தமிழகத்தின் அரசு ஊழியர்கள் மத்தியில் டி. லட்சுமணன் என்ற ஆங்கிலப் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களான “டி. எல்” என்ற எழுத்துக்களாலேயேஅவர் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர். “டி.எல்.” அவர்கள் கால் நடைத்துறையில் கால்நடை ஆய்வாளராக பணியேற்றார். பணியேற்ற பின் அத்துறையில் உள்ள கால்நடை ஆய்வாளர்களை திரட்டி, கால்நடை ஆய்வாளர் சங்கத்தை நிறுவினார். அச்சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் திகழ்ந்தார். அச்சங்கத்தை ஒப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு துறை சங்கமாக இல்லாமல், போராட்ட உணர்வுமிக்க சங்கமாக வளர்த்தெடுத்தார். ஊழியர்களின் தேவைகளையொட்டிய கோரிக்கைகளை வடித்தெடுத்தார். அதனை அடைய பலகட்ட போராட்டங்களை நடத்தி, பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்த ஒரு துறை சங்கமாக அச்சங்கத்தை அக்காலத்திலேயே மாற்றியமைத்த பெருமை அவருக்கே உரியது. தமிழகத்தின் அரசு ஊழியர் இயக்கத்தில், பல்வேறு துறைவாரிச் சங்கங்களுக்கு ஒரு முன் மாதிரியாக கால்நடை ஆய்வாளர் சங்கம் விளங்கியது.
புதுப்புது உத்திகள்
அச்சங்கம் நடத்திய போராட்டங்களில் பல புதுப் புது உத்திகளை உருவாக்கினார். ஒரு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அது வெறும் வழக்கமான ஊர்வலமாக இல்லை. ஊர்வல முடிவில் நிர்வாகிகள் அனைவருடன் ஒரு குரங்கும் சென்றது. மனுவை குரங்கின் கையில் கொடுத்து, மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுக்க வைத்தனர். மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் அது புகைப்படமாக வந்து பிரபலமானது. அரசின் கவனத்தையும் கவர்ந்தது. தனது துறை, அதன் கோரிக்கைகள் என்ற அளவோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, அச்சங்கத்தின் இயக்கங்களில் பொதுவான கோரிக்கைகள் குறித்தும் பேசினார்; பேச வைத்தார். அக்கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் அச்சங்கத்தையும், ஊழியர்களையும் ஈடுபடுத்தினார்.
அது மட்டுமல்ல, கோரிக்கைகளின் ஆணிவேரையும், அதற்கான ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளையும் ஊழியர்கள் மத்தியில் எடுத்துரைத்ததுடன், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும், வென்றெடுப்பது எப்படி என்பதையும் அரசியல்ரீதியாக சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, அச்சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் தொழிற்சங்கரீதியாக மட்டுமன்றி, அரசியல்ரீதியாகவும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவ்வாறு அரசியல் உணர்வு பெற்ற நூற்றுக்கணக்கானவர்களை உருவாக்கினார். அவர்கள் அனைவரும் இடதுசாரி உணர்வோடு ஆக்கப்பூர்வமாக சங்கத்தில் செயல்படும், போர்க்குணமிக்கவர்களாக மாறினர். இந்த அளவு மாற்றம், குணமாற்றத்தை உருவாக்கியது. தோழர்கள் எம்.ஆர். அப்பன், டி. எல்., ஜே.எஸ். பரதன், ஆர்.ஏ. கூடலிங்கம், குத்புதீன் மற்றும் பலரும் இணைந்து அரசு ஊழியர் இயக்கத்தில் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கினர்.
இதன் விளைவாக, தோழர்கள் ஜே.எஸ்.பரதனும், எம்.ஆர்.அப்பனும், சிவ.இளங்கோ தலைமையில் இணைந்து மாநில நிர்வாகிகள் ஆயினர். தொடர்ந்து ஊழியர்கள் கூட்டம் ஆங்காங்கே நடைபெற்றது. தோழர் டி.எல்.லும், நானும் இணைந்து எழுதிய “அதோ ஆபத்து” என்ற சிறு பிரசுரம், சிவ.இளங்கோ அவர்களின் முன்னுரையுடன் பல்லாயிரக் கணக்கில் வெளியிடப்பட்டு, ஊழியர்களை சென்றடைந்தது. இடதுசாரி கருத்துக்களை ஊழியர்கள் மத்தியில் கொண்டு செல்ல அப்பிரசுரம் உதவியது.
