tamilnadu

img

நகைக்கடன்... கடுமையைத் தளர்த்துமா அரசு?

அரசுடமையாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் அடகுவைத்த நகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகையை வட்டியுடன் செலுத்தி மீட்க முடியாவிட்டால் "அம்மா சொல்லுறத கேளுங்க" என்று இலவச ஆலோசனை வழங்கும் விளம்பர நிகழ்ச்சியினை தினசரி தொலைக்காட்சிகளில் பார்க்காதவர் இருக்க வாய்ப்பில்லை. அதாவது நகையை தங்களிடம் விற்பதாக இருந்தால் கடன் தொகையை தாங்களே செலுத்தி விடுவதாகவும், நிகரத் தொகையை கொடுத்துவிடுவதாகவும் விளம்பரம் பேசும்; - அதுவும் இன்றைய மார்க்கெட் விலைக்கே அடமானம் வைத்துள்ள நகையை வாங்கிக் கொள்வதாகவும் விளம்பரத்தின் குரல் ஒலிக்கும்.

ஆனால் உண்மையில் நடப்பதென்பது தலைகீழாக இருக்கும்.பொதுவாக மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை அவசரத் தேவைக்காகவும், பல்வேறு காரணங்களை முன்வைத்தும் வங்கிகளில் அடமானம் வைத்துக் கடன் பெறுவது அன்றாடம் நடப்பது தான். வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்களுக்கான தொகையை வட்டியுடன் சேர்த்து 12 மாதங்களுக்குள் செலுத்தி நகையை மீட்க வேண்டும். இல்லையெனில் வங்கியின் விதிகளின்படி நகை ஏலம் விடப்பட்டு கடன் தொகைக்கு சரி செய்யப்படும். நிகர தொகை எதுவும் இருந்தால் கடன்தாரரின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.நகைக் கடன் முதல் தடவை பெறும்போது கடன் பெறுபவர் நகை மதிப்பீட்டுக் கட்டணமாக, பரிசீலனைக் கட்டணமாக - கடன் தொகைக்கு ஏற்றவாறு செலுத்த வேண்டும். உதாரணமாக ஒரு லட்சம் நகைக் கடன் பெற வேண்டுமெனில் நகை மதிப்பீட்டுக் கட்டணமாக ரூ.300ம், பரிசீலனைக் கட்டணமாக ரூ.590ம் செலுத்த வேண்டும்.

நகை அடமானக் கடனை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடியாத நேரங்களில் தவணை முடியும் காலம் வரை உள்ள நாட்களைக் கணக்கிட்டு வட்டியை மட்டும் செலுத்தி நகைக் கடனை புதுப்பித்துக் கொள்ளும் வசதி வங்கிகளில் உண்டு. அவ்வாறு புதுப்பிக்கும் போதும், நகை மதிப்பீட்டாளர் கட்டணம், பரிசீலனைக் கட்டணம் மீண்டும் செலுத்த வேண்டும். ஓராண்டுக்கு முன்னதாக அடமானம் வைக்கப்பட்ட நகை வங்கியின் பாதுகாப்பில்தான் உள்ளது. வங்கிப் பெட்டகத்தில் உள்ள நகையின் தரமோ, எடையோ குறைவதற்கும் கடன்தாரர் சம்பந்தமான விபரங்கள் மாறுவதற்கும் எந்தவொரு வாய்ப்பும் இல்லாத போது ஒரு வருடம் முடிந்து கடனைப் புதுப்பிக்கும் போதும் மதிப்பீட்டாளர் கட்டணம், பரிசீலனைக் கட்டணம் செலுத்த வேண்டுமென்பது கடன்தாரரின் பொருளாதார சிரமத்தை மேலும் அதிகமாக்கும் செயலாகும்.
ஏற்கனவே விவசாயச் செலவுகளுக்காக நகையை அடமானம் வைத்து கடன் பெறும் வசதி கடந்த 1.10.2019 முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. 7 சதமான வட்டி விகிதத்தில் அதுவும் குறிப்பிட்ட கால வரம்புக் குள் செலுத்தினால் 3 சதம் வட்டி மானியம் போக 4 சதம் வட்டி செலுத்தினால் போதும் என்ற நடைமுறை தற்போது இல்லை. நகைக் கடன் மூலம் விவசாயக் கடன் பெறுவதில் முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லி ரத்து செய்யப்பட்டது. தற்போது நகைக் கடன் பெறும் ஒருவர் பெண்ணாக இருந்தால் 10.6 சதமும், ஆணாக இருந் தால் 10.7 சதவீதமும் வட்டி செலுத்திட வேண்டும். குறைந்தபட்சம் 2 பவுனுக்கு மட்டுமே நகைக் கடன் வழங்கப்படும்.எனவே, நகைக் கடன் பெறுவதில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்படும் மதிப்பீட்டாளர் கட்டணம், பரிசீலனைக் கட்டணம் சம்பந்தமாக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கணக்கில் கொண்டு மாற்றம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக, இரண்டாவது முறையும் மதிப்பீட்டாளர் மற்றும் பரிசீலனை கட்டணங்கள் வசூலிப் பதை நிறுத்த வேண்டும். நகை அடமானக் கடன் மூலம் விவசாய செலவுகளுக்காக வழங்கப்பட்ட கடன் மீண்டும் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட வேண்டும்.

சாதாரண ஏழை- எளிய மக்களும் பயன்பெறும் வகையில் ‘குறைந்தபட்சம்’ என்ற வரம்பை தளர்த்திட வேண்டும்.அரசு வங்கிகளின் சேவை அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை மத்திய அரசும், வங்கி நிர்வாகமும் பரிசீலித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

===சி.ராமகிருஷ்ணன்===
சிபிஎம் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்

;