tamilnadu

img

மக்களுக்கெல்லாம் தலைவராகவும், தலைவர்களுக்கெல்லாம் தொண்டராகவும்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.உடையப்பன் (13-5-2020)அன்று கட்சிப் பணியில் இருந்து கொண்டிருந்த சூழ்நிலையிலேயே மாராடைப்பால் காலமானார்.இந்த அதிர்ச்சி யான செய்தி அறிந்து 13ந் தேதி மாலையி லிருந்தும்,மறுநாள் 14ந் தேதி இறுதி நிகழ்ச்சி முடியும் வரை கொரோனா நோய் தொற்றின் இந்த நெருக்கடியான சோதனைகளையும் தாண்டி கட்சியின் தலைவர்கள்,தோழர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்து இருக்க கூடிய பிரமுகர்கள்,வர்த்தக சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் என ஏராள மானவர்கள் மக்கள் வெள்ளமாய் குவிந்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரான எம்.உடையப்பன்  அவர்கள், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர் என சொல்வதை விட தன்னை கரைத்துக் கொண்டவர் என சொல்லுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

1950ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி தாலுகா, மறமடக்கி என்னும் சிற்றூரில் மாணிக்கம்- செல்லபாக்கியம் ஆச்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.இவர் மறமடக்கியிலிருந்து பிழைப்பு க்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெங்க ரை எனும் கிராமத்திற்கு சென்று அங்கு பெட்டிக் கடை நடத்தி வந்தார்.  பிறகு காங்கிரஸ் கட்சியின் உறுப்பின ராகவும், 1971-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவருமான ஏ.ஆர்.மாரிமுத்துவுக்கு  தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்.அப்போது இவரை வெங்கரையி லிருந்த அவரது நண்பர் தோழர் பழனிச்சாமி, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைக்க பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் தோழர் பழனிச்சாமிக்கும்,உடையப்பனுக்கும் ஒரு  உடன்பாடு ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் இந்த தேர்த லில் வெற்றி பெற்றால் காங்கிரஸ் கட்சியில் தொடர்வது என்றும்,தோற்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவது என்பது தான் அந்த உடன்பாடு.  அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பா ளரை திமுக கூட்டணி வேட்பாளர் தோற்க டித்தார்.

அப்போது ஒப்பந்தத்தின் அடிப்படை யில் தோழர் உடையப்பன்  கம்யூனிஸ்ட் கட்சி யில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். பிறகு 1972-ம் ஆண்டு வியாபார நிமித்த மாக கறம்பக்குடிக்கு சென்று குடியேறினார்.கறம்பக்குடிக்கு வந்த பிறகு அவர் “எம்.ஸ்டாலின்” என்ற புனைப் பெயருடன் மார்க்ஸ் மன்றம் என்கிற ஒரு அமைப்பை துவக்கி நடத்தி வந்தார்.இந்த மன்றத்தை துவக்கி வைக்க கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தோழர்கள் து.ராஜா,சி.மகேந்திரன்,ப.மாணிக்கம், எஸ் நாகரத்தினம் உள்ளிட்ட தலைவர்கள் வந்து சிறப்பித்தனர்.  1973-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தோழர் உடையப்பனுக்கும் பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த கமலா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு ஞானவடிவேலு, குமரேசன் என்ற இரு மகன்களும் அமுத பாரதி,ராணி,செல்வி உள்ளிட்ட மூன்று மகள்க ளும் பிறந்தனர். பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் இவர்களை சிறப்பாக வளர்த்தெடுத்து அவர்களுக்கு திருமணத்தையும் நடத்தி முடித்தார் தோழர் உடையப்பன்.

 1977-ம் ஆண்டு அதிமுக ஆட்சியை பிடித்தது.எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்.கடுமையாக உயர்த்தப்பட்ட விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் கைதாகி 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 1978-ல் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தோழர்.எம்.உடையப்பன்,தங்கராசு,ராமையா உள்ளிட்ட தோழர்களுடன் பல நூற்றுக்கணக்கான உழைப்பாளி மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்  கட்சியில் இணைந்தனர்.  பின்பு கறம்பக்குடி ஒன்றிய பகுதி முழு வதும் கிராமம் கிராமமாக மார்க்சிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து கொண்டார். கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் இவரின் உழைப்பால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு வளர்ச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக 1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தோழர் உடையப்பனை கட்சி முடிவு செய்து கள மிறக்கியது.

அப்போது அந்த தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானார்.பிறகு 2001 தேர்தலி லும் வெற்றி பெற்று  இருமுறை பேரூராட்சி தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவரது பதவிக்காலத்தில் கடுமையான தீண்டாமைக் கொடுமை இருந்த சூழ்நிலை யிலும், இவர் சமூகத்தை சார்ந்தவர்கள் இவர் மீது வெறுப்பை கக்கிய போதும் அதைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் தலித் மக்கள் வாழ் நிலை மீது மிகுந்த கவலை கொண்ட இவர் தலித் மக்கள் பலருக்கு பேரூராட்சி பகுதியில் வியாபாரம் செய்வதற்கு கடை அமைத்து கொடுத்தார். 2006-ம் ஆண்டு குடியிருப்போர் சங்க மாநாடு மாநிலத்திலேயே முதன் முதலாக புதுக்கோட்டையில் நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.மாநிலத்தி லேயே புதுக்கோட்டையில்நடைபெற்ற மாநாட்டில் தான் 10,000 பேர் கலந்து கொண்டனர். தோழர் எம்.உடையப்பன் உள்ளிட்ட இன்னும் பிற தோழர்களின் ஏற்பாட்டில் நடந்த இந்த மாநாடு மாநிலம் முழுவதும் பேசப்பட்டது.

