tamilnadu

img

ஈவிரக்கமின்றி உயிர்குடிக்கும் நுண்நிதி நிறுவனங்கள் - எஸ். வாலண்டினா

இந்தியா 29 மாநிலங்களைக் கொண்டது. 7 யூனியன் பிரதேசங்களை கொண்டது.இதில் தமிழகம், மக்கள் தொகையில் 7-வது இடத்திலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4-வது இடத்திலும், பரப்பள வில் 7-வது இடத்திலும் உள்ளது.  2011-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7, 21,47,030 ஆகும்.  இதில் ஆண்கள் 3,61,37,975-ம்  இதில் பெண்கள் 3,60,09,050 ஆகும். ஆனால் தமிழகத்தில் தற்போது 35 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடற்றவர்களாகவும் வீட்டு மனைப்பட்டா இல்லாதவர்களாகவும் உள்ளனர். சாலையோ ரங்களிலும் ஆற்றுப் புறம்போக்கு, குட்டை புறம்போக்கு, கோயில் புறம்போக்கு ஆகியவைகளில் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து வரும் வேதனை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வ தற்காக பெண்கள் சுய உதவி குழுக்களில், நுண்நிதி நிறுவ னங்களிடம் கடன் பெற்று குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை மக்களுக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்துடன் அரசு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெண்கள் குழுக்களை அமைத்து கடன் வழங்கி வருகிறார்கள். சுய உதவி குழுக்கள் (SHG) 10,15,20  பெண்கள் கொண்ட குழுக்கள் அமைத்து பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை துவக்கி அதில் மாதச் சந்தாவை சேமிக்கின்றனர். அச்சேமிப்பை தங்களுக்குள் வட்டிக்கு விட்டு அதனை முறையாக வசூலித்து வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் குழுக்களை விட தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் குழுக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இந்தியாவில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பற்றிய (MFI) உலக வர்த்தக வங்கியின் ஆய்வறிக்கை 2005ஆம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் 60 கோடி பேர் வறுமையில் இருப்பதாகவும் இவர்களின் கடன் தேவை 100 பில்லியன் டாலர் (பில்லியன் = 100 கோடி) என்கிறது. பெண்கள் குழுக்கள் மூலம் கடன் வசூலும் லாபமும் இருப்பதால் தான் சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்நுண்நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. மத்திய அரசும் இவைகளை ஊக்கப்படுத்துகிறது.

2015இல் நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகை சுமார் ரூ.48,882 கோடி யாகும். இதில் நுண்நிதி நிறுவனங்கள் மட்டும் ரூ.34,298 கோடியாகும். குறிப்பாக கிராமப்புற பெண்கள் ஆடு-மாடு வளர்ப்பு, சிறு வியாபாரம், கைத்தொழிலில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் வறுமையை தாங்களாகவே ஒழித்துக் கொள்வதற்கு உதவுவது தான் இதன் நோக்கம் என்று பெண்களுக்கான உலக வங்கி (women’s world Banking-WW) என்ற அமைப்பு கூறுகிறது. ஆனால் தெருவுக்கு தெரு ரெடிமேட் ஷோரூம், பல கடைகள், சிறு வியாபாரங்கள் வந்து விட்ட சூழலில் தொழில் நடத்தி கடனை கட்ட இயலாது. ஆடு,மாடுகள் வளர்ப்பில் குறைந்தது ஒரு வருடத்திற்கு பிறகுதான் வருமானம் வரும். ஆனால் கடன் வாங்கிய அடுத்த வாரத்தில் இருந்தே கடன் தவணையை கட்ட வேண்டும். எனவே கூலி வேலைக்கு சென்று வரும் பெண்களின் உழைப்பிலிருந்து தான் கடனை திரும்பப் பெறுகிறார்கள் என்று ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட மலேகா கமிட்டி கூறுகிறது. சந்தை மற்றும் வர்த்தக அணுகுமுறைக்கு உதவும் வகையில் சிறுசேமிப்பு, ஆயுள் காப்பீடு, பண பரிமாற்றம், கடன் ஆகியவை உள்ளடக்கிய சேவை என்கிறது நுண் நிதி நிறுவனங்கள். ஆனால் தொழில் மற்றும் சேவை  தொடர்பான சந்தையில் பொதுமக்களை இணைக்கா விட்டால் ”நவீன பொருளாதார முறையே நொறுங்கி விடும்” என்பதில் இருந்தே எம்எப்ஐ (MFI)  தத்துவம் துவங்குகிறது.

நிதி நிறுவனங்களின்  பின்னணியில் அமெரிக்கா

மதுரா நிறுவனத்தின் தலைவர் - தாரா தியாகராஜன்
கிராமவிடியல் -வினோத் கோஷ்வா
ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் - டாக்டர். ரமேஷ் பெல்லம்
கொண்டா, 
உஜ்ஜிவன் நிறுவனர் - சமித் கோஷ்   
பந்தன் நிறுவனர் - சந்திரசேகர் கோஷ் 

அனைவரும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்கள். இந்தியாவின் ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றின் முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் நபார்டு வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இயக்குனர்களாக உள்ளனர்.  சென்னையில் செயல்படும் ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் மணப்புரம் கோல்டு ஃபைனான்ஸிற்கு சொந்தமானது. இதற்கு அமெரிக்க ராக்பெல்லர் அறக்கட்டளையின் உதவியுடன் இயங்கும் லோக் கெட்டில் என்ற நுண்கடன் முதலீடு நிறுவனம் முதற் கட்டமாக 7 கோடி உதவியுள்ளது. 

