tamilnadu

img

நீலகிரி: 125 நாட்களுக்குப் பின் சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு...

உதகை:
நீலகிரி மாவட்
டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக 125 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. பூங்கா ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குப் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் 6 மாதங்களாக மூடப்பட்டன. பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் மீண்டும் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, திங்கள் (ஆக. 23) முதல் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க அரசு அனுமதித்தது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்கள், கோத்தகிரி நேரு பூங்கா, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டன.
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தியும், தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பநிலை சரிபார்க்கப்பட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டதும், பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஊழியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

;