tamilnadu

img

நனையும் இமைகள்... நடுங்கும் இதயம்... ஜி.ராமகிருஷ்ணன்

கொரோனா வைரஸ் நோய் - மின்னல் வேகத்தில் பரவக் கூடியது. இந்த நோயை எதிர்த்து இன்றைக்கு உலக மக்கள் அனைவரும் போராடி வருகிறார்கள். கொரோனாவை எதிர்த்த இந்தப் போராட்டத்தை, உலக அளவில், தேசிய அளவில், மாநில அளவில் என மூன்று தளங்களில் பார்க்கலாம்.

உலக அளவில் சீனாவின் அணுகுமுறை முக்கியமானது. சீன அரசு ஒரு மக்கள் நல அரசாங்கம் என்ற அடிப்படையில், மிகவும் சாதுர்யமாகவும், திறமையாகவும் கொரோனா வைரஸை எதிர்கொண்டுள்ளது. ஹுபெய் மாகாணத்தின் வுஹானில் இந்த வைரஸ் தொற்று முதன்முதலாக ஏற்பட்ட போது, நாடு முழுவதிலும் இருந்து 40,000க்கும் மேற்பட்ட டாக்டர்களும், செவிலியர்களும் அந்த மாகாணத்துக்குப் போய், கட்டுப்படுத்தினார்கள்.  ஜனவரி 23 அன்று, வுஹான் நகரில் ஊரடங்கு அறிவித்துக் கட்டுப்படுத்த சீனா போராடிக் கொண்டிருந்த போதுகூட, உலகின் முதலாளித்துவ நாடுகள் இந்த வைரஸை அலட்சியப்படுத்தின.  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் பொறுப்பற்ற பேச்சுகள், உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய ஊடகங்களைக் கிண்டலடித்து அவர், மார்ச் 8 ஆம் தேதிகூட, “அமெரிக்காவை மோசமாக சித்தரிக்க வேண்டும் என்பதற்காகப் போலி ஊடகங்கள் தங்களால் இயன்றவரை முயன்று வருகின்றன” எனச் சொன்னார். “கடந்த ஆண்டு 37,000 அமெரிக்கர்கள் பொதுவான காய்ச்சலால் இறந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் 27,000 -70,000 மரணங்கள் நிகழ்கின்றன. இதனால் வாழ்க்கை, பொருளாதாரம் எதுவும் முடங்கிவிட வில்லை. தற்போது, 546 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது, 22 பேர் இறந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்” எனத் துளியும் பொறுப்பில்லாமல் பேசினார் டிரம்ப். இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் கொரோனாவை எச்சரிக்கையாக அணுகவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை சமாளிக்க முடியாமல் இன்றைக்குத் திணறுகின்றன.  சீனாவின் மருத்துவர்கள் தங்களுடைய நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்தப்  போராடிக்கொண்டிருக்கும்  வேளையிலும்கூடப் பிற, நாடுகளுக்கும் போய் உதவி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் சோஷலிச நாடான கியூபாவின் டாக்டர்கள், இத்தாலி, ஈரானுக்குப் போய் உதவிவருகிறார்கள். தன்மீது பொருளாதாரத் தடை விதித்த இங்கிலாந்து நாட்டின் கப்பலில் சிக்கியிருந்த கொரோனோ நோயாளிகளைக் கியூபா வரவேற்று சிகிச்சையளித்த விதம், இன்றைக்கு உலக மக்களால் பாராட்டப்படுகிறது.

ஈவிரக்கமற்ற அமெரிக்கா
இந்த இக்கட்டான நேரத்தில்கூட ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடைகளைத் தற்காலிகமாகக்கூட விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை. விளைவாக, ஈரானால் மருந்துப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாமல், அங்கு கொரோனா வைரஸால் ஆயிரக் கணக்கானவர்கள் நோயுற்று, நூற்றுக் கணக்கானவர்கள் ஒவ்வொரு நாளும் மரணமடைந்து வருகிறார்கள். அமெரிக்காவின் ஈவிரக்கமற்ற செயலுக்கு உலக அளவில் பலத்த எதிர்ப்பு வந்த பிறகு, ’சுவிட்ஸர்லாந்து அரசு வாயிலாக, ஈரான் மக்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளோம்’ என்றது அமெரிக்கா. “பொருளாதாரத் தடைகளில் இருந்து பெரிய அளவிலான விடுதலை தான் எங்களுக்கு வேண்டும்” என்றும், “இந்தச் சிறிய காரியத்தை செய்துவிட்டு அமெரிக்கா தன்னை பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்வதை நான் அனுமதிக்க விரும்பவில்லை” எனக் கூறி அமெரிக்காவின் போலி உதவி நாடகத்தை ஈரான் நிராகரித்துவிட்டது. 
மூன்று நாட்களுக்கு முன்புகூட, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மீது, அவர் ‘போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாதி’ என்று குற்றம் சுமத்தி, ’அவரைப் பிடித்துத் தருவோருக்கு 112 கோடி ரூபாய் சன்மானம்’ என அறிவித்துள்ளது அமெரிக்கா. இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டை, இக்கட்டான சூழலிலும்கூட என்ன வேண்டுமானாலும் செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது.

