tamilnadu

img

தில்லி மக்களின் தீர்ப்பு பாஜவிற்கு பலத்த அடி

தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபரி மிதமான வெற்றி பெற்று குறிப்பிடத்தக்க சாதனை படைத்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யின்கீழ் ஆம் ஆத்மி கட்சி, 2015இல் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றிய பின்னர், இப்போது நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களைக் கைப்பற்றி, மீண்டும் தன்னுடைய வெற்றியை நிலைநாட்டி இருக்கிறது. 2015இல் வாக்கு சதவீதத்தில் 54.3 சதவீதத்தைப் பெற்றிருந்தது. இப்போது 53.6 சதவீதம் பெற்றிருக்கிறது. ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது.

தில்லி மக்களின் தீர்ப்பு


ஆம் ஆத்மி கட்சியின் மீதான தீர்ப்பு என்பது அதன் அர சாங்கத்தின் மீதும் செயல்பாடுகளின் மீதும் மக்கள் வைத்தி ருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். மத்திய பாஜக அரசாங்கம் மேற்கொண்டுவந்த முட்டுக்கட்டை உத்திகளை எல்லாம் மீறி, கெஜ்ரிவால் அரசாங்கம் அரசாங்கப் பள்ளிக ளின் தரத்தை மேம்படுத்தவும், மொகல்லா கிளினிக்குகள் மூலம் சுகாதார வசதிகளைப் பெருக்கிடவும், இலவச மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகளை அளித்து தில்லி வாழ் ஏழை மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வினை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதும், குறைந்தபட்ச ஊதியத்தைக் கணிசமான அளவிற்கு உயர்த்தியதும், பெண்களுக்கு இலவச பேருந்துப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதும் போன்று நல்ல காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறது. அரசாங்கத்தில் இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டிருப்பதுடன், இவை தொடர்பாக தான் மக்க ளுக்கு அளித்த வாக்குறுதிகளை வலுப்படுத்தவும், விரிவாக்கிடவும் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருப்ப தும்தான் ஆம் ஆத்மிக்கு தொழிலாளர் வர்க்கம், கீழ்நிலை மத்தியதர வர்க்கம், பெண்கள், தலித்துகள் மற்றும் சிறு பான்மையினரின் ஆதரவினைப் பெற்றுத் தந்துள்ளது.

இவற்றிற்கு முற்றிலும் முரணான விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாஜக மக்கள் மத்தியில் மதவெறித் தீயை உருவாக்க முயற்சித்தது.  தில்லி ஷாஹீன் பாக்கில் முஸ்லீம் பெண்கள் அமர்ந்து, குடியுரிமைத் திருத்தச்சட்டம் - தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய வற்றிற்கு எதிராகக்  கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு வதானது, பாஜகவின் வெறுப்புப் பிரச்சாரத்தின் மையமாக மாறியிருந்தது. ஷாஹீன் பாக், “மினி பாகிஸ்தான்”-ஆக, தேச விரோத செயல்பாடுகளின் மையமாக மாறியிருப்பதா கக் கூறியதுடன், “தேசத் துரோகிகளைச் சுட வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தனர். அமித் ஷாவின் தலைமை யிலான இத்தகைய நச்சுப் பிரச்சாரத்தின் விளைவாக, ஜாமியா பல்கலை. மாணவர்கள் மற்றும் ஷாஹீன் பாக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

தில்லியில் சீலாம்பூர், ஷாஹீன் பாக் மற்றும் ஜாமியா வில் நடைபெறும் கிளர்ச்சிப் போராட்டங்கள் மீதான தாக்குதல் பற்றி கூறுகையில், அது தற்காலிகமான ஒன்றல்ல; மாறாக ஒரு பரிசோதனை முயற்சி என்று பேரணி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதிலிருந்து, இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்க ளுக்கான ‘கட்டளை’ மேலிருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அவர்,  “இத்தகைய கிளர்ச்சிப் போராட்டங்க ளுக்குப் பின்னே ஓர் அரசியல் வடிவம் இருக்கிறது” என்றும், “இந்தியாவைத் துண்டாட விரும்புவோரை ஏஏபியும், காங்கிரசும் பாதுகாப்பதாகவும்” குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி சாதுர்யமான பிரச்சாரம்

