tamilnadu

img

தமிழ்த் தென்றல் திரு.வி.க

இந்திய சுதந்திரப் போர் பல அரிய தலைவர்க ளைக் கண்டிருக்கிறது. இவர்களில் தமிழ்த் தென்றல் என்று போற்றப்படும் திரு.வி.க. வின் தனித்தமிழ் எழுத்தும் பேச்சும் இவருக்குத் தனி முத்திரைப் பதித்தது. சில காலம் ஸ்பென்சர் நிறுவனத்தில் பணி யாற்றினார். இவரது தேசிய உணர்வு அந்த கம்பெனியின் வெள்ளை முதலாளிகளுக்குப் பிடிக்காமல் வேலை போயிற்று. சிலகாலம் வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

காங்கிரஸ் இயக்கத்தில் இவர் தம்மை இணைத்துகொண்டு பணி யாற்றத் தொடங்கினார். ‘தேசபக்தன்’ எனும் பத்திரிகையில் ஆசிரியப் பொறுப்பை ஏற்று நடத்தினார். பிறகு அதிலிருந்தும் வெளியேறி “நவ சக்தி” பத்திரிகையின் ஆசிரியரானார். 1941இல் இந்த பத்திரிகையும் நின்று போயிற்று. 1917இல் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்ட திரு.வி.க. 1934 வரை அதில் முழுமையாக பங்கேற்றார். 1918இல் வாடியா என்பவரால் தொடங்கப்பட்ட சென்னை தொழிற்சங்கத்தில் இவர் ஈடுபாடு காட்டினார். இந்த சென்னை தொழிலாளர் சங்கம்தான் இந்தியாவிலேயே தொழிலாளர்களுக்கென உண்டான சங்கங்களில் முதல் சங்கமாகும். 1947இல் நடந்த பக்கிங்காம் கர்நாடிக் மில் தொழிலாளர் போராட்டத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

பன்முகத் திறமை கொண்டவராக திரு.வி.க. விளங்கினார். அரசிய லில், தொழிற்சங்க இயக்கத்தில், தமிழிலக்கியத்தில், சைவ சமயத்தில் இப்படி இவரது பணி பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியது. மிக எளிமையானவராக இவர் திகழ்ந்தார். 1943ல் இவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு மலர்கள் வெளியிட்டன. மணிவிழாவுக்குப் பிறகு இவர் மேலும் பத்தாண்டுகள் பயனுள்ள பணிகளைச் செய்துகொண்டு வாழ்ந்தார். ஏராளமான நூல்களை எழுதினார். தொழிலாளர் இயக்கங்களிலெல்லாம் பங்கு கொண்டார். இவரது தொழிற்சங்க பணிகளில் வ.உ.சி.யும் பங்கெடுத்துக் கொண்டு, சென்னை துறைமுகத் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். இவ்வளவு பெயருக்கும் புகழுக்கும் உரியவரான திரு.வி.க. சொந்த வீடு இன்றி, வங்கிக் கணக்கு இன்றி, காலில் காலணி இன்றி, எளிய கதராடையில் நான்கு முழ வேட்டி, சட்டை, அல்லது சில சமயங்களில் மேல் துண்டு மட்டும் என்று மிக எளியவராகவே இருந்தார். இறுதி நாட்களில் சர்க்கரை வியாதியால் கண்பார்வை இழந்து முதுமை வாட்ட தனது எழுபதாவது வயதில் ஒரு வாடகை வீட்டில் உயிர் நீத்தார்.

-பெரணமல்லூர் சேகரன்