சீனக் குடியரசுக்கு உரிமையான, ஆனால் தனிநாடாக இயங்கிவருகிற, தைவானுக்கு ’இராணுவப் படைகளை அனுப்பமுன்வருகிறோம்’ எனக் கூறி, இரண்டு நாட்களுக்கு முன்புகூட, சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயன்றது அமெரிக்கா. இவ்வளவு பெரிய நெருக்கடியை உலகம் சந்தித்து வரும் நிலையிலும், தனது நாட்டிலேயே லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள போதும்கூட, தனது ஏகாதிபத்திய நலனுக்கு அப்பாற்பட்டு, சிந்திக்க அமெரிக்கா தயாராக இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த அற்பமான நடவடிக்கைகளைப் புறந்தள்ளி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “அமெரிக்கா மற்றும் உலக நாடுகளோடு நாங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் துணை நிற்கிறோம், வேண்டிய உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.  உலகம் தழுவிய அளவில் மனித நலனே முக்கியம் என்பதை அடிப்படையாகக் கொண்டே சோஷலிச நாடுகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கொரோனோ பிரச்சனையை அணுகுகின்றன. 

நமது நாட்டில்...
சீன தேசத்தில் கொரோனா கடுமையான பாதிப்பை உருவாக்கிய அதே நேரத்தில், சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான 4200 கி.மீ. எல்லையை ரஷ்யா மூடி, எல்லைப் பகுதிகளில் ஊரடங்கைப் பிறப்பித்தது. இதன் மூலம் தனது நாட்டில் கொரோனா பாதிப்பை ரஷ்யா குறைக்க முயற்சித்தது. இந்தியாவில் முதல் தொற்று ஏற்பட்ட 55 நாட்களுக்குப் பிறகு அடையாள ஊடரங்கு, கடந்த மார்ச் 22 தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மூன்று வார ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் தேவைதான். ஆனால், இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு முன்னதாக, முன்தயாரிப்பு எதையும் அரசு செய்யவில்லை என்பது வேதனையளிக்கிறது. மருத்துவம், மின் உற்பத்தி உள்ளிட்ட அத்தியாவசியத் தொழில்கள் தவிர, அனைத்து ஆலைகளும், கட்டுமானப் பணிகளும், வணிக வளாகங்களும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனே மூடப்பட்டுவிட்டன. இந்தத் துறைகளில் வேலைசெய்த, பெரும்பான்மையான, இடம்பெயர்ந்த, முறைசாரா துறைத் தொழிலாளர்கள், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது, வேலை செய்த ஊரில் இருப்பதா, சொந்த ஊருக்குச் செல்வதா எனச் செய்வதறியாது திக்கற்றுப் போனார்கள். அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தவுடனேயே, அடுத்த ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்து அவர்களுடைய முதலாளிகள் அவர்களை வெளியேற்றிவிட்டார்கள். இந்தத் தொழிலாளர்கள் ஊருக்குப் போவதற்கு போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத நிலையில், வேறு வழியின்றி 300-400 கி.மீ., கால்நடையாகவே நடந்து தங்கள் வீடுகளுக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இக்கட்டான ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு, முன்னதாக இடம்பெயர்ந்த முறைசாரா தொழிலாளர்கள் வருமானம் என்னவாகும், அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்குப் போவதற்கு வழிவகை செய்ய வேண்டுமே - என எதையுமே சிந்திக்காமல், முன்தயாரிப்பு இல்லாமல் ஊரடங்கை அறிவித்ததால் நாடு முழுவதும், முறைசாரா இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இன்றைய நிலையில் இந்தியாவின் மக்கள் தொகையில் திருமணம் அல்லாத பிற காரணங்களுக்காக இடம்பெயர்ந்தவர்கள் 23 கோடி பேர். இவர்களில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று வேலைபார்க்கிறார்கள். இடம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்களில் 37 சதவிகிதம் உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் இன்றைக்குக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். இடம்பெயர்ந்த முறைசாரா தொழிலாளர் சம்பந்தப்பட்ட கொள்கையைப் பெரும்பான்மையான மாநிலங்கள் உருவாக்கவே இல்லை. மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்த முறைசாரா தொழிலாளர்கள் பெரும்பாலும் எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்கிறார்கள். இப்படி இவர்களைப் பற்றி இந்திய அரசும், பெரும்பான்மையான மாநில அரசுகளும் கவலைப்படாத சூழலில் தான், இந்தப் பெருந்துயரம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.

