tamilnadu

img

காவிரி படுகையின் பிதாமகன் தோழர் பி.சீனிவாசராவ்...

ஒன்றாக இருந்த சென்னை மாகாணத்தின் தெற்கு கன்னட பகுதியைச் சேர்ந்த படகராவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பி. சீனிவாசராவ் பிறந்தார். 1930-ஆம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை விட்டுவிட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கமான உறவின் பின்னணியில் தமிழகத்தில் விவசாயிகளையும், தொழிலாளர்களையும், இதர உழைக்கும் மக்களையும் தேசிய இயக்கத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், ஏ.எஸ்.கேஅய்யங்கார், சி.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் செயல்பட்டார்கள். அவர்களுடன் இணைந்து பி.எஸ்.ஆரும்பணியாற்றினார். 1952 ஏப்ரல் 30 அன்று தலைமறைவாக இருந்த பி.சீனிவாசராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளிவந்தார். வந்த அடுத்த நிமிடம் தஞ்சை மாவட்டத்தில் இயக்கப் பணிகளை பகிரங்கமாக செய்ய ஆரம்பித்தார். 

    பிறகு தஞ்சை மாவட்டம் முழுவதும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் தட்டி எழுப்பினார். விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஒரே அமைப்பாக வைத்து செயல்படுத்தினார். அன்றுகம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்த ஒரே நோக்கம் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டுவதுதான். நிலப்பிரபுக்களின் நெருக்கடியிலும், பண்ணையாளர்களின் தாக்குதலிலும் செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில்தான் தோழர் பி.எஸ்.ஆரின் நிழல் அவர்கள் மேல்பட்டது.

உழைப்பாளி மக்கள் தங்கள் வேதனைகளை அவரிடம் கொட்டி தீர்த்தனர். அவர்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர். பி.எஸ்.ஆர் தஞ்சை மண்ணில் காலடிஎடுத்து வைப்பதற்கு முன்பு பாவம் அவர்களின் மன உளைச்சல்கள் காற்றில் கலந்த ஓசையாகவே இருந்தது. தங்களின் அடிமை வாழ்விற்கு விடிவு கிடையாதா? நம்முடைய விடியலுக்கு ஒளி கிடையாதா? வாழ்நாள் முழுவதும் வேதனையில் வெந்து மடிந்துதான் ஆக வேண்டுமா? நம்பிக்கை ஒளி எங்காவது தென்படுமா? என்று கிராமப்புற அடித்தட்டு மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அவரின் வருகை அவர்களுக்கு விடிவெள்ளியாக மாறியது. இந்நிலையில் இப்படி ஊமைகளாய், அடிமைகளாய் வாழ்ந்த மக்கள் மத்தியில் மிகப்பெரும் பேரெழுச்சியை உருவாக்கினார் அவர். 

நமக்காக எவருமில்லை என்று எண்ணியிருந்த அந்த மக்களின் சக்தியை அவர்களுக்கே உணரச்செய்தவர்தான் தோழர் பி.எஸ்.ஆர். அடுக்கப்பட்ட மூட்டைகளின் அடிமூட்டையாக கிடந்த உழைப்பாளி மக்களை பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகவும், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் ஒருங்கிணைத்து திறம்பட நடத்தி தஞ்சை மண்ணில் செங்கொடி இயக்கத்தை வலுவாக கட்டினார். கிராமப்புறங்களில் ஏழை விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும், பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினரையும் வென்றெடுத்து அவர்களை ஒரே அணியில் திரட்டி சாதிய ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை ஆகிய இரண்டுக்கும் எதிரான போரட்டத்தை தீவிரமாக நடத்தினார். இந்தியாவில் வர்க்க ஒடுக்குமுறைக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் உள்ள இணைப்பை மிகத்துல்லியமாக ஆராய்ந்து முதலில் தெரிவித்த காரல்மார்க்ஸ் அவர்களின் வழிக்காட்டலில் நின்று உறுதியாகப் போராடினார்.

காவிரிப்படுகையில் நில உடமையாளர்களின் ஆதிக்கத்தை தகர்த்ததில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெரும்பங்குண்டு. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமான உணவுத் தேவையில் காவிரிப்படுகையின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் எவரும் இருக்க முடியாது.காவிரிப்படுகையின் உணவு உற்பத்தியில் காலம்காலமாக நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயதொழிலாளர்களின் நிலையையும், நிலமற்ற விவசாயிகளின் குத்தகை முறைகளையும், புரிந்துகொண்டு அவர்களுக்காக மக்கள் போராட்டங்களை நடத்தியது செங்கொடி இயக்கம். இவர்கள் மீதான நிலப்பிரபுக்களின் உழைப்புச் சுரண்டலையும் ஆழமாக புரிந்து செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இதற்காக  தியாகங்களை புரிந்த கம்யூனிஸ்ட் முன்னோடிகளின் பட்டியல் நீளமானது.

