tamilnadu

img

இதற்காகவே காத்திருந்தாயா பாலகுமாரா? - அ.குமரேசன்

எரிகிற வீட்டில் பிடுங்கிய வரையில் லாபம் என்ற சொலவடையின் பொருள் முற்றிலு மாக எரிந்துபோவதற்குள் எடுத்துப் பாது காத்து வைத்துக்கொண்ட உடைமைகளா வது மிஞ்சுமே என்பதுதான். ஆனால் கொரோனா தீ எரிகிற நேரத்தில், மாநிலங்கள் என்ற வீடுகளிலிருந்து மிச்ச மிருக்கும் அதிகாரங்களையும் மத்திய அரசு பிடுங்கிக் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகள் நாட்டிற்குப் புதியதல்லதான். திட்டக்குழுவை நிதி ஆயோக் என்ற அதிகார அமைப்பாக மாற்றியது, பணமதிப்பை ஒரே ராத்திரியில் ஒழித்தது போன்ற முன்னனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போதைய கொரோனா போராட்டக் காலத்தில், இப்படி யொரு வாய்ப்புக்காகவே காத்திருந்தது போல, ஒட்டுமொத்த மான அதிகாரங்களை வாரிக்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இயற்கையாக ஏற்படும் இத்தகைய நெருக்கடிகளை வெற்றிகரமாகச் சமாளிக்க, மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சம்பந்தப்பட்ட துறைகள் என அனைத்திலும் அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதே நம்பகமான, உத்தர வாதமான வழி.ஆனால், நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் அதிகாரங்களைக் கைப்பற்றி, மாநிலங்களையும் உள்ளாட்சிகளையும் மேலிடக் கட்ட ளைப்படி செயல்படுகிற நிர்வாகக் கிளைகளாக மாற்றுகிற கைங்கரியம்தான் நடக்கிறது. எதிர்கால சர்வாதிகாரக் கனவுகளோடு இருப்பவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று ‘தி எகனாமிஸ்ட்’ பத்திரிகையின் கட்டுரையாளர் மைக்கேல் ஹவுட்ஸ் எழுதியிருந்தார் (ஏப்ரல் 23). பொதுமக்களைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் தேவை என்று அவர்கள் காரணம் சொல்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டி ருந்தார். நம் நாட்டில் காணும் காட்சிகள் இதற்குச் சான்றாகின்றன.

பேரிடர் சட்டமும் ஆணையமும்

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் (2005) இதற் கென்றே எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூறப்பட்டிருந்த நிலையில், மக்களுக்குச் சில மணி நேரங்களே அவகாசம் அளித்து, நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படுவதை மோடி அறி வித்தாரே, அந்த மார்ச் 24க்கு முன்பாக இந்தச் சட்டம் செயலுக்குக் கொண்டுவரப்பட்டது.

பேரிடர்க் காலங்களில் மத்திய அதிகாரக்குவிப்புக்கு வழி செய்யும் இப்படியொரு சட்டம் முன்பு கிடையாது. 1897ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த சட்டம்தான் இருந்து வந்தது. சுனாமி தாக்குதல் ஏற்பட்டபிறகுதான், மன்மோகன் சிங் அரசு (ஐமுகூ-1) இந்தச் சட்டத்தை உரு வாக்கியது. அப்போது கூட, இந்திய அரசமைப்பு சாசனத்தில் ‘பேரிடர்’ (டிசாஸ்டர்) என்ற சொல் இல்லை என்பதால், செயலாக்கத்தில் சிக்கல் ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஆயினும் அந்தச் சொல் சாசனத்தில் சேர்க்கப்படாமலே இந்தச் சட்டம் தற்போது செயல்படுத்தப் பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் சுபோத் வர்மா (நியூஸ்கிளிக், மே 6).

இந்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்டீஎம்ஏ) தலைவர் பிரதமர்தான். பேரிடர்க்கால நடவடிக்கைக ளுக்கான அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக்கொண்டுள்ள இந்த ஆணையத்திற்கான நிர்வாகப் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உரியது. ஆக, மத்திய அரசின் இதர அமைச்சகங்களையும் கூட ஓரங்கட்டி, மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் நேரடி யாக ஆணையிடுகிற இந்த ஆணையத்தின் மூலம் தற்போது நாட்டின் முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் மோடி – ஷா கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டன என்றும் சுபோத் வர்மா குறிப்பிடுகிறார்.