தில்லியில் பாஜக, தேர்தல் பிரச்சாரத்திற்காக எண் ணற்றோரை இறக்கி விட்டிருந்தது. எண்ணற்ற மத்திய அமைச் சர்கள், ஐந்து முதலமைச்சர்கள், 240க்கும் மேற்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்தனர். இத்துடன் வாக்காளர்களுக்குப் பணமும் பெரிய அளவில் விநி யோகிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலின்போது பார்த்த தைப்போலவே இப்போதும் தேர்தல் ஆணையமானது, உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா போன்றவர்கள் கட்டவிழ்த்துவிட்ட வெறுப்புப் பிரச்சாரத்தை வலுவானமுறையில் தடுப்பதில் தோல்வி அடைந்தது.

இவ்வாறான பாஜக-வின் மதவெறி வெறுப்புப் பிரச்சா ரத்தை நிராகரித்து, ஆம் ஆத்மி கட்சிக்கு மகத்தான வெற்றி வாய்ப்பை தில்லி மக்கள் அளித்துள்ளார்கள். பாஜகவின் மதவெறி வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பதிலளிக்கிறோம் என்ற பெயரில் மதவெறித் தீயைக் கூர்மைப் படுத்தாமல், கெஜ்ரிவா லும் ஆம் ஆத்மியும் தங்கள் தேர்தல் பிரச்சார உத்தியை மிகவும் சாதுர்யமாகக் கையாண்டார்கள். இவ்வாறு செய்த தன் காரணமாக, பாஜகவின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவுகூட ஆம் ஆத்மிக்கு அதன் அரசாங்கத்தின் செயல்பாடுகளின் அடிப்படையில் ஆதரவு அளித்திருக்கிறது.  

வாக்கு சதவீதம் காட்டுவதென்ன?

2019 மே மக்களவைத் தேர்தலின்போது, தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக 56.6 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது. அப்போது மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் 65இல் முன்னணியில் இருந்தது. ஆனால், இப்போது, 38.5 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது. 18 சதவீத வாக்கு சதவீதம் வீழ்ச்சி  அடைந்திருக்கிறது. எனினும், 2015 சட்டமன்றத் தேர்த லின்போது பாஜக 32.3 சதவீத வாக்கு சதவீதத்தையே பெற்றி ருந்தது என்பதையும், இப்போது அது சுமார் 6 சதவீதம் கூடுதலாக வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் கொண்டிருக்கி றது என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அது பெற்ற வாக்குகள் அநேகமாக காங்கிரசிடமிருந்து பறிக்கப்பட்டவையாகவே தெரிகிறது. ஏனெனில், காங்கிரஸ் 2015இல் 9.7 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன் ஒப்பிடு கையில் இப்போது அது வெறும் 4.3 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது.

தில்லியின் தீர்மானகரமான தேர்தல் தீர்ப்பு, பாஜக-ஆர்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராகப் போராடு பவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது. ஹரியானா வில் பெரும்பான்மையை இழந்த பின்னணி, மகாராஷ்டிரா வில் தேர்தலுக்கு முன் சிவ சேனையுடன் கொண்டிருந்த கூட்டணி தேர்தலுக்குப்பின்னர் முறிந்து, பாஜக அரசாங்கம் அமைக்க முடியாமல் தோல்வி அடைந்தமை,  ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமை, இப்போது தில்லி தீர்ப்பு என அனைத்தும் பாஜகவிற்கு பலத்த அடிகளாகும்.  

தில்லி வாழ் குடிமக்கள் என்போர் நாட்டின் பல பகுதிகளி லிருந்தும் வந்தவர்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்த வர்கள். பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்கள். இவர்கள் அளித்துள்ள தீர்ப்பு என்பது ஒரு விஷயத்தை அடித்துக்கூறு கிறது; அதாவது, நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியர்க ளாகிய நம்மிடையே, பிளவுவாத மதவெறி அரசியல், பிரி வினையை உண்டாக்க முடியாது என்பதேயாகும். குடியுரிமைச் சட்டத்தின் மதச்சார்பின்மைக் கருத்தாக்கத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கும், இந்துத்துவா எதேச்ச திகாரத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், இது ஒரு நல்ல அறிகுறியாகும்.

பிப்ரவரி 12, 2020,  தமிழில்: ச.வீரமணி

 

;