1784 - ஆரஞ்சு நிற உடைகளை யாரும் அணியக்கூடாது என்று ஹாலந்து(தற்காலத்திய நெதர்லாந்து) நாட்டில் தடைவிதிக்கப்பட்டது! பர்கண்டிய முடியரசில் ஒரு கவுண்ட்டியாக(மாவட்டம் போன்றது) இருந்த, ஆரஞ்சு நகரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் விரிவாக்கி, இளவரசர் ஆளும் வேள்பகுதி நாடாக, புனித ரோமப் பேரரசின் அரசர் முதலாம் ஃப்ரடரிக்(பார்பரோசா) 1163இல் உயர்த்தி, தங்களுக்குத் திரை செலுத்தும் நாடாக்கினார். உண்மையில், இந்நகரத்தின் பெயருக்கும் ஆரஞ்சு நிறத்திற்குமோ, பழத்திற்குமோ எவ்விதத் தொடர்புமில்லை. ஆரஞ்சு என்ற பெயர் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளில் நார்த்தையைக் குறிக்கும் நாரம் என்ற சொல்லின் ஆங்கில வடிவத்தில், முதலெழுத்தான ‘என்’ விடுபட்டபின் உள்ள ஆரம் என்பதிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. பழத்தைக் குறிக்கும் ஆரஞ்சு என்ற சொல் 13ஆம் நூற்றாண்டிலும், நிறத்தைக் குறிக்கும் சொல் 16ஆம் நூற்றாண்டிலும்தான் முதன்முதலாக ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன.
கி.மு.35இலேயே உருவாகிவிட்ட ஆரஞ்சு நகரம், ஆரசியோ என்ற செல்ட்டிய நீர்க் கடவுளின் பெயர் சூட்டப்பட்டு, அதுவே மருவி ஆரஞ்சு என்றானது. வேள்பகுதி நாடாக மாற்றப்பட்டபின், இதை ஆண்ட ஆரஞ்சின் இளவரசர்கள் தங்கள் அடையாளமாக ஆரஞ்சு நிறத்தைக் காலப்போக்கில் கைக்கொண்டனர். புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்லஸ் காலத்தில்தான் ஒருங்கிணைக்கப்பட்ட நெதர்லாந்தின் பகுதிகள் ஆரஞ்சு வேள்பகுதியின் கட்டுப்பாட்டிலிருந்தன. சார்லசுக்குப்பின் பதவிக்குவந்த அவர் மகன் ஸ்பெயினின் இரண்டாம் ஃபிலிப் கால அதிக வரிகளுக்கெதிராக, 1568இல் ஆரஞ்சின் முதலாம் வில்லியம் செய்த புரட்சி தோல்வியுற்றாலும், 1581இல் விடுதலைப் பெற்றுவிட்டதாக அறித்து, இது டச்சுக் குடியரசு என்பதாகியது. இந்தச் சிறிய நாடு, அக்காலத்தின் மாபெரும் சக்திகளான ஸ்பெயின், இங்கிலாந்து ஆகியவற்றுக்கு இணையாக வணிகத்தையும், படையெடுப்புகளையும் மேற்கொண்டு அந்நியக் குடியேற்றங்களை உருவாக்கியது. 1747இல் பிரான்ஸ் இதனைக் கைப்பற்றியபோது, இளவரசரின் அதிகாரத்தை மீண்டும் உருவாக்கும் கோரிக்கை ஆரஞ்சிசம் என்றே அழைக்கப்பட, குடியரசுக்கு ஆதரவானவர்களால், ஆரஞ்சு நிற உடையே 1784இல் தடைசெய்யப்பட்டது. 1787இல் ஹாலந்தை ப்ரஷ்யா ஆக்கிரமித்தபோது, ஆரஞ்சிஸ்ட்டுகள் செல்வாக்குப்பெற, இந்தத் தடை செயலற்றுப்போனது. இன்று, நெதர்லாந்தின் வண்ணமாகவே ஆரஞ்சு இருக்கிற நிலையில், ‘ஆரஞ்சு ஆடை தடை நாள்’ என்பது ஜூன் 16இல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
- அறிவுக்கடல்