tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை : உள்ளே இருப்பது என்ன?

பல தேசங்கள் இணைந்த ஒரு நாடு இந்தியா.  பல இனங்கள்,  பல மொழிகள்,  பல சமூகங்கள்,  பல பண்பாடுகள் என்ற  பன்முகத்தன்மையோடு  ஒன்றுபட்டு வாழ்கிறவர்கள் இந்திய மக்கள். இங்கே ஒரே மாதிரியான பாடத்திட்டம் தேவையற்றது.

நாடு தழுவிய கல்விக் கொள்கை தேவைதான் என்றால்,  அது ஏற்றத் தாழ்வில்லாமல்  எல்லாப் பள்ளிகளையும் தரமானதாக்குதல், பொருளாதார,  சமூக வேறுபாடுகள்  இல்லாமல்  எல்லாக் குழந்தைகளும்  அந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதை உறுதிப்படுத்துதல்,  போதுமான ஆசிரியர்கள் நியமனம், சோதனைக் கூடங்கள்,  விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட,  கல்வி பயில்வதற்கான அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்துதல், இதற்கான நிதியாதாரங்களை வலுப்படுத்துதல் ஆகியவை தொடர்பானதாக இருக்கலாமேயன்றி எதைப் படிக்க வேண்டும் என்பதில் இருக்கக்கூடாது. அதை அந்தந்த மாநிலம் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

1968ல் அன்றைய இந்திரா காந்தி ஆட்சியில் முதல் தேசியக் கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அனைத்துக் குழந்தைகளுக்குமான கட்டாயக் கல்வியை நிறைவேற்றுவது என்ற லட்சியத்தை அறிவித்த அந்தக் கொள்கையில்தான் மும்மொழித் திட்டமும் புகுத்தப்பட்டது. அதற்குத் தமிழகம் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தது. 1986ல் ராஜீவ் காந்தி புதிய கல்விக்கொள்கையைக் கொண்டுவந்தார். குறிப்பாக தலித், பழங்குடி சமூகங்களின் குழந்தைகளுக்கான கல்வியில் பாகுபாடுகளை அகற்றுதல் அதன் நோக்கமாகச் சொல்லப்பட்டது. அதுவும் மும்மொழித் திட்டத்தை வலியுறுத்தியது. பாரம்பரியம், கலாச்சாரம் என்ற பின்னணியைச் சொல்லி சமஸ்கிருதத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்பிக்க வழி செய்யப்பட்டது. 1992ல் நரசிம்மராவ் அதில் மாற்றங்கள் செய்தார். 2005ல் மன்மோகன் சிங் ஆட்சியில் அது செயல்படுத்தப்பட்டது. அதில்தான் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் புகுத்தப்பட்டன. 

நுழைவுத் தேர்வு, இந்தித் திணிப்பு ஆகியவற்றுக்கு இந்திரா காந்தியும் மற்ற காங்கிரஸ் பிரதமர்களும்தான் காரணம் என்று குற்றம்சாட்டும் பாஜக, அந்தத் தவறான திட்டங்களை விலக்கிக்கொள்ள கடந்த ஐந்தாண்டு காலத்தில் முன்வராதது ஏன்? இப்போதும் அதற்குத் தயாராக இல்லையே..?

தற்போது கஸ்தூரி ரங்கன் குழு அளித்துள்ள, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு ஆவணத்தில் இடைநிலைப்பள்ளி வரையில் இந்தியைக் கட்டாயப்பாடமாக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவே பின்னர், அமைச்சகத்தின் வலைத்தளத்தில் அந்த ஆவணம், இந்த ‘இந்தித் திணிப்பு’ குறித்த வரிகள் எடுக்கப்பட்டு மறுபடியும் வெளியிடப்பட்டது. அமைச்சரின் வாக்குறுதியை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்பதே கேள்வி.

இந்தித் திணிப்பு அல்லாமல் வேறு முக்கியமான பிரச்சனைகளும் புதிய கல்விக்கொள்கையில் இருக்கின்றன.இதுவரையிலான எல்லாக் கல்விக்கொள்கைகளுமே படிப்படியாகக் கல்வியை தனியார் மயமாக்குவதில்தான் தீவிரமாக இருந்து வந்துள்ளன. ரூபாய் நோட்டு எவ்வளவு கசங்கிப் போனதாக இருந்தாலும் அது அரசாங்கம் அச்சிட்ட நோட்டு என்பதால் அதுதான் நல்ல நோட்டு, அதுதான் மதிப்புள்ளது. நவீன குளிரூட்டப்பட்ட அச்சுக் கூடங்களில், இறக்குமதி செய்யப்பட்ட அச்சு எந்திரங்களில்,  இறக்குமதி செய்யப்பட்ட புதிய வண்ண மைகளில்,  இறக்குமதி செய்யப்பட்ட தரமான தாளில் எவ்வளவு  நேர்த்தியாக  அச்சிட்டாலும் அதை அச்சிடுவது தனியார் என்றால்  அது கள்ள நோட்டுதான்.  அதேபோன்றதுதான் நவீன கட்டடங்களில், நவீன வசதிகளோடு தனியார் நிறுவனங்கள் வழங்குகிற கல்வி. 

