tamilnadu

img

கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி-பொதுமக்கள் சாலை மறியல்!    

கூடலூர் ஓவேலிபகுதியில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த நாதன் என்பவரை யானை தாக்கியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியான ஓவேலி பகுதியை ஒட்டி மக்கள் வசித்து வருகின்றனர்.  கடந்த மாதம் இங்கு இரண்டு பேரை யானை மிதித்து கொன்றதால், ஏசிஎஃப் ஸ்ரீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர், முதுமலை கும்கி யானைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.  

இந்நிலையில் ஓவேலி செல்வபுரம்  பகுதியை சேர்ந்த விவசாயி நாதன் என்பவர், காமராஜ் நகரில் ஒரு எஸ்டேட்டை குத்தகை எடுத்து தேயிலை பறித்து வந்தார். நேற்று மதியம் தேயிலை பறித்த பின் மூடையை சுமந்துகொண்டு சாலைக்கு வரும்போது அங்கிருந்த யானை நாதனை மிதித்துக் கொன்றது.

தகவலை அறிந்து வந்த பொதுமக்கள் உயிரிழந்தவரின் உடலை எடுக்காமல், உடனடியாக யானையை பிடிக்க வேண்டும் என கூடலூர் சிக்னல் பகுதியில் நாதன் உடலை நடுரோட்டில் வைத்து கொட்டும் மழையில் சாலைமறியல் செய்து வருகின்றனர்.  

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேசன், ஆர்டி ஒ சரவணகண்ணன், டிஎஸ்பி குமார்   உட்பட அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் கூறும்போது, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 100 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் மூன்று கும்கி யானைகள் உட்பட பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடுகிறது. தொடர்ந்து யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

;