நியாயமற்றகூலி, முறையற்ற நிலவாடகை, சுரண்டப்பட்ட உழைப்பு இவற்றின் விளைவுகளும், அரசியல் சமூகதளங்களில் நடந்த தவிர்க்க இயலாத வரலாற்று மாற்றங்களும் காவிரிப்படுகையில் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தியது என்பதை இப்போதைய தலைமுறைகளுக்கு அழுத்தமாக புரியவைக்கவேண்டும். காலனியாதிக்க காலத்திலிருந்தே இந்த சுரண்டல் முறைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தியது கம்யூனிஸ்ட் இயக்கம். பிறகு அந்த போராட்டங்கள் படிப்படியாக முறைப்படுத்தப்பட்டு தீவிரமடைந்தன. தமிழகத்தை ஆளத் தொடங்கிய திராவிட கட்சிகள் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்ட நிர்ப்பந்தத்தால் நிலச் சீர்திருத்த சட்டங்களை கொண்டு வந்தன. இதைத்தொடர்ந்து காவிரிப்படுகையில் பலமாற்றங்கள் ஏற்பட்டன.

இவை அனைத்தும் அடிப்படை பிரச்சனைகளான கூலி உயர்வு, நிலவாடகையில் ஏற்பட்ட சில மாற்றங்கள், நிலமற்றவர்களுக்கு நிலம் என்பனபோன்ற சீர்திருத்தநடவடிக்கையாக மட்டுமே சுருங்கிய வடிவில் பார்க்கப்பட்டது.நிலப்பிரபுத்துவம் என்ற பெரும் சமூக அவலத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கவில்லை என்றே இதுவரை பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நிலப்பிரபுத்துவத்தின் தன்மைகள் சிதைவுற்று குத்தகைதாரர்களின் கைகளுக்கு நிலங்கள் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய எதார்த்தத்திற்கு காரணம் கம்யூனிஸ்ட் இயக்கம். அதற்கு தலைமை தாங்கியதலைவர்களில் மிக முக்கியமானவர் பி.சீனிவாசராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டங்களும், நிலச்சீர்திருத்தச் சட்டங்களும் மட்டுமின்றி அதிகார மாற்றங்கள் பிராமணிய எதிர்ப்புஇயக்கத்தின் பங்களிப்பு, லாப்டி போன்ற சர்வோதயா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், பண்ணையார்களின் சாதிய மேலாண்மை போன்றவற்றை எல்லாம்இன்றைய காலக்கட்டத்தில் மிக நுட்பமாக பார்க்கவேண்டும். காவிரிப்படுகையின் உற்பத்தி உறவுகளில் நிலமற்ற குத்தகைதாரர்களின் பங்களிப்புக்கு இணையாக சற்றும் குறைவில்லாத பங்களிப்பு விவசாயத் தொழிலாளர்களுடையதாகும். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித் மக்களே என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுகாவிரிப்படுகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒப்பீட்டளவில் தலித் அல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் நன்மை பயத்துள்ளது என்பதை மறுக்க இயலாது. திராவிடகட்சிகளின் ஆதரவானது தலித் மக்களின் பக்கம் இன்னும் கொஞ்சம் சாய்வு கொண்டிருந்தால் காவிரிப்படுகையில் தலித்மக்களும் தங்களுக்கான நில உடமைகளை இன்னும் கூடுதலாக பெற்றிருக்கமுடியும் என்ற எதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட இன்றைய காவிரி டெல்டா மாவட்டம் அன்றைக்கு கீழத்தஞ்சை என்றஒரே மாவட்டமாக இருந்தது. அப்போதைய தலைவர்கள் மணலி கந்தசாமி, கே.பி.நடராஜன், காத்தமுத்து, மணலூர்மணியம்மை, வெங்கடேச சோழகர், அமிர்தலிங்கம், கே.ஆர்.ஞானசம்பந்தம், ஏ.வி.ராமசாமி, கோ.வீரய்யன், தியாகி என்.வெங்கடாஜலம், கோ.பாரதிமோகன்,  இளம்கம்யூனிஸ்ட்டு தியாகிகளான சிவராமன், வட்டாக்குடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் போன்ற பிற்
படுத்தப்பட்ட தலைவர்கள் தலித்மக்களின் பிரச்சனைகளுக்காக போராடினார்கள். தலித்துக்கள் கம்யூனிஸ்ட்டுகளாக மாறினார்கள். இது தஞ்சைமண்ணின் படிப்பினை தரும் அனுபவமாகும்.பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்தையும் கிராமப்புற ஏழை
மக்களின் பொருளாதார சமூக பிரச்சனைகளுக்கான போராட்டங்களையும் மிக கவனமாக இணைத்து நடத்தியவர் தோழர் பி.சீனிவாசராவ். தமிழகத்திலேயே காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்றைக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவாக உள்ளது என்றால்  இதற்கு அடித்தளம் இட்டவர் தோழர் பி.சீனிவாசராவ் என்பதை எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. 

கட்டுரையாளர் : ஐ.வி.நாகராஜன், சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்

;