1918 - குழந்தைத் தொழிலாளர்முறையைத் தடுப்பதற்காகச் சட்டம் இயற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்திற்கு இல்லையென்று அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குழந்தைத் தொழிலாளர்முறையை ஒழிக்கும் நோக்கத்துடன், 1904இல் உருவாக்கப்பட்டிருந்த, தேசிய குழந்தைத் தொழிலாளர் குழு என்ற அமைப்பின் இயக்கங்களால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, கீட்டிங்-ஓவன் சட்டம் 1916இல் இயற்றப்பட்டது. இது குழந்தைத் தொழிலாளர்முறையை தடையெல்லாம் செய்துவிடவில்லை. மாநிலங்களுடைக்கிடையேயான வணிகத்தில் எடுத்துச்செல்லப்படும் பொருட்கள், குழந்தைத் தொழிலாளர் உழைப்பினால் உற்பத்தி செய்யப்படுவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. அதற்கே, இதிலெல்லாம் தலையிட கூட்டரசுக்கு அதிகாரமில்லை என்று மாநிலங்கள் கூறிவிட்டதைத்தான் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. பின்னாளில் 1941இல் மற்றொரு வழக்கின் தீர்ப்பில் இது சரிசெய்யப்பட்டது.
குழந்தைகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவது சரியல்ல என்ற உணர்வே, தொழிற்புரட்சிக்கு (அதாவது முதலாளித்துவ பொருளாதாரமாக உருப்பெறத் தொடங்கிய) பின்னர்தான் உருவானது. இங்கிலாந்தின் தொழில்துறை, தொழிலாளர்களின் மட்டுமின்றி, குழந்தைகளின் ரத்தத்தையும் குடித்தே வளர்ந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். குழந்தைத் தொழிலாளர்முறையைத் தடையெல்லாம் செய்துவிடவில்லையென்றாலும், அவர்களுக்குரிய பணிநேரத்தை வரையறுத்த முதல் சட்டம் 1839இல் பிரஷ்யாவில் இயற்றப்பட்டது. வயதுவந்த தொழிலாளர்களுக்கான உரிமைகளே முதல் உலகப்போருக்குப் பின்னர்தான் உருப்பெற்ற நிலையில், 20ம் நூற்றாண்டில் குழந்தைத் தொழிலாளர்முறையைக் கட்டுப்படுத்த ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்றும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இன்றும், கணிசமான நாடுகளில், சட்டப்படியான பணிக்குச் செல்வதற்கான குறைந்தபட்ச வயது 12-15ஆக உள்ளது!
- அறிவுக்கடல்