tamilnadu

img

இந்நாள் ஜுன் 21 இதற்கு முன்னால்

1834 - அறுவடை எந்திரத்திற்கு, அமெரிக்காவின் வர்ஜீனியாவில் சைரஸ் மெக்-கார்மிக் காப்புரிமை பெற்றார். அறுவடை எந்திரத்தின் கண்டுபிடிப்பாளராக இவரே பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், 1830களில் பலரும் மாறுபட்ட அறுவடை எந்திரங்களை உருவாக்கிக் காப்புரிமை பெற்றதுடன், காப்புரிமை தொடர்பாகப் பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. இவரது தந்தையான இளைய ராபர்ட் மெக்-கார்மிக், விவசாயம், பண்ணை ஆகியவற்றுக்குத் தேவையான பல சிறு கருவிகளை உருவாக்கியவர். 1809இல் ஓர் அறுவடை எந்திரத்தை ஓரளவுக்கு உருவாக்கியிருந்த அவர், 1831இல் அதற்குக் காப்புரிமைக்கும் விண்ணப்பித்தார். ஆனால், மொத்தம் 28 ஆண்டுகள் அதற்காக உழைத்திருந்த அவரால், முழுமையான அறுவடை எந்திரத்தை உருவாக்க முடியவில்லை. 18 மாத முயற்சியில், அவர்களிடமிருந்த அடிமையான ஜோ ஆண்டர்சன் உதவியுடன், குதிரையால் இழுக்கப்படும் அதனை முழுமையாக்கிய அவர் மகன் சைரஸ் மெக்-கார்மிக், 25 வயதில் இக்காப்புரிமையைப் பெற்றார். ஏற்கெனவே, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பேட்ரிக் பெல் என்பவர் உருவாக்கி, காப்புரிமைபெறாத அறுவடை எந்திரங்கள் அமெரிக்காவில் ஆங்காங்கே பயன்பாட்டிலிருந்தன.

1833இல் ஒகையோவில் ஒபெட் ஹஸ்ஸி என்பவரும் ஓர் அறுவடை எந்திரத்திற்குக் காப்புரிமைபெற்றிருந்தார். இவையெல்லாவற்றையும்விட மேம்பட்டதாக இருந்தாலும், சைரசின் அறுவடை எந்திரம் அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. புதிய எந்திரங்களைப் பயன்படுத்துவதில் விவசாயிகளுக்கிருந்த தயக்கத்துடன், ஹஸ்ஸியின் எந்திரத்திலிருந்த ரம்பம் போன்ற அறுக்கும் பகுதி சிறப்பாகச் செயல்பட்டதும் அவருக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தது. பின்னாளில், அந்த அறுக்கும் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை வாங்கி, மேம்படுத்தியதும் சைரசின் எந்திரம் மிகப்பெரிய அளவில் விற்பனையானது.அதனால், அறுவடை எந்திரத்தை உருவாக்கியவர் என்பதைவிட, பல்வேறு அறுவடை எந்திரங்களின் சிறப்புகளையும் ஒருங்கிணைத்து, செயல்திறன்மிக்க அறுவடை எந்திரத்தை உருவாக்கியவர் சைரஸ் மெக்-கார்மிக் என்று குறிப்பிடுவதே சரியானதாக இருக்கும். இடையிடையே பல வழக்குகளைச் சந்தித்தாலும், அவரால் தொடங்கப்பட்டு, பின்னாளில் ‘பன்னாட்டு அறுவடை நிறுவனம்’ என்று பெயர்மாற்றம்பெற்ற நிறுவனம், உழவுக்கருவிகள் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாகியது.