tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்களின் நெருக்கடி நிலைமை....

தெற்கு ஆசிய நாடுகளின் வறுமை ஒழிப்புக்கான அமைப்பு (South Asian Alliance For Poverty Eradication) “தெற்கு ஆசியாவில் புலம்பெயர்தல்” எனும் ஆய்வை வெளியிட்டுள்ளது. 2011 இல் நிறுவப்பட்ட இவ் அமைப்பு தெற்கு ஆசிய நாடுகளுக்கான மண்டலக் கூட்டமைப்பு (SAARC) நாடுகளில் நிலவும் வறுமை பற்றிய ஆய்வை வெளியிட்டு வருகிறது. தெற்கு ஆசிய நாடுகளில் இதற்கு முன் நடந்திராத அளவில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இடம்பெயர்வதை இந்த ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது.

பல்வேறு காரணங்கள்
வறுமை,வேலையின்மை,நிலமின்மை,சட்டவிரோதமாக விளை நிலங்களை பறிமுதல் செய்தல், கட்டுபடியாகாத விவசாயம், அரசின் உதவியின்மை, கிராமப்புறத்துயரம், நகர்மயமாதல், தாராளமயக் கொள்கைகள், இயற்கைப் பேரிடர்கள் போன்ற காரணங்களால் வரலாறு காணாத புலம்பெயர்தல் நடைபெறுகின்றன.தொழிலாளர்கள் விருப்பத்துடன் புலம்பெயரவில்லை. சென்ற இடங்களிலும் நல்ல வாழ்க்கை நிலை வாய்த்து விடவில்லை. உள்ளூர் மக்களின் பகைமையையும் எதிர்கொள்கின்றனர்.
இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளில் நிலவும் நிலைமையை ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. வறுமையே புலம்பெயர்தலுக்கான முக்கியமான காரணம். வெறுமனே உயிர் வாழ்தலுக்காகவே இடம் பெயர்கின்றனர்.பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர்தலுக்கு தெற்கு ஆசிய நாடுகள் எவையும் விதிவிலக்கல்ல.இதனால்தாமஸ் பிக்கெட்டியின் சொல்லாடலான “நிச்சயமற்ற தொழிலாளர்கள்” (Precarious Proletariat) உருவாகியுள்ளனர்.

ஒவ்வொரு நாளும், இந்தியாவில் 2000 பேரும், நேபாளத்தில் 1600 பேரும்  புலம் பெயர்கின்றனர். வங்க தேசத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்படுத்திய நாசத்தால் கடற்கரை குடியிருப்புகள் கைவிடப்படுகின்றன. நகர்ப்புற சேரிப் பகுதிகள் அதிகரிக்கின்றன. இலங்கையில் புலம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. மாலத்தீவில் கிராமங்கள் காலியாகி நகரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பெருக்கத்தால், சூழலியல் தாக்கம் ஏற்பட்டு கடல் மட்டம் உயர்கிறது. மிகக் குறைந்த ஊதியத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் சேவை கிடைப்பது, எளிதாக அவர்களைத் தங்களின்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்பதாலும், தங்களின் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்க முடியும் என்பதாலும் முதலாளிகள் புலம்பெயர் தொழிலாளர்களையே விரும்புகின்றனர்.பெண் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையோ படுமோசம்.மோசமான பணிச் சூழல், ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வகையான சுரண்டல்களை அவர்கள் எதிர் கொள்கின்றனர். நவீன நகர்மயமாதல் அனுபவத்தில் புலம்பெயர் தொழிலாளர்களே மையமாக உள்ளதை கொரோனா பேரிடர் உணர்த்தியுள்ளது.

அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் பெருக்கம்
கடந்த 50 ஆண்டுகளாக நகர்ப்புற மக்கள் தொகை கடுமையாக  அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்கள் தொகையை விட நகர்ப்புற மக்கள் தொகையானது இந்தியா மற்றும் வங்க தேசத்தில் ஐந்து மடங்கும்,நேபாளத்தில் மூன்று மடங்கும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 65 சதவீத மக்கள் கிராமப் புறங்களில் வாழ்கின்ற போதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் மற்றும் அவை தொடர்பான தொழில்களின் பங்களிப்பு 14.6 சதவீத மட்டுமே உள்ளது. நகர்ப்புற மக்கள் தொகைஅதிகரிப்பு பிரச்சனை இலங்கையில் இல்லை.1960 முதல் 2018 முடிய உள்ள காலத்தில் அங்கு நகர்ப்புற மக்கள் தொகையில் பெரிய மாற்றமில்லை. நகர்ப்புறமயமாக்கல் வளர்ச்சியில் 233 நாடுகளில் இலங்கை கடைசி ஐந்து இடங்களில் உள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் நெருக்கடிக்கு பெரிதும் காரணம் நகரங்களில் தொழிற்சாலைகளை மையப்படுத்தும் வளர்ச்சிக் கொள்கைகள்தான்.தெற்குஆசிய நாடுகளில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் இலங்கை யின் நிலை மேம்பட்டதாக உள்ளது.நகர்மயமாதலில் இலங்கையானது இந்தியா, வங்கதேசத்தை விட 50 சதவீதம் குறைவாகவே உள்ளது.நகர்ப்புறங்களில் வாழும் மக்களில், இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினரும், பாகிஸ்தானில் ஆறில் ஒரு பங்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். ஊரகப்பகுதிகளில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வு தெற்கு ஆசிய நாடுகளின் பொதுவான அம்சமாக உள்ளது.

புலம்பெயர்தல் துயரம்
புலம்பெயர்தல் வேதனையும், வலியும் நிறைந்ததாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பகைமையுணர்வையே சந்திக்கின்றனர்.தெற்கு ஆசிய நாடுகளில் அந்தந்த நாடுகளில் நடைபெறும் மண்டல அளவிலும், தெற்கு ஆசிய நாடுகளுக்கிடையேயும், சர்வதேச அளவிலும் புலம்பெயர் கின்றனர்.இந்தியா புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்புகின்ற நாடாகவும், பெறுகின்ற நாடாகவும் உள்ளது. அதேபோன்று மற்ற தெற்கு ஆசிய நாடுகளின் தொழிலாளர்கள் சர்வதேச புலம்பெயர்தலின் போது இடைநிகழ் பயண நாடாகவும் இந்தியா உள்ளது.

இந்தியாவானது,பல்லாண்டுகளாக இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களைப் பெறுகின்றது. அதேபோன்று,இந்த நாடுகளுக்கெல்லாம் (பூடான், ஆப்கானிஸ்தான் தவிர) இந்தியாவில் இருந்தும் புலம்பெயர்கின்றனர். ஏராளமான நேபாளப் பெண்கள் நேரடியாக நேபாளத்தில்  இருந்து வளைகுடா நாடுகள் செல்ல தங்கள் நாட்டுச் சட்டம் அனுமதிக்காததால்,இந்தியா வழியாக வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர்.
மக்கள் நலக் கொள்கையிலிருந்து அரசு பின்வாங்கி யது, தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி யது நிலைமையை மோசமாக்கி விட்டது.பெண்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், மதச் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.புலம் பெயர்தல் உலகம் முழுவதும் நடைபெறுகின்ற போதிலும், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இனவாத, பெரும்பான்மைவாத தாக்குதல்கள் நடக்கின்றன.

சவால்கள்
புலம்பெயர்வதற்கு முன்னரும்,புலம்பெயர்ந்த பின்னரும், மீண்டும் தங்களது சொந்த ஊர்கள்/நாடுகளுக்கு சென்று நிலையாகத் தங்குவதிலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன.

அரசுகளின் அணுகுமுறை
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த கொள்கை திட்டம் ஏதும் அரசுகளிடம் இல்லை.இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் பிளவுவாதம், வகுப்புவாத அணுகுமுறையுடனும் உள்ளது. சில நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. ஆனால், இந்தியாவிற்குள்ளேயே இடம்பெயர்ந்து வாழும் உள்நாட்டு தொழிலாளர்களிடம் பாகுபாடு காட்டுகிறது. கொரோனா ஊரடங்கின் போது மாநிலம் விட்டு மாநிலம்சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்குசெல்ல ரயில், பேருந்து போக்குவரத்து ஏற்பாடுகள் செய்வதில் அளவு கடந்த தாமதமானது.ஆனால், வெளிநாடு களில் இருந்த இந்தியர்களை நாடு கொண்டு வர சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.அகதிகள் பிரச்சனையிலும் அரசுகள் இனம், மதம், மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டுகின்றன.

