tamilnadu

img

குறைந்து கொண்டே போகும் நிலத்தடி நீர்

ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு நீரை எடுத்துக் கொண்டே போனால் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மட்டம் 5 முதல் 10 அடி குறைந்து கொண்டேதான் போகும்.

தமிழ்நாட்டின் மொத்த பரப்பு 1,30,058 சதுர கிலோ மீட்டர். வருட சராசரி மழையளவு 750 மி.மி முதல் 800 மி.மீ வரை. ஆனால் குறைந்த அளவான 750 மி.மீ (75செ.மீ) எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26.44 மில்லியன் கன அடி. மொத்த பரப்பான 1,30,058 சதுர கிலோ மீட்டருக்கு 441.33 டிஎம்சி தண்ணீர் மழை நீராக பெறுகிறோம். (10 டிஎம்சி தண்ணீர் என்பது 1000 மி.க.அடி). இதில் 50 சதவீதம் தண்ணீர் ஆவியாகி விடுகிறது. ஆகவே மழையினால் நமக்கு கிடைக்கும் நீர் 3441.33x1/2 = 1720.66 டிஎம்சி.

நீர் ஆதாரங்கள்

ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு எல்லா உபயோகத்திற்கும் சேர்ந்து தேவைப்படுவது 100 லிட்டர் (3 க.அடி). ஒரு ஆண்டுக்கு தேவைப்படுவது 365x3= 1095 க.அடி (சுமார் 1000 க.அடி). ஒரு ஆளுக்கு 1000 க.அடி என்றால் 1000 பேருக்கு 10,00,000 க.அடி (1.மி.க.அடி). 10 லட்சம் பேருக்கு 1000 மி.க.அடி (1டிஎம்சி).ஒரு கோடி பேருக்கு 10 டிஎம்சி.தமிழ்நாட்டின் ஜனத் தொகையான சுமார் 8 கோடி பேருக்கு 80 டிஎம்சி அல்லது அதிகபட்சமாக 100 டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் தேவை. இந்த நீர் தேவையை பொதுவாக ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் மூலமும் நாம் பூர்த்தி செய்கிறோம்.  அவற்றில் ஆவியானது போக 1720.66 டிஎம்சி தண்ணீர் மூலம் விவசாயம் மற்றும் நிலத்தடி நீராகவும் சென்றடைந்து மீண்டும் அதை பயன்படுத்துகிறோம். 

உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்

விவசாயத்தில் முக்கியமாக கரும்பு விவசாயம் செய்ய 365 நாளும் தண்ணிர் தேவை. ஜனவரி முதல் ஜூன் வரை கோடை காலங்களிலும் அதிக தண்ணீர் தேவைப்படு கிறது. அந்த நாட்களில் நிலத்தடி நீர் தான் உறிஞ்சி எடுக்கப்படு கிறது.  ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய சுமார் 8000 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி 2.65 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. (2015-16ன்படி). இந்த பரப்ப ளவில் 15.6 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய 437 டிஎம்சி தண்ணீர் தேவை. இந்த தண்ணீர் 365 நாட்க ளுக்கும் தேவை. மழைக்காலங்களில் மற்றும் நீர்ப்பாசன மும் இருந்தாலும் சுமார் 50 சதவீதம் நிலத்தடி நீர் எடுத்தால்தான் முழுமையாக மகசூல் எடுக்க முடியும். நம்மை அறியாமலே சுமார் 200 டிஎம்சி தண்ணீர் கரும்பு விவசா யத்திற்காக மட்டும் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்திக் கொண்டு வருகிறோம்.  விவசாயிக்கு தண்ணீர் (கனிமம்தான்) இலவசம். மின்சாரமும் இலவசம்.  அதனால் வருடம் முழுவதும் பரா மரிப்பு செய்து ஒரு ஏக்கருக்கு சுமார் 2 முதல் 2.5 டன் (2000 கிலோ) முதல் 2500 கிலோவரை சர்க்கரை உற்பத்தி செய்ய முடிகிறது. ஆனாலும் கரும்பு விவசாயிக்கு லாபம் ஒன்றுமில்லை. அதனால் நிலத்தடி நீர், மின்சாரம் போன்றவைதான் வீணாக்கப்படுகிறது. அதேபோல் வாழை விவசாயத்திற்கும் 365 நாட்கள் தண்ணீர் தேவை. அதற்கும் ஜனவரி முதல் ஜூன் வரை நிலத்தடி நீர்தான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. காற்றினால் மரம் சாய்ந்துவிட்டால் அரசாங்கத்திடம் நிவாரணம் கேட்கின்றனர். ஜனவரி முதல் ஜூன் வரை சுமார் 2,00,000 ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. அதற்கு நிலத்தடி நீர்தான் தேவைப்படுகிறது. அதற்கு பதிலாக மாற்று விவசாயமான சோளம், மக்காச்சோளம், காய்கறிகள் பயிரிடலாம். தோட்டப் பயிர்களும், பலன் தரும் பயிர்களும் குறிப்பாக பனை மரங்க ளும் நடலாம். இதற்கெல்லாம் விவசாயிகளிடம் விழிப் புணர்வு இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்லை.

