tamilnadu

எளிய வழியில் இலக்கணம்-10: நிலமும் பொழுதும்

கோவி.பால.முருகு

அகப்பொருள் இலக்கணத்தில் நிலங்களையும், அவைகளுக்குரிய பெரும்பொழுதுகள்,பெரும்பொழுதிற்குரிய பெயர்கள், பெரும்பொழுதிற்குரிய மாதங்கள், சிறுபொழுது, அதற்குரிய பெயர்கள், அவைகளுக்குரிய நேரம் இவைகளை எளிய வழியில் நினைவில் வைத்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
நிலங்களின் பெயர்களை வரிசைப்படி  நினைவில்  நிறுத்த எளிய வழி.
*அ)"உறிஞ்சி வாழும் தொல்லை மனிதர்,மதம் பிடித்து கொய்தல்(அ)கெடுதல் செய்வார்,பாலை போன்றது அவரின் உள்ளம்."
ஆ)"உ(கு)றிஞ்சி வாழும் தொ(மு)ல்லை மனிதர், ம(ரு)தம் பிடித்து  கொ(நெ)ய்தல்-கெடுதல்-நெய்தல்(தலையை வெட்டுதல்) செய்வார்,பாலை போன்றது அவரின் உள்ளம்.
மேலே (அ வில்)உள்ள செய்தியை  மனப்பாடம் செய்துகொண்டு (ஆ வில்) உள்ளது போல் பொருள்கொள்ள வேண்டும்.
1)உறிஞ்சி-குறிஞ்சி/2)தொல்லை-முல்லை/3)மதம்-மருதம்
4)கொய்தல்-நெய்தல்/5)பாலை-பாலை
முன்னுக்குப்பின் முரணாக எழுதாமல் மேலே சொன்ன எளிய வழியைப் பின்பற்றினால் இப்படி வரிசைப்படுத்தி எழுதலாம் கூறலாம்.
இப்போது திணைகளுக்குரிய பெரும்பொழுது களைப்பார்ப்போம்.
எளிய வழி: நினைவில் நிறுத்த வேண்டியது
*"காரில் குளிர். வெளியே பனி.எப்போது வரும் இளவேனில்" 
இந்த சொற்றொடரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் பனி என்பதோடு  முன் பின் என்ற சொல்லைச்சேர்த்து  முன்பனி, பின்பனி என்று எழுதிக்கொள்ளலாம். மேலும் எப்போது வரும் வேனில் என்பதில் வேனிலுக்கு முன்னே  இள, முது என்பதைச் சேர்த்து இளவேனில், முதுவேனில் என்று எழுதிக்கொள்ளுங்கள். இப்போது வரிசையாக ஓராண்டின் ஆறு பெரும்பொழுதுகளை எழுதிவிடலாம்.
காரில் குளிர்- 1)கார் காலம்2)குளிர் காலம் 
வெளியே பனி-3)முன்பனிக் காலம் 4)பின்பனிக் காலம் 
எப்போது வரும் வேனில்-5)இளவேனில் காலம்6)முதுவேனில் காலம்
என்று பெரும்பொழுது ஆறையும் வரிசையாக எழுதிவிடலாம்.
பெரும்பொழுதிற்குரிய தமிழ் மாதங்களை எவ்வாறு எளிமையாக நினைவில் வைத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம்.
பெரும்பொழுதில் முதலில் இருப்பது கார்காலம். கார் காலத்திற்குரிய   மாதம் எதில்தொடங்குகிறது? ஆவணியில். எனவே இதை நினைவில் வைத்துக்கொள்ள
*"காரில் ஏறினாள் தாவணிப் பெண்ணாள்"
என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் 
கார்-தாவணி (ஆவணி)
என்று பொருத்திப்பார்த்து எழுதலாம். ஒரு பெரும்பொழதிற்கு இரண்டு மாதங்கள் என்ற கணக்கில் 
1)கார்-ஆவணி,புரட்டாசி
2)குளிர்-ஐப்பசி,கார்த்திகை
3)முன்பனி-மார்கழி,தை
