tamilnadu

கிருமி நாசினி தெளிப்பது சுகாதாரக்கேட்டைத்தான் ஏற்படுத்தும்

ஜெனீவா:
கொரோனா வைரசை ஒழிக்க  தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பது பயனற்றது என்றும் இது சுகாதாரக்கேட்டைத்தான் ஏற்படுத்தும் என்றும்   உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயால்  உலகம் முழுவதும் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் கொரோனாவை தடுக்க பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 
கிருமி நாசினி சுரங்கங்கள் அமைத்து மக்கள் மீது தெளிப்பதன் மூலம் கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்று சுரங்கங்கள் அமைக்க வேண்டாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரோனாவை ஒழிக்கும் வகையில் வெளியிடங்கள், சந்தை பகுதிகள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது பயனற்றது. அதனால் எந்த பலனும் இல்லை. மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. தனிநபர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதை எந்த சூழ்நிலையிலும் பரிந்துரைக்கவில்லை.  இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும். கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகள் அல்லது தொடர்பு மூலம் வைரசை பரப்பும் திறனைக் குறைக்காது. மக்கள் மீது குளோரின் அல்லது பிற நச்சு ரசாயனங்கள் தெளிப்பது கண் மற்றும் தோல் எரிச்சல், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கட்டடத்தின் உட்புறங்களில் தரையில் மருந்து தெளிக்கக்கூடாது. இவ்வாறு செய்வது மருந்து படாத இடங்களில் எந்த பயனையும் அளிக்காது. கிருமி நாசினியில் நனைக்கப்பட்ட துணியை பயன்படுத்தித் துடைப்பதன் மூலமே கிருமிகளை அழிக்க முடியும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;