இந்தக் கல்விக் கொள்கை வரைவில் தற்போதைய 10ம் வகுப்பு,  பின்னர் 11, 12ம் வகுப்புகள், அதன் பின்னர் கல்லூரி  என்ற நடைமுறையை மாற்றி,  ஐந்தாம் வகுப்பு வரையிலான ஐந்தாண்டுகள்,  பின்னர் எட்டாம் வகுப்பு வரையிலான மூன்றாண்டுகள்,  பின்னர் நான்காண்டுகள் மேல் வகுப்புகள் என்று கொண்டுவரப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த வகுப்புகள் முடிகிறபோது பொதுத் தேர்வு என்று இல்லாமல்,  இடைக்காலத்திலேயே குழந்தைகளின் கற்றல் தேர்ச்சி நிலையைக் கவனித்து மதிப்பிடுகிற முறையைக் கொண்டுவரப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதாம். மேலோட்டமாகப் பார்த்தால் தேர்வுக் கொடுமையிலிருந்து குழந்தைகளை  மீட்கிற வரவேற்கத்தக்க ஏற்பாடாகத் தெரியும். ஆனால், தொலைநோக்கில் வசதியற்ற குடும்பங்களையும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளையும் வடிகட்டிப் பிரித்துத் தனியாக வேறு பள்ளிக்கு அனுப்புகிற ஏற்பாடு இதற்குள் இருக்கிறது.  இது குழந்தைகளிடையே  ஏற்றத்தாழ்வற்ற உணர்வை வளர்க்கப் பயன்படுமா?
நாளந்தா திட்டம்,  தட்சசீல திட்டம்  என்று இரண்டு திட்டங்கள் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நாளந்தா திட்டத்தின் கீழ் 100 ஆய்வுப்  பல்கலைக்கழகங்கள், 500 உயர் தரப்  பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். ஆய்வுகளில் கவனம் செலுத்தும் தனிப் பல்கலைக் கழகங்கள் தேவைதான்.  ஆனால் வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்களும் உள்நாட்டுத் தனியார்  நிறுவனங்களும்   அத்தகைய பல்கலைக்கழகங்களை நடத்த அனுமதிக்கப்படுமானால் அது ஏற்கத்தக்கதுதானா? ஏற்கெனவே சுமார் 200 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே கடை திறக்க அனுமதிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்கக் கல்வியை இங்கேயே பெறலாம் என்று எஸ்எம்எஸ் விளம்பரங்கள் வரத்தொடங்கிவிட்டன.
தட்ச சீலம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும்,  அல்லது ஒவ்வொரு மாவட்டத்திற்கு அருகிலும் குறைந்தது ஒரு உயர்தர உள்ளுறைக் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்படுமாம்.  அந்த மாவட்டத்தில் இருக்கும்  கல்வி நிறுவனங்களை  உயர்தரமானதாக மாற்றுவதற்கு மாறாக,  இப்படி  தனியாக உயர்தர நிறுவனத்தை  ஏற்படுத்தி மாணவர்களைப் பாகுபடுத்துவது எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்?

தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கை வரைவின் ஆங்கில ஆவணத்தில், பள்ளிக் கல்வியின் மூலம் சேவா,  அகிம்சா,  ஸ்வாச்சதா, சத்யா,  நிஷ்காம் கர்மா ஆகிய இந்திய மாண்புகள் வளர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  ஆங்கில ஆவணத்தில்  எதற்காக சமஸ்கிருதச் சொற்கள்? அந்தச் சொற்களின் ஆங்கில மொழியாக்கத்தைத்தானே சேர்த்திருக்க வேண்டும்? நுட்பமான இந்த மொழித்திணிப்போடு,  நுட்பமான மதவாதமும் கலந்திருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
இந்திய அரசு இந்த ஆவணத்தை நாட்டின் அனைத்து மொழிகளிலும் தனது முயற்சியிலேயே மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.  அவற்றை அந்த மொழிகளைச் சார்ந்த மக்கள் படித்துக் கருத்துக்கூற போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். தற்போதைய ஒரே ஒரு மாதக் காலக்கெடுவை விலக்கிக்கொள்ள வேண்டும்.
===அ. குமரேசன்===

;