உதகை, ஜூலை 9- உதகையில் விதிமுறைகளை மீறிய, ஆவணங்களை முறையாக பராமரிக்காத 18 இயற்கை உர தயாரிப்பு ஆலைகள் மற்றும் இன்ஸ்டன்ட் தேயிலை தொழிற்சாலை களின் உரிமத்தை தேயிலை வாரியம் ரத்து செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.
இந் நிலையில், இயற்கை உரம் தயாரிப்பதாக கூறி தேயிலை வாரியத்தில் அனுமதி பெற்றுள்ள சில நிறுவனங்கள் மற்றும் இன்ஸ்டென்ட் தேயிலை தொழிற்சாலைகள் ஆர்சி எனப்படும் தேயிலைக் கழிவுகளை வாங்கி கலப்பட தேயிலைத்தூள் தயாரிப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தேயிலை வாரிய அதிகாரிகள் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் இன்ஸ் டென்ட் தேயிலை தயாரிப்பு தொழிற்சாலைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பல ஆலைகள் தேயிலை வாரிய விதிகளை மீறி செயல்பட்டு வந்ததும், உரம் விற்பனை தொடர்பாக ஆவணங்களை பராமரிக்காததும் தெரியவந்தது. இதை யடுத்து விதிமீறலில் ஈடுபட்ட தொழிற்சாலைகளிடம் விளக்கம் கேட்டு தேயிலை வாரியம் நோட்டீஸ் அனுப் பியது. ஆனால், தொழிற்சாலைகள் அளித்த பதிலில் திருப்தி இல்லாத நிலையில் 18 இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமங்களை தேயிலை வாரியம் ரத்து செய்தது.