1848 - கலிபோர்னியாவில் ஏராளமான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஜேம்ஸ் போக், நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார். உண்மையில் 1848 ஜனவரியிலேயே கலிபோர்னியத் தங்க வேட்டை தொடங்கிவிட்டிருந்தது. பொதுவாக, (நதி உள்ளிட்ட) வண்டல்களில் படிந்து கட்டித் தங்கம் கிடைப்பதைத் தொடர்ந்து, அதை எடுப்பதற்காக ஏராளமான மக்கள் அப்பகுதியில் குவிவது தங்க வேட்டை என்றழைக்கப்படுகிறது. நிலம்-கனிமங்களின்மீதான உரிமைகள் வரையறுக்கப்படாத அக்காலங்களில், எடுப்பவர்களுக்கே அத்தங்கம் சொந்தம் என்பதால், அப்பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் குடிபெயர்வார்கள். தொடக்கத்தில், தட்டு போன்றவற்றில் சலித்தே எடுக்க முடிவதால் செலவின்றிக் கிடைக்கும் தங்கம், குறையக்குறைய செலவுகள் அதிகரித்து, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுப்பதாக மாறும். ஜான் சுட்டர் என்பவரின் நிலத்தில் ஒரு மர அறுவை எந்திரத்தை நிறுவும் பணியிலிருந்த ஜேம்ஸ் மார்ஷல், ஒரு பளபளப்பான உலோகத் துண்டை 1848 ஜனவரி 24இல் கண்டெடுத்தார். இருவரும் ரகசியமாகச் சோதித்து தங்கம் என்று உணர்ந்தாலும், அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் விவசாயம் செய்ய விரும்பிய சுட்டர், அதற்கு இடையூறாகிவிடும் என்று கருதி, தங்கம் கிடைப்பதை ரகசியமாகவே வைத்துக்கொள்ள விரும்பினார்.
ஆனாலும், செய்தி வெளியே கசிந்து, அங்கு மக்கள் குவியத் தொடங்கினர். ஸ்பெயினிடமிருந்து மெக்சிகோ விடுதலையடைந்தபோது, அதன் பகுதியாக இருந்தது கலிபோர்னியா. அங்கிருந்த அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் போராடி அதனைத் தனிக்குடியர சாக்கியிருந்தனர். டெக்சாஸ் தொடர்பாக அமெரிக்காவுக்கும்-மெக்சிகோவுக்கும் நடைபெற்ற போரை 1848 பிப்ரவரி 2இல் முடிவுக்குக்கொண்டுவந்த ஒப்பந்தத்தின்படி கலிபோர்னியப் பகுதிகள் அமெரிக்காவுக்குச் சொந்தமாயின. இதற்கு ஒரு வாரம் முன்பே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால் ஏராளமான அமெரிக்கர்கள் ஏற்கெனவே அங்குக் குவியத்தொடங்கியிருந்தது, அதன்பின் மேலும் அதிகரித்து, பல்லா யிரக்கணக்கான அமெரிக்கத் தொல்குடியினர் கொல்லப்படவும், அமெரிக்காவின் ஒரு மாநிலமாக கலிபோர்னியா உயரவும் காரணமாக அமைந்தது. இக்காலகட்டத்தில், கலிபோர்னியாவுக்குச் சென்றால் (தங்கம் எடுத்து) பெரிய ஆளாகிவிடலாம் என்ற எண்ணம் ஏராளமானோருக்கு ஏற்பட்டிருந்ததால், திடீரென்று செல்வந்தராக வளர வேண்டும் என்று ஆசைப்படுவதை கலிபோர்னியக் கனவு என்று குறிப்பிடும் பழக்கம் ஆங்கிலத்தில் உருவாகி, இன்றும் நடைமுறையிலுள்ளது.
- அறிவுக்கடல்