நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட்திவ்யா கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஆட்சியர் பெயரில் அதிகாரிகளுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
அதில், "பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் பரிசுக் கூப்பன்கள் உள்ளன. அந்தக் கூப்பன்களை வாங்கிக் கொள்ளுங்கள். நான் அதற்கான பணத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட அதிகாரிகள் ஆட்சியருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் காவல் கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இன்னசென்ட் திவ்யா,"பிரபல நிறுவனத்தில் பரிசுத்தொகை மற்றும் பரிசுக் கூப்பன்களை வாங்குங்கள். அதற்கான பணம் கொடுத்து விடுகிறேன் என என் பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் என்னிடம் கூறினர். அதிகாரிகளுக்கு எனது அலுவலக மின்னஞ்சல் முகவரியான collrnkg.nic.in மூலமே மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. இந்தப் போலி மின்னஞ்சல் எனது பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. நான் உடனடியாக இதுகுறித்துக் காவல்துறையில் புகார் அளித்தேன். மேலும், அதிகாரிகளுக்கு இத்தகைய மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளேன். இந்தத் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.