tamilnadu

img

ராணுவத் தளபதி சுலைமானி படுகொலை எதிரொலி ... அமெ. ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

பாக்தாத்:
ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது புதனன்று ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 80 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இராக்கின் பாக்தாத் விமான நிலையம்அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை யன்று நடத்திய ஆளில்லா விமானத் தாக்குத லில் ஈரான் ராணுவத்தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக  இராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ள  அயின் அல் அஸாத் விமான தளம் மற்றும் அபிரில் எனும் பகுதியில் உள்ள ராணுவ தளம் ஆகியவற்றின் மீது  புதனன்று அதிகாலையில் 15 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி ஈரானின் புரட்சிகர படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதற்கான வீடியோவையும் ஈரான்நாட்டு தொடர்புடைய பிரஸ் டிவி வெளி யிட்டுள்ளது.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 80 வீரர்கள் பலியாகியிருக்கலாம் என ஈரானின் பிரஸ் டிவி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு உடனடியாகச் சென்றனர். நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், நிலவரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில், இராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள இரண்டு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா உலகிலேயே வலிமையான ராணுவத்தை கொண்டுள்ளதாகவும் உலகின் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத ஆயுதங்கள் தங்களிடம் உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம்  கூறுகையில்,  ஈரானுடன் அமெரிக்கா போரை விரும்பவில்லை. அதேநேரத்தில் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையானது ஈரானின் செயல்பாட்டை பொறுத்தே இருக்கும் என்று தெரிவித்துள் ளார். 

தற்காப்புக்காக தாக்கினோம்
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் அரசு தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இராக்கில் உள்ள அமெரிக்க  இலக்குகள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் நியாயமான முறையான தற்காப்புக்காக நடத்தப்பட்டது. அமெரிக்கா  மாயைகளின் அடிப்படையில் அதை மதிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நாங்கள்  போரை விரும்பவில்லை ஆனால் அமெரிக்கா பதிலடி கொடுத்தால்  நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்வதற்காக தாக்குவோம் என்று தெரிவித்தார்.

;