கொரோனா நோய்க்குறி இருக்கிறதா என்று கண்டு பிடிக்கும் பரிசோதனைக் கருவிகளை மாநிலங்கள் கொள்முதல் செய்யக்கூடாது, மத்திய அரசு மூலமாகத்தான் பெற வேண்டும் என்ற ஆணையிலிருந்தே ஆணையத்தின் அதிகாரத் தலையீட்டைப் புரிந்துகொள்ளலாம்.

யாருக்காக?

அதிகாரக் குவிப்பு யாருடைய நன்மைக்காக? உத்தரப் பிரதேச மாநில அரசும், மத்தியப் பிரதேச மாநில அரசும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து தொழில்-வணிக நிறுவனங்களுக்கு விலக்களிக்கும் அவசரச்சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. “வேலையளிப்போர்” (இதைப் பெரிய முத லாளிகள் என்று மொழிபெயர்த்துக்கொள்க) அமைப்பு களின் பிரதிநிதிகள் மத்திய அரசுடன் நடத்திய காணொலிக் கலந்துரையாடலின்போது, நாடு முழுவதுமே இந்த விலக்கைக் கொண்டுவரக் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது முக்கியம் என்ற போர்வையில், அதை ஏற்கவும், தொழிலாளர் சட்டங்களை அர்த்தமற்றதாக்கவும் மத்திய ஆட்சியாளர்கள் தயாரா கவே இருப்பார்கள். அவர்களது கோரிக்கையைப் பெரும்பா லும் மத்திய அரசு ஏற்கும் வாய்ப்புள்ளது என்று ஊடகச் செய்திகள் ஊகிக்கின்றன. அப்படி மத்திய அரசின் ஆணை யாகவே வருமானால், தொழிலாளர் சட்டங்களில் கைவைக்க விரும்பாத மாநில அரசுகளும் அதற்குக் கட்டுப்பட வேண்டியிருக்கும்.

கடும் நிதிநெருக்கடியில் சிக்கியிருக்கும் மாநிலங்க ளுக்கு, அவர்களுக்குரிய ஜிஎஸ்டி மேல்வரி (செஸ்) வசூல்தொகையைக் கொடுத்தால் இந்நேரத்தில் ஓரளவுக்கு நிவாரணமாக இருக்கும். ஆனால் மோடி அரசு அதற்குத் தயாராக இல்லை என்று பொருளாதார வல்லுநர்களும் சமூக ஆர்வலர்களும் விமர்சிக்கிறார்கள். ஊரடங்கால் வீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சி விவாதங்களைப் பார்க்கிற மக்கள் இதையெல்லாம் கேட்கிறார்கள் – மத்திய அரசுக்குக் கேட்கவில்லை.

மேல்வரித் தொகை மறுக்கப்பட்டது மட்டுமல்ல, கொரோனா கால ஊரடங்கையொட்டி நாடு முழுவதும் மதுக் கடைகளை மூடிவிட ஆணையிடப்பட்டது. மதுக்கடைகள் திறப்பு பெரும்பகுதி மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி யுள்ளது. இந்த வாய்ப்பை முன்னிட்டாவது இனி நிரந்தர மாகவே மதுக்கடைகளை மூடிவிடலாம் என்று கூட தமிழ கத்தில் பெரும் பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்ப தெல்லாம் உண்மையே. ஆனால் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமலே பிறப்பிக்கப்பட்ட அந்த ஆணை யால் மாநிலக் கருவூலங்களுக்கான வருவாயில் 30 சத வீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்ட எந்த உதவியும் செய்யாமலே அந்த ஆணை பிறப்பிக்கப் பட்டது கடும் சிக்கலைத்தான் மாநிலங்களுக்கு ஏற்படுத்தி யிருக்கிறது.