நிலத்தடி நீர் எடுக்கப்படும் அளவு
1. கரும்பு விவசாயத்திற்கு எடுக்கப்படும் நீரின் அளவு 218.5 டிஎம்சி

2. வாழை விவசாயத்திற்கு எடுக்கப்படும் நீரின் அளவு 218.5 டிஎம்சி

3. சீமைக் கருவேல் மரங்களால் உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் 200.00 டிஎம்சி அதிகப்படியாக உறிஞ்சப்படும் நீர் மொத்தம் 637.00 டிஎம்சி. 

ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு நீரை எடுத்துக் கொண்டே போனால் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மட்டம் 5 முதல் 10 அடி குறைந்து கொண்டேதான் போகும். இதற்கு உடனடி தீர்வு கரும்பு, வாழை விவசாயத்தை படிப்படியாக குறைத்து இன்னும் 2, 3 ஆண்டுகளில் விவசாயி களே முன்வந்து அதற்கு மாற்றாக நெல் (3 மாதம்தான்) மற்றும் பயறு வகைகள் பயிரிட வேண்டும். நாம் 1000 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டி நீர் தேக்கி நிலத்தடி நீரை பெருக்கினாலும் இந்த விவசாயத்தினால் எடுக்கப்படும் நிலத்தடி நீரைப்பார்த்தால் என் 75 வயதிலும் வருத்தம்தான் ஏற்படுகிறது. குடிநீர் தேவையே மொத்தம் 100 டிஎம்சி தான். அதுவும் நம் உபயோகத்திற்காக எடுப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. 

விழிப்புணர்வு தேவை

அதிக பட்சமாக உறிஞ்சப்படும் 637.00 டிஎம்சி நீரை மட்டும் காப்பாற்றினாலே நம் தமிழகத்திற்கு என்றுமே பஞ்சம் வராது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, குடிநீருக்கு தண்ணீர் இல்லை என்பதெல்லாம் நாமே செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட விழிப்புணர்வு இல்லா விளம்பரம். உதாரணமாக சென்னை ஜனத்தொகை 70,00,000 பேருக்கு 7 டிஎம்சி அல்லது 10 டிஎம்சி தண்ணீர் தேவை. அங்குள்ள ஏரிகளின் கொள்ளளவு 10 டிஎம்சிக்கும் மேல் உள்ளது. மேலும் வீடுகளிலும் போர்கள் உள்ளன. சுமார் 80,000 போர்களில் உள்ள தண்ணீர் எல்லா தேவை களையும் பூர்த்தி செய்து விடும். ஆனால் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. கரும்பு, வாழை விவசாயிகள் தயவு செய்து உடனடியாக மாற்று விவசாயம் செய்யுங்கள். நிச்சயம் அதிக வருமானம் கிடைக்கும். சீமைக்கருவேல் மரங்களை அடியோடு அகற்ற உறுதியேற்போம். ஜனவரி முதல் ஜூன் வரை நெல் விவசாயம் தவிர்த்து காய்கறி, பயறு வகைகள், சோளம் போன்ற மாற்று விவசாயம் செய்யுங்கள். தற்போது 75 வயதாகும் நான் வேளாண் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவன். நானும் ஒரு விவசாயிதான். 

நம்நாட்டில் உத்தரப்பிரதேசம் பெரிய மாநிலம். அங்கு கரும்பு விவசாயம் முதன்மை இடத்தை பெறுகிறது. தமிழகம் தான் அதிகம் கரும்பு விவசாயம் செய்யும் இரண்டாவது மாநிலம். எனவே எல்லா விவசாயிகளும் ஒன்றுபட்டு தமிழ்நாட்டை முன்னேற்றுவோம் என உறுதிமொழி ஏற்போம்.

கட்டுரையாளர் : வேளாண் பொறியாளர் (ஓய்வு), போடி நாயக்கனூர் 
 

 

;