tamilnadu

img

நூறு நாள் வேலையும் கண் துடைப்பும்...

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் கொரோனா கொடூர கோர தாண்டவத்தை எதிர்கொள்ள இயலாமல் விவசாய தொழிலாளர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.

ஏற்கெனவே 100 நாள் வேலைத் திட்ட விவசாய தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு 2 நாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கியது. யானைப் பசிக்கு சோளப்பொறி போன்ற இந்தத் தொகையும் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை. 2020 மார்ச் மாதத்தில் பணி வழங்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு மட்டுமே 2 நாள் ஊதியம் வழங்கப்ட்டுள்ளது. மார்ச் மாதத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் வேலை கிடைத்திருக்க வாய்ப்பில்லை. குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை எனும்போது சில குடும்பங்கள் மார்ச் மாதத்தில் வேலை செய்திருக்கும் நிலை. இதனால் தமிழகம் முழுவதும் பல லட்சக் கணக்கான விவசாய தொழிலாளர்கள் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர்.எனவேதான் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவும் அரசிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தியது.

அதன் விளைவாக ஊரக வளர்ச்சி இயக்குநர் தமது ந.க.48900/19/ம.தே.ஊ.வே.உ.தி1-2 நாள் 13.04.2020 (மின்னஞ்சல் செய்தி)யில் தமிழ்நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் செய்ய அறிவுரைகள் வழங்கி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு வேலைக்கு 5 முதல் 10 பேரை வைத்து குறிப்பிட்ட பணிகளான வரத்துக் கால்வாய் ஆழப்படுத்துதல், தனிநபர் நில மேம்பாடு, மரக்கன்று நடுதல், போன்ற பணிகளைச் செய்யவும் பணியின்போது ஒரு மீட்டர் சமூக இடைவெளி விடவும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு பணிக்கு 5 முதல் 10 பேரைத் தேர்வு செய்வது என்பது அநீதியானது. மேலும் செய்ய வேண்டிய வேலைகள் என பட்டியல் இடப்பட்டவை சாத்தியமற்ற பணிகள். விவசாய தொழிலாளர்கள் எல்லோருமே வேலையின்றிக் கொரோனா கொடூரத்தில் உயிர் வாழ்வதே கேள்விக் குறியாகியுள்ள நிலையில் அனைவருக்கும் வேலை வழங்குவதே உண்மையான சட்டப்பூர்வமான நிவாரணப் பணியாக இருக்க முடியும். 2020-21 புதியதாகத் துவங்கியுள்ள நிதியாண்டில் ஏரி, குளம், கண்மாய்களைத் தூர் வாரும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு ஏராளமாகக் கையில் வைத்துள்ள நிலையில் கண்துடைப்பாக சாத்தியமற்ற, குறைவான ஆட்களை வைத்துச் செய்யும் வகையிலான வேலைகளைத் தேர்வு செய்துள்ளதிலிருந்தே விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கூடாது எனும் தோரணையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2005ல் சட்டமாக்கப்பட்டதன் நோக்கமே அவர்களின் வாழ்வாதாரத்தை இலக்காக வைத்தே சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, சாத்தியமற்ற வேலைகளைச் செய்ய வற்புறுத்துவதெல்லாம் இக் கொரோனா காலத்தில் கொரோனாவைவிடக் கொடியதாகும்.
எனவே ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனரின் உத்தரவைத் திரும்பப் பெற்று வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அன்றாடம் வேலை கிடைக்கும் வண்ணம் ஏரி, கண்மாய், குளம் தூர் வாரும் பணிகளைச் செய்ய உத்தரவு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும் கொரோனா நிவாரண நிதியாக வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஒருமாத ஊதியத்தை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் அவசியம்.

===பெரணமல்லூர் சேகரன்===

;