உஜ்ஜிவன் நிறுவனத்தில் மொரீசியஸ் யுனைடெட் கார்ப்பரேஷன், நெதர்லாந்து டெவலப்மெண்ட் பைனான்ஸ் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைவர் வேல்ஸ் பென்ஷன் ஆகியோரின் முதலீடு செய்துள்ளது. கிராம விடியல் நிறுவனம் உலக அளவில் லாபகரமாக இயங்கி வரும் சிறு மற்றும் நடுத்தர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை தொழிலாகக் கொண்டுள்ள மைக்ரோ வெஸ்ட் என்ற நிறுவனத்திடமிருந்து நிதியினை பெற்றுள்ளது. பந்தன் நிறுவனம் சிங்கப்பூர் நிதி நிறுவனத்திடம் நிதி பெறுகிறது. தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமான ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் டெவலப்பிங் வேல்டு மார்க்கெட்டிங் (DWM) என்ற அமெரிக்க நிறுவனம் முதல் கட்டமாக 50 கோடி முதலீடு செய்துள்ளது.

கடன் கொடுக்க காரணம் என்ன?

ஆயிரம் ரூபாய் பென்ஷனுக்கும், ஆதார் கார்டுக்கும், ரேஷன் கார்டுக்கும் அப்பாவி மக்களை தெருத்தெருவாக அலைய விடும் இந்நாட்டில் இவ்வளவு பெரிய தொகையை ஏழைகளின் வீடு தேடி வந்து கடனாகக் கொடுக்க காரணமென்ன?  இவர்களுக்கு மக்கள் மீது ஏன் இந்த திடீர் அக்கறை? இல்லாதவன் கையில் கடனை கொடுத்து சந்தையில் விற்கும் பன்னாட்டு கம்பெனிகளின் தயாரிப்பு பொருட்களை வாங்க வைப்பது தான் நோக்கம். இச்சூழலில் தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் 389 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கல்விக் கட்டணம் கட்டுவதற்கு, திருமண செலவிற்கு, தையல் இயந்திரம் வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, சிறு தொழில் செய்வதற்கு, குடும்பச் செலவுகளுக்கு, சீமந்தத்திற்கு, கோயில்களுக்கு செல்ல, வாடகை கொடுப்பதற்கு, வாங்கிய கடனை அடைப்பதற்கு, மருத்துவ செலவிற்கு, ஆடு, மாடு வாங்குவதற்கு, நிலம் வாங்குவதற்கு விவசாயம் செய்வதற்கு, வீடு பராமரிப்பதற்கு, வாகனம் வாங்குவதற்கு போன்ற காரணங்களுக்காக கடன் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

துன்புறுத்தல்கள்

சுய உதவி குழு மற்றும் நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கான துன்புறுத்தல்களாக ஏராளமான வேதனைகளை சகோதரிகள் பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக 

  • குழுவிலிருந்து எடுத்துவிடுவார்கள் 
  • குழு பெண்களே திட்டுவார்கள் 
  • குழுத் தலைவர் கேவலமாக பேசுவார்
  • ஆதார் அட்டையில் மார்க் செய்து விடுவார்கள் 
  • ஓடி (OD) போடுவார்கள் 
  • ஒருவர் கட்ட தவறினால் குழுவில் உள்ள அனைவரும்  சேர்ந்து கட்ட வேண்டும் என கட்டாயப் படுத்துவார்கள்
  • கடன் அடைக்க வேண்டும் என துன்புறுத்துவது 
  • அசிங்கமாக திட்டி அவமானப்படுத்துவது 
  • இரவு நேரங்களில் போன் மூலம் திட்டுவது 
  • மனவலியை உருவாக்குவது 
  • போலீஸ் மூலம் தொந்தரவுகள் இருக்கும் 
  • கும்பல் கும்பலாக அவதூறு பேசுவது 
  • செருப்பால் அடிப்பேன் என பேசுவது 
  • அவுசாரி என திட்டுவது 
  • எங்களுக்கு தேவை பணம்; எப்படியாவது அதை கட்டு என்று கட்டாயப்படுத்துவது 
  • புதிய கடன் கொடுக்க மறுப்பது

