1930 - உலகின் முதல் தொலைக்காட்சி விளம்பரம், அமெரிக்காவின் பாஸ்டனி லிருந்த, சோதனை ஒளிபரப்பு நிலையத்திலிருந்து ஒளி பரப்பப்பட்டது. இதற்குப் பத்தாண்டுகள் கழித்தே, 1941 ஜூலை 1இல், அரசு அனுமதியுடன் தொலைக்காட்சி விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதால், அது முதல் விளம்பரமாகக் குறிப்பிடப்படுவதுண்டு. சுமார் நான்கா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் விற்பனை க்குப் பொருட்களிருப்பதை பேப்பிரஸ் தாளில் எழுதி வைத்தனர். கி.மு.11ஆம் நூற்றாண்டுக்கும் முன்னரே, சீனாவில் மிட்டாய் விற்க குழலூதியதே உலகின் முதல் ஒலி விளம்பரமாகும்! அரேபியா, கி.மு.ஏழாம் நூற்றாண்டுக் கால ரோமானிய நகரமான பொம்ப்பெய் ஆகிய பகுதிகளின் சிதிலங்களில் வணிக விளம்பரங்கள் மட்டுமின்றி, அரசியல் விளம்பரங்களும் கிடைத்துள்ளனவாம்! பொருட்களில் வணிகச் சின்னங்களை(ட்ரேட் மார்க்!) பொறிப்பதும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
பெரும்பாலானவர்கள் கல்வியறிவு பெறாதவர்களாக இருந்த நிலையில், நகர்ப்புறங்களில் பொருட்கள் பற்றிய விளம்ப ரங்களை அறிவிப்பதற்கு டவுன் கிரையர்(நகர கூவுபவர்கள்?!) என்ற ஆட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். இடைக்கால ஐரோப்பாவில் படிக்கத்தெரியாத மக்களைக் கருத்திற்கொண்டு, தையல்காரர், கொல்லர் போன்றோரின் படங்கள்கொண்ட விளம்பரப் பலகைகள் உருவாயின. அச்சு இயந்திரம், செய்தித்தாள்கள் ஆகியவற்றின் வரவைத்தொடர்ந்து 16ஆம் நூற்றாண்டிலிருந்து விளம்பரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது.
விளம்பர வருவாயின்மூலம் குறைந்த விலைக்குச் செய்தித்தாளை வழங்குவதை முதன்முறையாக 1836இல் பிரான்சின் ‘லா ப்ரஸ்’ என்ற செய்தித்தாள் செய்ய, அது மற்ற இதழ்களுக்கும் பரவியது. 1865இல் பியர்ஸ் சோப் நிறுவனத்திற்கான விளம்பரத்தைத் தயாரித்த தாமஸ் பாரட், நவீன விளம்பரத்தின் தந்தை என்றழைக்கப்படுவதுடன், 2014இல் கின்னஸ் புத்தகத்தால் உலகின் முதல் பிராண்ட் மேனேஜர் என்றும் கவுரவிக்கப்பட்டார். பொது இடங்களில் திடீரென்று மக்களைச் சந்தித்து, விளம்பரங்களுடன் இலவசப் பொருட்களையும் வழங்குவது க்வரில்லா(கொரில்லா) மார்க்கெட்டிங் என்று அழைக்கப்படுகிறது. 1920களில் வானொலி, 1940களில் தொலைக்காட்சி என்று வளர்ந்த விளம்பரங்கள், இணை யத்தின் வரவுக்குப்பின் தனிமனிதர்களின் விருப்பங்களைக் குறிவைத்த விளம்பரங்க ளாக உருவெடுத்தாலும், 1925லிருந்து, ஜிடிபியில் விளம்பரங்களின் பங்கு பெரும்பாலும் மாறவில்லையாம்!