர்களின் உதவியுடன் எவ்வாறு கட்டப்பட்டன, ஹிந்துக்க ளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் 1855ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலுக்குப் பிறகு ஹிந்து பூசாரிகளும், முஸ்லிம் பிர்க்களும் எவ்வாறு அன்புடன்  இணைந்து வாழத்  தீர்மா னித்தார்கள் போன்றவை அவர் அடிக்கடி சொல்லுகின்ற சம்பவங்கள் ஆகும்.

ஞானதாஸ் கூட...

இன்று, ‘மதச்சார்பற்ற துறவி’ என்று அடை யாளப்படுத்தப்படுகின்ற ஹனுமன் காரி கோயி லின் பூசாரி ஞான்தாஸ் போன்ற ஒரு சில மூத்த வர்களைத் தவிர, குறைந்தபட்சம் அயோத்தியில் ஒரு சிலரே லால்தாஸையும், ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தைக் காப்பாற்றுவதற்கான அவரது அரிய முயற்சிகளையும் நினைவில் கொண்டிருக்கிறார்கள். “அவர் ஹனுமன் காரியைச் சேர்ந்தவர், நல்ல மனிதர், ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் எதிரிகளால் அவர் கொல்லப்பட்டார்” என்று சொன்னதைத் தவிர ஞான்தாஸ் அவரைப் பற்றி வேறெதுவும் பேச மறுத்து விட்டார்.

சர்ச்சைக்குரிய இடத்தை (2.77 ஏக்கர்) ராம் லல்லா விராஜ்மான் தெய்வத்திற்கு திட்டவட்ட மாக வழங்கியிருக்கின்ற இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில், அயோத்தி யின் சிக்கலான வரலாற்றில் ஒரு சிறிய அடிக் குறிப்பாகவே லால்தாஸின் தோல்வியுற்ற போர் இருப்பதாகத் தோன்றுகிறது. பல ஆண்டுகளாக அயோத்தியில் உள்ள ஒரு பூசாரியிடம் கூட ‘மந்திர் வாஹின் பனாயங்கே’ (கோவிலை அங்கேயே கட்டுவோம்) என்கிற மேலாதிக்க முழக்கத்தில் இருந்து வேறுபடுவதற்கான தைரியம் இருந்ததில்லை. ‘அயோத்தியின் கலாச்சார எல்லைக்குள்’ புதிய மசூதியை அனு மதிக்க விரும்பாத விஎச்பி மற்றும் ஆர்எஸ் எஸ் அமைப்புகளின் சிந்தனைகளில் இருந்து, அந்த கோவில் நகரத்தில் இன்றும் ஏராளமான செல்வாக்கைப் பெற்றிருக்கும் ஞான்தாஸைப்  போன்றவர்கள் கூட,  போர் முழக்கம் போன்ற இந்த கூக்குரலுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதன் விளைவாக, விலகத்  துணி வார்கள்  என்பதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில், ஆயிரக்க ணக்கான காவல்துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினரின் உதவியுடன் அமைதி காக்கப்பட்டது. வகுப்புவாத நல்லி ணக்கத்தைச் சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சி யையும் முளையிலேயே கிள்ளி எறிவதை உள்ளூர்  நிர்வாகம்  உறுதி செய்திருந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து செயல்படுகின்ற அவாத் மக்கள் மன்றத்தின் அமைப்பாளரான அஃபாகுல்லா, “கோவிலையும் நிலத்தையும் பெற்றுள்ளதால், ஹிந்துக்கள் வருத்தம் கொள்வதற்கான பிரச்சனை எதுவும் இல்லை. அது அவர்களுக்கு போதுமானதாகவே இருக்கிறது. பெரும்பான்மை சமூகம்  இனிமேல் என்ன செய்கிறது என்பதைப் பொறுத்தே இந்த தீர்ப்பு  நல்லது அல்லது கெட்டது என்பது அமையப் போகிறது” என்று கூறுகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய முஸ்லிம் சமூகத் தலைவர்களான ஹாஜி மெஹபூப் மற்றும் இக் பால் அன்சாரி ஆகிய இருவரும்  தீர்ப்பை மறுபரி சீலனை செய்யுமாறு கேட்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

8வயது சிறுவனும் 30 வயது சகோதரிகளும்

மேலோட்டமாக முல்லாக்களையும், மௌல்விகளையும் காவி அணிந்த சாதுக்கள் கட்டிப்பிடிப்பது போன்று தோன்றினாலும் முஸ்லிம்-விரோத பேச்சுக்களும், மறைமுக அவதூறுகளும் அயோத்தியின் அடிவயிற்றில் தொடர்ந்து கனன்று கொண்டே இருக்கின்றன. தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில், அஷர்பி பவன் அருகே சிறிய கோயிலையும் உணவகத்தையும் நடத்தி வருகின்ற இரண்டு ஹிந்து சகோதரிகள் தங்களுடைய அண்டை வீட்டில் உள்ள எட்டு வயது மன்மோகன் பாண்டேவை திட்டுவதைக் கேட்க முடிந்தது. தான் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்து, வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பின் மீது உருவாகியிருக்கின்ற மிகைப்படுத்தலைக் கேள்வி கேட்கின்ற வகையில், “இது என்ன பெரிய விஷயம். என்னுடைய வீட்டிலேயே ஒரு ராமர் கோவில் இருக்கிறது” என்று கூறத் துணிந்தது தான் அந்தச் சிறுவன் செய்த மிகப் பெரிய தவறு. அந்தச் சிறுவனிடம் தங்களுடைய 30 வயதில் இருக்கும் அந்த சகோதரிகள்  “நீ ஒரு முஸ்லிமா அல்லது இந்துவா?” என்று கேட்டனர்.

ஒரே நேரத்தில் துவங்குவது விவேகம்

கோவில் நகரத்தில் உள்ள மக்கள், பிரச்சனை முடிவதற்காக காத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான், இதுவரை கிடைத்ததை விட தீர்விற்கு மிக அருகே இந்த தீர்ப்பு அவர்க ளை கொண்டு வந்திருக்கிறது. முழுமையானதாக இல்லாத இந்த தீர்ப்பு  ஒரு சாராருக்கு அநியாய மானது என்றாலும், இது ஒரு நடைமுறை தீர்வு  என்பதை, மக்களின் நன்மைக்காக இந்த சர்ச்சை யை முடிவிற்கு கொண்டு வருவதற்காக ஒவ் வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டும் என் பதை இருதரப்பினருமே ஒப்புக் கொள்கிறார்கள். கோவிலையும், ஊருக்குள்ளே  மசூதிக்கு ஒரு மாற்று இடத்தையும் தர வேண்டும் என்று நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த இரண்டை யும் ஒரே  நேரத்தில் தொடங்குவது நியாயமானதா கவும் விவேகமானதாகவும் இருக்கும்.

லால்தாஸின் குறுகிய வாழ்க்கையை அயோத்தி இன்று கிட்டத்தட்ட மறந்து விட்டது. ஆனால் வகுப்புவாத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் குறித்த அவரது செய்தி அயோத்திக்கும், இந்த நாட்டிற்கும் முன்னெப்போதையும்  விட முக்கிய மான தேவையாக இப்போது இருக்கிறது.

கட்டுரையாளர் : ‘அயோத்தி: நம்பிக்கை மற்றும் முரண்பாடுகளுக்கான நகரம்’ என்ற புத்தகத்தை எழுதிய தில்லி பத்திரிகையாளர்.
நன்றி : தி வயர் இணைய இதழ் 2019 நவம்பர் 13 
தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு




 

;