மும்பை மாநாட்டில் முன்முயற்சி
இவற்றிற்கு முன்னர், கால்நடை ஆய்வாளர் சங்கம் தொடங்கியதற்குப் பிறகு, அதனை அகில இந்திய கூட்டமைப்பு உருவாக்க தோழர் டி.எல். முயன்று வெற்றியும் பெற்றார். கூட்டமைப்பின் தலைமையிடம் மும்பையாக (அன்று பம்பாய்) இருந்தது. அகில இந்திய கால்நடை ஆய்வாளர் கூட்டமைப்பின் அனைத்திந்திய மாநாடு மும்பையில் நடைபெற்றது. அதில் தோழர் டி.எல். முக்கிய நிர்வாகி. அவர் தலைமையில் தமிழகத்திலிருந்து கணிசமானோர் கலந்து கொண்டனர். மிகச் சிறப்பாக அம்மாநாடு நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர்களிடையே, அவ்வளவு பெரிய மாநாட்டில் அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ள முன்வரவில்லையே என்பது ஒரு ஆதங்கமாக இருந்தது. இதனை தோழர் டி.எல். அவர்கள் மாநாட்டின் தலைமைக் குழுவினர் மற்றும் மாநாட்டை நடத்தும் வரவேற்புக் குழுவினருக்கும் தெரிவித்தார். “மாநாட்டில் மந்திரிக்கு என்ன வேலை?” என்று சொன்னவர்கள், இருப்பினும் அவரை வரவழைக்கின்றோம் என தொலைபேசியில் அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்கள். அடுத்த சில மணி நேரத்தில் மாநாட்டிற்கு அமைச்சர் வந்தார்; வாழ்த்திப் பேசினார். சங்கத்தின்மீது எவ்வளவு மரியாதை என நமது தோழர்களுக்கு தாள முடியாத ஆச்சர்யம்!தமிழகத்தில் கோரிக்கைகளுக்காக போராடத் தயங்கிய அன்றைய மாநிலத் தலைவர் சிவ.இளங்கோவால் மாநில நிர்வாகிகளான தோழர்கள் எம்.ஆர்.அப்பன், ஜே.எஸ்.பரதன் ஆகியோர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். உடனடியாக நடவடிக்கை குழு உருவானது. அதற்கு பின்பலமாக இருந்தவர் தோழர் டி.எல்தான்.
கல்கத்தா மாநாடு
அடுத்து, கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்திற்காக அரசு ஊழியர்களை இணைக்க பெரு முயற்சி எடுக்கப்பட்டது. அதற்காக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் தோழர் டி.எல் பங்கு பிரதானமானது. அவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க, அக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதே போன்று, அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய எழுச்சியையும், பயிற்சியையும் அளித்தது கல்கத்தாவில் (தற்பொழுது கொல்கத்தா) நடைபெற்ற அகில இந்திய மாநில அரக ஊழியர் சம்மேளனத்தின் 4ஆவது மாநாடுதான்! அப்போது முதலைமச்சராக சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசின் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியில் மேற்கு வங்கம் இருந்தது. காங்கிரஸ் அரைப் பாசிச ஆட்சியை அமல்படுத்தியிருந்தது. பல முன்னணி ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர்; நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்டிருந்தனர். கடுமையான தாக்குதல்கள் முன்னணி ஊழியர்கள்மீதும், தலைவர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. பலர் தலைமறைவாக இருக்க வேண்டி இருந்தது. தலைவர்களை கைது செய்ய நடந்த வேட்டையில், பாலியல் வன்முறைகளும் பயன்படுத்தப்பட்டன. பலர் படுகாயமடைந்து இருந்தனர். எலும்புகள் நொறுங்க, குண்டர்களும், காவல் துறையும் இணைந்து நடத்திய கொடுந்தாக்குதலில் பலர் ஊனமுற்றிருந்தனர். 32 தலைவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இவை எல்லாம் சங்கம் நடத்தியதற்காக ஊழியர்களும், ஆசிரியர்களும் பெற்ற பரிசுகள்.