விருந்தினராகப் போற்றும் கேரள அரசு
ஆனால் கேரள மாநிலம் நீண்டகாலத்துக்கு முன்பாகவே, தங்கள் மாநிலத்தில் பணியாற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான கொள்கையை உருவாக்கியுள்ளது. இந்தக் கொள்கையின்படி, ‘விருந்தினர் தொழிலாளர்’ (Guest Workers) என்றுதான் இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குறிக்கிறது கேரள அரசு. அவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கி, அவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறவும், அவர்களுடைய குழந்தைகளுக்கான கல்வி பெறவும் வழிவகை செய்கிறது. இதன் விளைவாகக் கேரளாவில் இன்றைக்கு ஆலைத்தொழில்கள் மட்டுமல்லாது, விவசாயத் தொழிலிலும் வெளிமாநிலத்தார் வேலைபார்க்கிறார்கள்.  இந்நிலையில்தான் நமது சில ஊடகங்கள், கேரள அரசு தமிழகத் தொழிலாளர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தயாராக இருந்தும், தங்களது வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதலில் வெளியேறிய தமிழர்களை, ’கேரளா துரத்துகிறது’ என விசாரிக்காமல் செய்தி வெளியிட்டன.  கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முன்னணியில் இருந்து போராடிக்கொண்டிருக்கும், மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு சம்பந்தமான போதிய ஏற்பாடுகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இல்லை என்பது தெரிகிறது. முகக்கவசம் கேட்டதற்காக, சந்திரசேகர் என்ற அரசுமருத்துவரை தூத்துக்குடிக்கு மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. மத்திய அரசு, மாநில அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போதுமனதாக இல்லை என்றாலும், ‘உடலால் பிரிந்திருப்போம், மனதால் இணைந்திருப்போம்’ என்ற அடிப்படையில் கொரோனாவை எதிர்த்து, ஒன்றுபட்ட போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.  

மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் நியமித்த வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ள முனைவர். கிர்தார் கியானி சமீபத்தில் ‘குவின்ட்’ இணையத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில், ”இந்தியா சமூகத் தொற்று என்ற கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில் அடுத்த 10 நாட்கள் மிகவும் முக்கியமானது. இப்போதைய நிலையில் காய்ச்சல் வந்து மருத்துவமனைக்குச் செல்பவர்களுக்கு, ’காய்ச்சல் மட்டும் இருந்தால் பரிசோதனை செய்ய மாட்டோம், சளியும், இருமலும் இருந்தால்தான் கொரோனோ பரிசோதனை செய்யப்படும்’ எனப் பரிசோதனை மறுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் காய்ச்சல் வந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யும் அளவுக்கு நம்மிடம் போதுமான அளவுக்கு உபகரணங்கள் இல்லை. இது மாற வேண்டும். நமக்கு நாட்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன நாம் துரிதமாக செயல்பட்டால்தான் தப்பிக்க முடியும்” என்கிறார்.  உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர், ”ஊரடங்கு மட்டும் கொரோனா பரவலைத் தடுத்துவிடாது; தள்ளிப்போடும். ஊரடங்குடன், பரிசோதனைகளும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவதும்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்தும்” என அறிவித்துள்ளார்.  எனவே உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி பரிதோதனைகளைச் செய்து கொரோனோ தொற்றைக் கண்டறிந்து, குணப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மைய, மாநில அரசுகள் விரைந்து எடுக்க வேண்டும்.  இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயர் துடைக்கும் நிவாரணங்களையும் அரசுகள் உடனே அளித்திட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை விமானத்தில் அழைத்து வந்ததுபோல, இடம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மைய அரசும், மாநில அரசுகளும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

;