tamilnadu

img

நெய்வேலி என்எல்சியில் மேலும் ஒரு தொழிலாளி பலி

நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 2-வது அனல் மின்நிலையத்தில் 6-வது உற்பத்தி பிரிவில் கடந்த 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் நெய்வேலி பகுதியை சேர்ந்த நிரந்தர தொழிலாளி ‌ஷர்புதீன் (வயது 54) சமீபத்தில் இறந்தார்.இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நெய்வேலியை அடுத்த கொள்ளிருப்பு கிராமத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகம் (29) புதனன்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 6 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சண்முகம் உயிரிழந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என்.எல்.சி 2-வது அனல்மின் நிலையம் நுழைவாயில் முன்பு திரண்டனர். இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட வில்லை. எங்கள் கோரிக்கை ஏற்காவிட்டால். உடலை வாங்க மாட்டோம் என்று சண்முகத்தின் உறவினர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு 9 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.தொடர்ந்து வியாழனன்று (ஜூலை 2) 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

;