tamilnadu

img

பயிர் காப்பீடு திட்டம்... கைவிரிக்கும் மோடி அரசு

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் மற்றும் இழப்பீட்டுத் தொகையில் மத்திய மோடி அரசு தனது பங்கை ஏற்கனவே வழங்கி வந்த 50 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது நட்டத்தை ஈடு செய்யும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு முதல் மாவட்ட அளவில் மகசூல் அறுவடை பரிசோதனை மூலமாக பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தாலுக்கா அளவில் மகசூல் அறுவடை பரிசோதனை மூலமும் பின்னர் வட்டார அளவில் பரிசோதனை மூலமாகவும் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2012-ல் கிராம அளவில் மகசூல் அறுவடை பரிசோதனை மூலம் தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரானதும் இந்த காப்பீட்டு திட்டத்தில் ஒவ்வொரு பயிருக்கும் நிர்ணயிக்கப்பட்ட சாகுபடி செலவை பயிருக்கான இழப்பீட்டு தொகையாக நிர்ணயம் செய்து அந்த தொகையில் சதவீத அடிப்படையில் பிரீமியத்தொகை வசூல் செய்யப்பட்டது.

அதன்படி குறுவை சாகுபடி பயிர்களுக்கு 11 சதவீத பிரீமிய தொகையை நிர்ணயித்து அதில் விவசாயிகளிடம் இருந்து 2 சதவீத பிரீமிய தொகையை பெற்று மீதமுள்ள 9 சதவீத பிரீமியத் தொகையில் மாநில அரசு 4.5 சதவீதமும் செலுத்தும் வகையில் திட்டங்கள் அமைந்தன. இதேபோன்று குறுவைப் பருவத்தில் சம்பா, எண்ணைவித்து பயிர்களுக்கு 9 சதவீத பிரீமிய தொகையை நிர்ணயித்து அதில் 1.5 சதவீதம் விவசாயிகள் பங்களிப்பாகவும், மீதமுள்ள 7.5 சதவீத தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாக பங்கிட்டு செலுத்தின.

கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்களுக்கு 13 சதவீத பிரீமியத் தொகை நிர்ணயிக்கப்பட்டு அதில் 5 சதவீதத்தை விவசாயிகள் பங்களிப்பாகவும் மீதமுள்ள 8 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் தலா 4 சதவீதத்தை பங்கிட்டும் செலுத்தின. இதே போல் இழப்பீட்டு தொகையிலும் சமமான பங்கை அளித்து வந்தன. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் கடந்த 2016-2017, 2017-18, 2018-2019 ஆகிய 3 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.3 ஆயிரத்து 750 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடு செய்யும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டங்கள் இருந்த நிலையில் மத்திய அரசு, நடப்பாண்டு முதல் பிரீமியம் மற்றும் இழப்பீட்டு தொகையில் 50 சதவீதம் பங்களிப்புக்கு மாறாக, 25 சதவீதம் மட்டுமே வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு ஓரளவு கை கொடுப்பது பயிர் காப்பீட்டு திட்டம்தான். இதில் மத்திய, மாநில அரசுகள் சமமாகவே பிரீமியம் மற்றும் இழப்பீட்டு தொகையை செலுத்தி வருகின்றன. திடீரென மத்திய அரசு தனது பங்களிப்பை 25 சதவீதமாக குறைந்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இப்போது மத்திய அரசின் நிதி 25 சதவீதமாகவும், மாநில அரசின் நிதி 75 சதவீதமாகவும் வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகமாகும். இது கொரோனா பெரும்தொற்று கால நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு மேலும் பேரிடியாக அமைந்துள்ளது. மாநில அரசுக்கு மிகக்கடுமையான நிதி நெருக்கடியை இது ஏற்படுத்தும். இதனால் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை உருவாகும்.

மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் உரிய அழுத்தம் கொடுத்து, மத்திய அரசின் 50 சதவீத பங்களிப்பை மீண்டும் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதில் மாநில அரசு வழக்கமான நடைமுறைபோல் ஏனோதானோ என்று இருந்தால் பாதிக்கப்படப்போவது விவசாயிகள்தான்.

;