tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர் துயரம் உடனடி, நிரந்தர தீர்வு என்ன? செ. முத்துக்குமாரசாமி

நாட்டின் மாபெரும் மனித அவலமாக வெடித்திருக்கிறது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை. ஏற்கனவே இந்தியாவில் அவர்களின் பிரச்சனை இருந்து வந்தாலும் தற்போதுதான் அது பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேசுகிற பொருளாக மாறியுள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான அரசின் அப்பட்டமான, குரூரமான  அக்கறையின்மையை இந்த ஊரடங்கு வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. சமூகத்தின் மனச் சாட்சியும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.  இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 13 கோடி, ஒவ்வோர் ஆண்டும் 90 லட்சம் பேர் புலம் பெயர்பவர்களாக உள்ளனர் என்று தவகல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என சமூக செயல்பாடடாளர்கள் கூறுகிறார்கள்.  

இந்தியா முழுவதும் வளர்ச்சி மாயைகளில் சிக்கித் தவித்த இந்த 30 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு என்ன காரணம்?  அரசின் கட்டுப்பாடுகள், போலீசின் அடக்குமுறை ஆகியவற்றைக் கடந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தங்களின் உயிரையும் பணயம் வைக்க துணிகிறார்கள் இவர்கள். சுட்டெரிக்கும் கோடை வெயிலில், காற்றோட்டமேயில்லாத சிமெண்ட் கலவை எந்திரத்தின் உருளைக்குள் அமர்ந்து 14 பேர் 1380 கி.மீ. தூரம் பயணிக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்விக்கு  “எங்கள் பசியின் வெப்பத்தைவிட கூண்டு வெப்பம் தாங்கிக்கொள்ளும் அளவுக்கே இருந்தது’ எனும் அவர்களின் பதில் எல்லோரையும் உலுக்கியது. இதுபோல ஆயிரம், பத்தாயிரம், லட்சம் பேர்களல்ல... கோடிக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கொரோனா தொற்றும், ஊரடங்கும் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

புலம் பெயர்வின் காரணம் என்ன?
அன்னிய முதலீடுகளும், வளர்ச்சித் திட்டங்களும், தீவிர நகர்மயமாக்கலும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது.  இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற மக்கள். விவசாயத்தின் சீரழிவு, சிறு, குறுந்தொழில்கள், கைத்தறி, நெசவு ஆகியவற்றின் படிப்படியான அழிவு ஆகிய நவீன தாராளமயத்தின் விளைவுகள் இவர்களை பல நூறு கிலோ மீட்டர்கள் விரட்டியடித்தன. நிலமற்ற கூலி - ஏழை விவசாயிகளும், விவசாயத்திலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட சிறு-குறு விவசாயிகளும் இப்பட்டியலில் இருந்தனர்.  துயரம் தோய்ந்த இன்றைய சூழலில், உடனடித் தீர்வுகள் தேவைப்படுகின்றன.

ஊரடங்கு முடிகிற வரை இவர்களை போன்ற சாமானியர்களுக்கு ரூ.7500 நேரடி நிவாரணமாக வழங்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதி சட்டத்தில் குடும்பத்தில் ஒருவருக்கே 100 நாள் வேலை என்றுள்ள நிபந்தனை அகற்றப்பட்டு போதுமான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும். நகராட்சிகளுக்கும் வேலைஉறுதி சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். 8 மணி நேர வேலை நாளை 12 மணி நேர வேலை நாளாக மாற்ற அரசு முனைவது தொழில், வேலை வாய்ப்புகளில் மூன்றில் ஒருவருக்கான வேலையை நிரந்தரமாக காலி செய்து விடும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் வேலை அதிகரிப்பிற்கு அரசு திட்டமிட வேண்டும்.

நிரந்தரத் தீர்வுகள்
இதைத்தொடர்ந்து நிரந்தர தீர்வுகளும் தேவை. உலகச் சந்தையை கைப்பற்றும் முதலாளித்துவப் போட்டியில் பொருள்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பது முக்கியமானது என்பதால் இதனை மனித உழைப்பிற்கான ஊதியத்தை குறைப்பதன் மூலமாகவே சாதித்துக் கொள்ள அரசு விரும்புகிறது. இதற்காக இந்த புலம்பெயர் தொழிலாளர்களை ‘ரிசர்வ் பட்டாளமாக’ வைத்துப் பராமரித்து வருகிறது. முதலாளித்துவம் இத்தகைய புலம்பெயர் தொழிலாளர் என்ணிக்கையை திட்டமிட்டு வளர்க்கிறது. மேலும் 14 மணி நேர வேலை, தரும் சொற்ப சம்பளத்தை எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கிக் கொள்வது, பணியில் விபத்து மற்றும் மரணம் ஏற்பட்டால் கொடுப்பதை வாய் மூடி வாங்கிக் கொள்வது என இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையே கார்ப்பரேட் முதலாளிகள் அரசுகளிடம் வலியுறுத்தும் ‘அமைதியான பாதுகாப்பான பணிச்சூழல்’. 

மத்திய அரசின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக் கனவும், 20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் கார்ப்பரேட் நலனை குறிக்கோளாக கொண்டவை. இதனால் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையப் போவதில்லை. மேலும் அதிகரிக்கவே செய்யும். *நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்ட இயக்கங்களுக்கு விரிந்து பரந்த ஒற்றுமையும், திரட்டலும் தேவைப்படுகிற காலமிது. அதில் புலம்பெயர் தொழிலாளர்களை அணிதிரட்டிட தொழிற்சங்க இயக்கங்கள் கூடுதல் முனைப்பையும், கவனத்தையும் செலுத்திட வேண்டும். இது எளிதான வேலை அல்ல. ஏனெனில் அவர்களை அணி திரட்டிட அவர்களின் மொழி, கலாச்சாரம், உள்ளிட்ட பிரத்யேக தன்மைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. சிஐடியு தொழிற்சங்க இயக்கம் அவர்களை அணிதிரட்டிட பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.  அவர்களையும் இணைத்த போராட்டமே நவீன தாராளமயக் கொள்கைகளை பின்னுக்குத் தள்ளுகிற போராட்டமாக அமையும்.

;