விருந்தினர் தேசத்தின் வளத்திற்கும்,வளர்ச்சிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அளப்பரிய பங்காற்றுகின்ற னர். மாலத்தீவில் சுற்றுலா, கட்டுமானத் தொழில்களில் வெளிநாட்டு தொழிலாளர்களே பெரும்பான்மையினர். ஆனால், அங்கு மொத்தமுள்ள 1,40,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 63,000 பேர் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.அரசின் கொள்கைகள் விவசாயத்தை லாபமற்ற தொழிலாக மாற்றியுள்ளது. 80சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஆப்கானிஸ்தானில் வறுமை விகிதாச்சாரம் மிக அதிகமாக உள்ளது.மகாராஷ்டிராவில் சிறு, குறு விவசாயிகள் தங்களின் அறுவடை முடிந்ததும், விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களாக புலம்பெயர்கின்றனர். இது இன்னும் சில மாநிலங்களில் நிலவும் பொது அம்சமாகவே உள்ளது. இது அவர்களின் உயிர் வாழ்தலுக்கான யுக்தியாகும்.ஏழைகளிலும் ஏழைகள் குறைந்த தூரத்திலேயே புலம்பெயர்கின்றனர். எடுத்துக்காட்டாக,வங்கதேச,   நேபாள புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியாவைத் தேர்வு செய்கின்றனர். ஆப்கானிஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் பாகிஸ்தானுக்குச் செல்கின்றனர்.

புலம்பெயர்ந்த நாடுகளில், ஊதிய மறுப்பு, நீண்ட நேர வேலை,பாலியல் சுரண்டல், மனிதத் தன்மையற்ற பணிச் சூழல் என பல்வேறு சுரண்டல்களை அனுபவிக்கின்றனர். வளைகுடா நாடுகளில் தொழிலாளர்கள் உரிமை மறுக்கப் படுவது ஒரு விதியாகவே உள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் 80 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்கின்றனர். பாகிஸ்தான், வங்க தேசம்,நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அங்கு வேலை செய்கின்றனர்.சமீப காலமாக அங்கும் வேலை வாய்ப்புகள் மிகவும் சுருங்கி வருகிறது.

கொரோனா ஊரடங்கு
விதிவிலக்கின்றி,அனைத்து தெற்கு ஆசிய நாடுகளிலும் கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நல்ல ஊதியம், பிழைப்பு தேடி எந்த ஊரிலிருந்து புறப்பட்டார்களோ அந்த இடங்களுக்கே மீண்டும் திரும்பி கடுமையான சூழ்நிலையிலும் பிழைத்திருக்க வேண்டிய கட்டாயமாகி விட்டது. இந்தியாவில், மே மாதத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அரசின் அணுகுமுறை காரணமாக இறந்தனர்.ஆனால், அரசிடம் அவர்கள் பற்றிய எந்த புள்ளி விவரங்களுமில்லை.

ஆய்வறிக்கை,ஏழ்மையை ஒழிப்பதற்கான திட்டங்கள், வாழ்வாதார வாய்ப்புகள், புலம் பெயர்கின்ற இடங்களில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல் போன்ற நிதி சார்ந்த செயலூக்கமிக்க நடவடிக்கைகள் தேவைப்படுவதை சுட்டிக் காட்டுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சனைகளை புரிந்து கொள்ளாமல் கொண்டு வரப்படும் சில சட்டங்கள் உரிய பலனளிக்கவில்லை. தெற்கு ஆசிய நாடுகளின் சார்க் அமைப்பு தங்களுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை மீட்டெடுக்க வேண்டும். தெற்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான உள்ளூற மறைந்துள்ள பகைமை உணர்வும்,தாராளமயக் கொள்கைகளும்,இனவாதமும்,பெரும் பான்மைவாதமும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளன.

ஃப்ரண்ட்லைன் , அக்.9,2020

===டி.கே.ராஜலட்சுமி===

தமிழில்: ம.கதிரேசன்

;