குறிப்பாக இதில் கறம்பக்குடி பகுதியில் இருந்து மட்டும் சுமார் 2,000பேர் கலந்து கொண்டனர்.இதில் 13 வாகனங்களில் சிறுபான்மை மக்களான முஸ்லிம் மக்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத் தக்கது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் ரூபாய் 20,30 என குறைவான கூலி வழங்கப்பட்டதை எதிர்த்தும்,முழு சம்பளமான 80 ரூபாயை கோரியும் நடந்த கூலிக்கான போராட்டம் மழை யூரில் நடைபெற்றது.இதில் அப்போதைய மாநில தலைவர் ஜி. மணி கலந்து கொண்டார். பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்திற்கு சவேரியார் பட்டினத்தைச் சேர்ந்த  தொழி லாளர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி இறப்பு,காயம் என ஏற்பட்டது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிதி திரட்டி வழங்கிய தோடு அரசு நிவாரண நிதியும் பெற்றுக் கொடுத்து அம்மக்களோடு மக்களாக நின்று மக்கள் தலைவராக உயர்ந்தவர் தோழர் உடையப்பன்.  

100 நாள் வேலைத்திட்டத்தை நகர் பகுதிக்கும் விஸ்தரிப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டி நடந்த போராட்டத்தில், தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கலந்து கொள்ள வைத்து அந்த வீரியமிக்க போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.  கறம்பக்குடியில் அரசுப் பள்ளிக்கு செல்வ தற்கு பாதை இல்லாமல் இருந்த சிறுபான்மை, அருந்ததிய மாணவர்களுக்கு ஆதரவாக, இரவோடு இரவாக ஆக்கிரமிப்பை அகற்றி அதில் சாலை அமைத்துக் கொடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்து தோழர் உடையப்பன் உள்ளிட்ட 27 தோழர்களை கைது செய்து பத்து நாட்கள் சிறையில் அடைத்தார்கள்.11 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட அந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாத கார ணத்தால் அனைத்து தோழர்களும் வழக்கிலி ருந்து விடுவிக்கப்பட்டார்கள்.இந்த வழக்கை ஒருங்கிணைத்து முன்னெடுத்து சென்றதில் தோழர் உடையப்பனின் பங்கு மகத்தானது.  

இவர் செட்டியார் சமூகத்தை சார்ந்தவ ராக  இருந்தாலும் தலித் பகுதியினரின் உரி மைக்காகவும்,அவர்களின் விடுதலைக்காக வும், தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் மார்க்சிய கொள்கை நிலையில் நின்று உறுதியாக போராடியதால் செட்டியார் சமூகத்தை சார்ந்த பல பேர் இவரை ‘தலித் செட்டியார்’ என்றே அழைத்துள்ளனர்.  ஒன்றாக இருந்த மாவட்ட அமைப்பின் போதும், பிறகு தனியாக புதுக்கோட்டை மாவட்ட குழு உருவான பின்பும் அந்த மாவட்டத்தில் முன்னோடி தலைவர்களாக இருந்து வழிகாட்டி செயல்பட்ட தோழர்கள் பெரி.குமாரவேல், ப.சண்முகம்,ஆர்.கருப்பையா,ஜியாவு தீன்,எம்.சின்னதுரை இப்போது மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் எஸ்.கவி வர்மன் உள்ளிட்ட மூத்த தலைவர்களோடும், இளம் தலைவர்களோடும் இரண்டறப் பழகி பணியாற்றிய அனுபவமும்,பெருமையும் அவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 இத்தகைய அனுபவமும், பெருமையும் இன்றைக்கு கட்சியில் பணியாற்றி கொண்டு இருக்கும் மூத்த தோழர்களுக்கும்,இளம் தோழர்களுக்கும் பெரும் உந்து சக்தியாக அமையும்.தோழர் எம்.உடையப்பன் அவர்கள் தன்னுடைய கடைசி மூச்சு வரை கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும்,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும்,தீண்டாமை ஒழிப்பு மாவட்ட தலைவராகவும் கட்சியின் தினசரி நாளேடான தீக்கதிர் மற்றும் கட்சியின் வெளி யீடுகள் மற்றும் பிரசுரங்கள் என விற்பனை செய்கிற அந்த பணியையும் இன்னும் பிற அரங்கங்ககளுக்கு உதவி செய்கிற பணிக ளையும் தொய்வின்றி சிறப்பாக நிறைவேற்றி யவர் என்பது குறிப்பிடத்தக்கது.  எல்லாவற்றுக்கும் மேலாக தலை வர்களுக்கெல்லாம் தொண்டராகவும், தொண்டர்களுக்கெல்லாம் தலைவராகவும் வாழ்ந்து காட்டிய ஒரு மிகச்சிறந்த தலைவர் தோழர் எம்.உடையப்பன் ஆவார்.அவர் பயணித்த அந்த பாதையில் நம் இயக்கத்தை முன்னெடுப்போம் பலபடுத்துவோம்...

 -ஐ.வி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ (எம்)

;