4)பின்பனி-மாசி,பங்குனி
5)இளவேனில்-சித்திரை,வைகாசி
6)முதுவேனில்-ஆனி,ஆடி.
என்று அழகாக, சரியாக, பிழையின்றி எழுதிவிடலாம். அடுத்து  சிறுபொழுதுகள் குறித்துப்  பார்க்கலாம்.
எளிய வழி: நினைவில் நிறுத்த வேண்டியவை.
*"காலையில்  ஆறுமணிக்கு எழுந்து நண்பகல்   விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.மாலை திரைப்படத்திற்குச் சென்று  ஜாமத்தில் (யாமம்)  வந்து படுத்தேன்..வைகறையில் எழுந்துவிட்டேன்."
என்ற ஒருவரின் பேச்சை விளையாட்டாக  மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். மனதில் நிறுத்துவதும் எளிது. ஒருமுறை படித்தாலே போதும்.இப்போது உங்கள் மனதில் இருக்கும் அந்த உரை  சிறு பொழுதுகளை வரிசைப்படுத்த உதவுவதைப் பார்க்குமுன் ஒரு பொழுதிற்கு நான்கு மணிநேரம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.ஆறு பொழுதிற்கும் சேர்த்து 6×4=24 மணிநேரம் ஆகும்.
காலையில் ஆறு மணிக்கு எழுந்து-காலை  - 6-10
நண்பகல் விருந்திற்கான - நண்பகல்-10-2
ஏற்பாடுகளைச் செய்தேன் - எற்பாடு -02-06
மாலை திரைப்படத்திற்குச் சென்றேன்-மாலை-06-10
யாமத்தில் வந்து படுத்தேன்-யாமம்-10-02
வைகறையில் எழுந்துவிட்டேன்-வைகறை-02-06
இப்படி எளியவழியில் இலக்கணத்தைக் கற்றுக்கொள்வதால் எப்போதும் நினைவைவிட்டு நீங்காமல் இருக்கும் என்பது உறுதி.
அடுத்து திணைகளைப் பற்றியும் அவைகளுக்குரிய சிறுபொழுது பெரும்பொழுதுகளைப் பார்ப்போம்.
இப்படி எழுதியபிறகு ஒவ்வொரு திணைக்கும் உரிய பெரும்பொழுது சிறுபொழுதுகளை எவ்வாறு எளியவழியில் காண்பது குறித்துப் பார்ப்போம்.
முன்பு திணைகளை வரிசையாக எழுதுவதற்கான எளிய வழியாக 
"உறிஞ்சி  வாழும் தொல்லை மனிதர்,மதம் பிடித்துக் கொய்தல் செய்வார்.பாலை போன்றது அவரின் உள்ளம்"
இதன்படி
1)குறிஞ்சி 2)முல்லை 3)மருதம் 4)நெய்தல் 5)பாலை
என எழுதிக்கொள்வோம். இப்போது நம் ஆய்வைக் கொஞ்சம் முடுக்கிவிடுவோம். குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும். என்பதால் பெரும்பொழுதில் முதலெழுத்தாக கு வருவது எது? குளிர் காலம் அல்லவா? எனவே, குறிஞ்சிக்குப் பெரும்பொழுது குளிர்காலமும் அதையடுத்து வருகிற முன்பனிக்காலத்தையு எழுதிக்கொள்ளலலாம்.குறிஞ்சிக்குச் சிறுபொழுது நள்ளிரவு அதாவது யாமம்.எதற்கு சிறுபொழுதாக நள்ளிரவைக் குறித்தார்கள்.தலைவனும் தலைவியிலும் யாருக்கும் தெரியாமல் சந்திப்பார்கள். ஏனென்றால் குளிரும்,முன்பனியும் உள்ள நேரத்தில் யாரும் வெளியே வரமாட்டார்கள் அதனால் இவர்கள் சந்திப்பை யாரும் காணமுடியாது அல்லவா? அதனால் எனவே சிறுபொழுதை யாமம் என்று எழுதிக்கொள்ளலாம்.

