tamilnadu

img

இந்நாள் டிச. 31 இதற்கு முன்னால்

1501 - முதல் கண்ணனூர் (தற்போதைய கண்ணூர்) யுத்தம், கோழிக்கோட்டின் சாமூத்திரிக்கும், ஜோவா-டா-நோவா தலைமை யிலான மூன்றாம் போர்ச்சுகீசிய கப்பல் அணிக்கும் (அர்மடா) இடையே நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசியக் கப்பல்கள் பயன்படுத்திய முறையை, ‘யுத்த வரிசை’ என்ற பெயரில் அதன்பின் கடற்படைகள் கடைப்பிடிக்கத் தொடங்கின. 1498இல் கோழிக்கோட்டை அடைந்த வாஸ்கோ-ட-காமா, ஏற்கனவே அங்கு வணிக உறவுகொண்டிருந்த அரேபியர்களின் எதிர்ப்பையும்மீறி, வணிக உரிமையை சாமூத்திரியிடம் பெற்றார். ஆனாலும், அவர், தங்கம், வெள்ளி போன்றவையின்றி, சர்க்கரை, எண்ணெய், தேன் முதலானவற்றைக் கொண்டுவந்திருந்ததால், அவற்றை ஏற்காமல், வரியைச் செலுத்த சாமூத்திரி உத்தரவிட்டது இத்தொடரில் 2018 ஜூலை 8இல் இடம்பெற்றிருந்தது. காமாவின் பிரதிநிதிகளை சாமூத்திரி பிணையாகப் பிடித்துவைக்க, உள்ளூர்க்காரர்களை சிலரை காமா அழைத்து(பிடித்து?)கொண்டு (தப்பி?!)விட்டார்!

1500இல் பெட்ரோ அல்வேரஸ் கேப்ரல் கோழிக்கோட்டுக்கு வந்தபோது, காமா ஏற்படுத்தியிருந்த ஆலை அழிக்கப்பட்டு, அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட போர்ச்சுகீசியர்களும் கொல்லப்பட்டிருப்பதைக் காணநேர்ந்தது. இதனால் சினமுற்ற கேப்ரல், நாள் முழுவதும் கோழிக்கோட்டின்மீது குண்டுகளை வீசியதுடன், அங்கிருந்த 10 அரேபியக் கப்பல்களைக் கொள்ளையிட்டுவிட்டு, தீயிட்டு, அதிலிருந்த சுமார் அறுநூறு பேரையும் கொன்றார். அதன்பின், கொச்சின், கண்ணனூர் ஆகியவற்றின் அரசர்களுடன் சாதகமான வணிக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு கேப்ரல் நாடு திரும்பிவிட்டார். இந்தப் பின்னணியில்தான் நான்கு (வணிக)கப்பல்களைக்கொண்ட மூன்றாம் கப்பலணி, இந்தியாவிலிருந்து மணமூட்டிகளை ஏற்றிச்செல்லும் நோக்கத்துடன் வந்தது.

சரக்குகளுடன் கண்ணனூரிலிருந்து கிளம்பும்போது, 40 பெரிய, 180 சிறிய போர்க்கப்பல்களுடன் கோழிக்கோட்டின் சாமூத்திரி படையெடுத்துவந்து தாக்கினார். கண்ணனூரின் அரசர் பாதுகாப்பளிப்பதாகக் கூறினாலும் ஏற்காமல் கிளம்பிய நோவா, தன் கப்பல்களை ஒரே வரிசையில் பயணிக்கச்செய்து, கப்பலின் அகண்ட பகுதியிலிருந்து சுடச்செய்தார்! இரண்டு நாட்கள் சண்டையில், சாமூத்திரியின் 5 பெரிய கப்பல்களையும், ஏராளமான துடுப்புப் படகுகளையும் மூழ்கடித்ததுடன், பிறவற்றுக்கும் பெரும்சேதங்களை ஏற்படுத்தினார். சிறிய பாதுகாப்புகளை மட்டும்கொண்ட வெறும் வணிகக் கப்பல்களைக்கொண்டு, போருக்கென்றே உருவாக்கப்பட்ட கப்பலணியை முறியடித்த இந்த வரிசை முறை கடற்படையின் மிக முக்கிய தாக்குதல் அணிவகுப்பு முறையாகப் பின்பற்றப்பட்டது! 

- அறிவுக்கடல்

;