இவை அனைத்தையும் தாங்கி, அரசியல் போராட்டமாக மக்களுடன் இணைந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதனை மாற்றினார்கள். அதன் விளைவாக, தேர்தலில் சித்தார்த்த சங்கர் ரேயின் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது. புதிய இடது முன்னணி அரசு தோழர் ஜோதிபாசுவை முதலமைச்சராக கொண்டு, பதவியேற்று செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அம்மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட பல தோழர்கள் மாநாட்டு தொண்டர்களாக இரவு பகல் பாராமல் பணியாற்றினர். அவர்களை நெருங்கிவிசாரித்தபோதுதான் அரசுத் துணை செயலாளர்கள் முதல் மிகப்பெரிய அரசுப் பணிகளில் பணிபுரிபவர்கள் உட்பட சங்கத்தில்பணிபுரிகிறார்கள் என அறிய முடிந்தது. புதிய இடது முன்னணி அரசு பதவியேற்ற கையோடு, பணிநீக்கம் பெற்ற அனைவரை யும் முன்தேதியிட்டு பணியமர்த்தியது. ஊதிய நிலுவை வழங்கியது. பதவி உயர்வும் வழங்கியது. அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ரத்து செய்தது. மாநாட்டை முதலமைச்சர் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் எப்போது வருவார்?
அந்த மாநாட்டில் 70 ற்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தி லிருந்து கலந்து கொண்டனர். தமிழகப் பிரதிநிதிகள், முதலமைச்சர் எப்பொழுது வருவார் என வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தலைமையுரையின் இடையிலேயே இருவர் வந்து முன்வரிசையில் அமர்ந்தனர். வரவேற்புரை முடிந்தவுடன், தலைவர் “இப்பொழுது முதலமைச்சர் தோழர் ஜோதிபாசு அவர்கள் மாநாட்டை முறைப்படி தொடங்கி வைப்பார்” என அறிவித்தபோதுதான் வந்த இருவரில் ஒருவர்தான் தோழர் ஜோதிபாசு என்பதை உணர்ந்தபோது, தமிழகப் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அழைப்பிதழில் பெயர் இல்லை.வரவேற்கும் ஆளுயர சுவரொட்டிகள் இல்லை. கட் அவுட்டுகள் இல்லை. ஆனாலும் வந்தார். “வேலைநிறுத்தம் உங்கள் பிறப்புரிமை; அதனை ஒருபோதும் விட்டுத் தராதீர்கள்” என்று முழங்கினார். பேசி முடித்தவுடன் கூட வந்திருந்த நேர்முக உதவியாளருடன் தனியாக மேடையைவிட்டு இறங்கிப் போனார். மேடையிலிருந்து யாரும்கூட வழியனுப்பப் போகவில்லை. மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. மக்களின் அரசும், அமைச்சர்களும் எப்படி இருப்பார்கள் என நேரில் கண்ட அனுபவமாக அந்த மாநாடுஅமைந்தது. இதன் விளைவாக திரும்பும்போது தமிழகப் பிரதிநிதிகளிடையே ஒரு ரசவாத மாற்றம் நிகழ்ந்திருந்தது. அனைவரும் இடதுசாரி இயக்க தளபதிகளாக உருமாறி தமிழகம் திரும்பினர். பின்பு நடந்த என்.ஜி.ஓ. யூனியன் தேர்தலில், நாராயணராவ் தலைமையிலான அணியை ஆதரித்தோம். அந்த அணி வெற்றி பெற்றால், தோழர் டி.எல்., அவர்களை பொதுச் செயலாளராக நியமிக்க ஒப்பந்தம் ஏற்பட்டது. தேர்தலில் டி.எல் சார்ந்த அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.
அரசு ஊழியர் மாத இதழ்
‘அரசு ஊழியர்’ மாத இதழ் வெளிவர பின்பலமாக தோழர் டி.எல். அவர்களே இருந்தார். “ஜேக்சாட்டோ” என்ற அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பை உருவாக்க அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவில் முக்கிய பங்கு தோழர் டி.எல். அவர்களுடையதே ஆகும்.தொடர்ந்து விருப்ப ஓய்வு பெற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக இணைந்து, ஒப்பற்ற தலைவராக உயர்ந்தார். அங்கும் அவர் டி.எல்.தான். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு ஆகிய சங்கங்களை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அவ்விரு சங்கங்களை வளர்த்ததில் டி.எல். பங்கு மகத்தானது. இறக்கும்வரை இரு பெரும் அமைப்புகளுக்கும் மாநில நிர்வாகியாக திறம்பட பணியாற்றியவர். 82வது வயதில் அவரது ‘அவனின்றி அத்தனையும் அசைகின்றன’ என்ற புத்தகம் வெளி வந்தது. இயங்குவதற்கு வயது தடையில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இயக்கம் என்பதன் இன்னொரு பெயர் “டி.எல்.”
அவரது பாதையில் தொடர்வோம்...... செவ்வணக்கம்!