கல்வி முதல் மின்சாரம் வரை

இவையெல்லாம் கொரோனா பிரச்சனையோடு சம்பந்தப்பட்டவை. அதற்குச் சம்பந்தம் இல்லாமலே வேறு சில அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகளையும் காணத் தவறக்கூடாது. எடுத்துக்காட்டாக, வாரணாசி இந்து பல் கலைக்கழகத்தின் மஹாமனா மாளவியா கல்வித்திட்டம் சார்பிலான இணைய வழி கருத்தரங்கம் ஒன்றைத் தொடங்கிவைத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கைவேத 

ஞானத்தின் அடிப்படையில் இருக்கும் என்று பேசினார். “கோவிட்-19: உலகச் சூழலில் இந்தியக் கண்ணோட்டம்” என்ற தலைப்பிலான அந்தக் கருத்தரங்கம் வேத மந்திரங் கள் ஒலிக்கத் தொடங்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

புதிய கல்விக்கொள்கை வரைவறிக்கையில் இப்படிப் பட்ட மதவாத உள்நோக்கங்கள் இருப்பதைக் கல்வியாளர்க ளும் மதச்சார்பின்மைக்காக நிற்போரும் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.அப்போது அப்படியெல் லாம் இல்லை என்று சொல்லிவந்தார்கள் ஆட்சியாளர்கள். இப்போது, இன்னும் அந்த வரைவறிக்கை அதிகாரப்பூர்வ மான கொள்கையாக அறிவிக்கப்படாத நிலையிலேயே அமைச்சர் இப்படிப் பேசியிருப்பது, எந்த நியாயங்க ளுக்கும் உட்பட்டு நடக்க இவர்கள் தயாராக இல்லை என்பதைத்தானே காட்டுகிறது?

மக்களும் மாணவர்களும் பதற்றத்தோடு இருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் அதைப்பற்றிய எந்தப் பார்வையும் இல்லாமல் ஜூலை 26ல் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள், எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிலை பற்றிக் கவலைப்படாத அந்த அறிவிப்பில் இருப்பது “இது எங்கள் அதிகாரம்” என்ற கண்ணோட்டம்தானே?

கொரோனா போராட்டத்தில் நாடே ஈடுபட்டுள்ள நிலை யில், தன்னாட்சியோடு இயங்க வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ‘ஜல் சக்தி’  அமைச்சகத்தின் கீழ் சென்ற மாதம் கொண்டு வந்ததிலும் அதே அதிகார அத்துமீறல்தான். தமிழகத்தின் உரிமை பாதிக்கப்படும் என்ற கவலையை வெளிப்படுத்திய எதிர்க் கட்சிகள் மீதுதான் தமிழக அமைச்சர் பாய்ந்தாரே யல்லாமல், மத்திய அரசின் முடிவை விமர்சித்து மூச்சு விடவில்லை.

அந்த அதிர்ச்சி போதாது, மின்சார அதிர்ச்சியையும் கொடுப்போம் என்று நினைத்தது போல, மின்சாரச் சட்டம் – 2020 அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரத் துறையில் பணம் குவிக்க வழி இருக்கிற பணிகளையெல்லாம் தனியா ருக்குத் திறந்துவிடவும், விவசாயத்திற்கான இலவச மின்சா ரம் போன்ற திட்டங்களைக் காலாவதியாக்கவும் இட்டுச் செல்கிற இந்தச் சட்டத்தை இப்போது செயல்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் கடிதத்தைத்தான் தமிழக முதலமைச்சரால் பிரதமருக்கு அனுப்ப முடிந்தி ருக்கிறது. இந்தச் சட்டம் பற்றி முகநூலில் பதிவு செய்துள்ள ஒரு அன்பர், இது இனிமேல், மாநில அரசுகளைப் புறக் கணித்துவிட்டு, மத்திய அரசின் கீழ் அனைத்து மாவட்டங்க ளும் கொண்டுவரப்படுகிற ஒரே நாடு என்ற கோட்பாட்டைத் திணிக்கிற வேலையாகவே இருக்கிறது என்று கூறி யிருக்கிறார். அதை மிகைக் கற்பனை என்று சொல்லிவிட முடியுமா?

கொரோனா போராட்ட அவசியத்தையும் அவச ரத்தையும் மக்கள் புரிந்துகொண்டுதான் ஒத்துழைப்பு அளித்துவருகிறார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மௌனிகளாக்கி மத்தியில் அதி காரங்களைக் குவிப்பதற்கான அவசியமும் அவசரமும் ஏன் வந்தது என்பதுதான் மக்களுக்குப் புரியவில்லை. ஜன நாயக இயக்கங்கள் அதைப் புரியவைக்கும். அப்போது மக்களின் சீற்றத்திற்கு முன் அதிகாரக்குவிப்புகள் ஊரடங்கிப் போய்விடும்.


 

;