தற்கொலைகள்

குறிப்பாக  விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உஷா கடன் பெற்றார் என்பதற்காக குழுவில் உள்ளவர்கள் அனைவரும் மிக மோசமாக அவரை பேசியதால் அவருடைய தந்தை தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார். மதுரை மாநகரின் சுந்தரி (40 வயது) எனது கடன் பிரச்சனையில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது மகளிடம் என்னால் வேலைக்குச் சென்று கடனை கட்ட முடியவில்லை, இந்த வருடத்தோடு படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப்  போய் கடனை கட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டு குழுவிற்கு சென்று பணம் கட்டி விட்டு திரும்பிய அரைமணி நேரத்தில் வீட்டிற்குள் சென்று பார்த்தால் என் மகள் தூக்குப்போட்டு இறந்து விட்டாள். அவளுக்கு படிக்க வேண்டும் என்று அதிக ஆசை.  வறுமையின் காரணமாக நான் பேசியது அவளைக் கொன்று விட்டது என்று மிக உருக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

பத்மாவதி இதயம்-ஜி என்ற நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குகிற போது  நிறுவனம் மளிகை பொருட்களை 1500 ரூபாய்க்கு கொடுத்து விடுவார்கள். இது மட்டுமல்ல ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் பலசரக்கு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இது என்னைப் போல் உள்ளவர்களுக்கு கடனை கட்ட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று பதிவு செய்துள்ளார் மதுரை புறநகர் - ஓடி (OD) போட்டால் வங்கியில் கடன் வாங்க முடியாது என  வழக்கறிஞர் வைத்து மிரட்டி, எழுதி வாங்கி போட்டோ எடுத்தார்கள். கடனை கட்டுவதற்காக என் மகளை 10-வதுடன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்புகிறேன் என்கிறார் ஒரு சகோதரி. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது கடனை கட்ட வேண்டும் என்று நுண் நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தினார். அப்போது கடன் கட்டுவதற்கான காலக்கெடு கேட்டு போராட்டத்தை நடத்திய போது பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டக் களம் கண்டார்கள். வலுவான போராட்டத்திற்கு பிறகு மாவட்ட நிர்வாகங்கள் ஆறுமாத காலம் கடன் தவணை கட்டுவதற்கு அவகாசம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது

கடந்த காலங்களில் டெல்டா மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்ட போது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற சகோதரி தனது கைக் குழந்தையை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த கொடுமையை நாம் அறிவோம்.  வேலூர் மாவட்டத்தில் பணத்தை கொடு அல்லது படுத்து பணத்தை கட்டு என்று பகிரங்கமாக நுண்நிதி நிறுவனங்கள் பேசிய காரணத்தால் 13 சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்த கொடுமை நடைபெற்றது. இதனையொட்டி நாம் தொடர்ந்த வழக்கில் நுண்நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த ஒரு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து விஜய் மல்லையா, அதானி போன்றவர்களும், இன்னும் பல பெரும் பணக்காரர்களும் ஏமாற்றி வரும் சூழலில், வாராக் கடன்களை வசூல் செய்வதற்கு தகுதியில்லாத அரசு. ஏழை எளிய பெண்களை கடன் சுமையிலிருந்தும் வறுமையிலிருந்தும்  பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசுக்குத்தான்  இருக்கிறது என்பதை உணரவில்லை. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருப்பூரில் சுய உதவிக் குழுக்களுக்கான கோரிக்கை மாநாட்டை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை உருவாக்கி அரசுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தேவை சிறப்புச் சட்டம்

மத்திய, மாநில அரசுகள் குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன்களை கூடுதலாக அரசு சுய உதவி குழுக்களுக்கு வழங்கி தொழில் பயிற்சியும் கொடுக்க வேண்டும். பயிற்சியின் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை அரசே வாங்கி விற்பதற்கான சந்தை ஏற்பாடுகளையும் செய்யும் என்றால் இது போன்ற நுண்நிதி நிறுவனங்களிடம் பெண்கள் சிக்கி தவிக்க வேண்டிய அவசியமில்லை. ஓரளவுக்கு பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இருக்கும் வாய்ப்பான சுய உதவி குழுக்களை அரசு ஊக்கப்படுத்துவதும் பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

  • சுய உதவி குழுக்களுக்கான தனி கவுண்டர்களை வங்கியில் உருவாக்க வேண்டும்.
  • 4% வட்டிக்கு கடனை, கூடுதல் சுழல் நிதியும் வழங்க வேண்டும்.
  • சிறு தொழில்களுக்கான பயிற்சிகளை அரசு பொறுப்பில் கொடுக்க வேண்டும்.
  • பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசே வாங்கி விற்பதற்கான சந்தை ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
  • உயர்நீதிமன்ற உத்தரவின்படி நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்த அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
  • பேரிடர் காலங்களில் கடனை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தள்ளுபடி செய்யவேண்டும்.  
  • பெண்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளித்திட வேண்டும்.
  • கடன் பெறுவதும், வாங்கிய கடனை திருப்புவதும் மட்டுமே குழுக்களின் பணி என கருதாமல் சமூகத்தில் நிலவும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மற்றும் சமூக           முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் முறையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

 

மேற்கண்ட நடவடிக்கைகளை ஒன்று சேர்ந்து போராடி வெற்றி பெற வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை செப்டம்பர்-14 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்துகிறது.

ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. 

கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

 



 


 

;