குறிஞ்சி- பெரும்பொழுது குளிர்காலம், முன்பனிக்காலம் - சிறுபொழுது யாமம்

அடுத்து முல்லை. முல்லை என்பது காடும் காடு சார்ந்த பகுதியும். மழை பெய்வதற்கு எது வேண்டும்? மரங்கள் அவை நிறைந்த காடுகள். எனவே, முல்லைக்குரிய பெரும்பொழுது மழைக்காலம் அதாவது கார்காலம் என்று எழுதிக்கொள்ளலாம்.சிறுபொழுதாக மாலை நேரம் இருக்கிறது. இதை எப்படிப் பொருத்திப்பார்த்து நினைவில் கொள்வது? மிகவும் எளிது முல்லையை மாலையாய்த் தொடுப்பதை நினைவில் நிறுத்தினால் முல்லைக்குச் சிறுபொழுது மாலை என்று எழுதிவிடலாம். 

முல்லை-பெரும்பொழுது மழைக்காலம்- சிறுபொழுது மாலை

 மருதம் என்பது வயலும் வயல்சார்ந்த இடமும். இதற்குப் பெரும்பொழுதாக ஆறையும்   (கார், குளிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்) குறிப்பிடப்படுகிறது. எளிதாக (மரு-ஆறு) என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.அதாவது மருதத்திற்கு ஆறு பெரும்பொழுதுகளும் உரியது என்பதை அதனால் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.சிறுபொழுது வைகறை எதனால் மருதத்திற்குச் சிறுபொழுது வைகறை என்பதை சிந்தித்தால். வயலும் வயல்சார்ந்த மருத நிலத்து உழவர்கள் வைகறையில் துயிலெழுந்து வயலுக்குச் செல்வார்கள். அதாவது காலை ஆறு மணிக்கு முன்பாக எழுந்துவிடுவார்கள்.எனவே, மருதத்திற்கு உரிய சிறுபொழுது வைகறை என எழுதிக்கொள்வோம்

மருதம்-ஆறுபெரும்பொழுதுகளும்-  சிறுபொழுது வைகறை

நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும்.இதற்கும் ஆறு பெரும்பொழுதுகளும் உரியது.சிறுபொழுது என்பது எற்பாடு (எல்+பாடு=எற்பாடு) எல்-சூரியன், பாடு படுதல் -மறைதல் என்பது பொருள்.சூரியன் மறையும் நேரம் எற்பாடு.ஏன் நெய்தலுக்கு எற்பாடு சிறுபொழுதாயிற்று என்றால் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற பரதவர் அதாவது மீனவர் சூரியன் மறையும் நேரத்தில் கரை திரும்புவதால் எற்பாடு நெய்தலுக்கு சிறுபொழுதாயிற்று.

நெய்தல் - ஆறு பெரும்பொழுதுகளும்-சிறுபொழுது எற்பாடு

பாலை நிலம் என்பது மணலும் மணல்சார்ந்த இடமாகும்.  பாலைவனம் என்றாலே மிகுந்த வெப்பமுடைய பகுதி யென்பது அனைவர்க்கும் தெரியும்.இந்த வெப்பம் எதனால்  ஏற்படுகிறது சூரியனில் இருந்துவரும்  வெப்பமான வெயி லால். இந்த வெயிலை வேனில் என்றும் அழைப்பார்கள்.எனவே வேனில் என்றே வைத்துக்கொள்வோம்.இதிலும் மிதமான வெயில் கடுமையான வெயில் இருக்கின்றன. எனவே அவற்றை இளவேனில், முதுவேனில் என்று வைத்துக்கொள்வோம்.இப்போது பாலை நிலத்திற்கு இளவேனிலும், முதுவேனிலும், விடுபட்டிருக்கும் பின்பனிக்காலமும் பெரும்பொழுதாகும். சிறுபொழுதை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளலாம். அதாவது ஒருநாளில் வெப்பம் அதிகமாவது எந்த நேரத்தில் என்று சிந்தித்தால் அது நண்பகல் நேரமாகும் எனவே, பாலைக்கு சிறுபொழுது நண்பகலாகும்.

பாலை-பெரும்பொழுது இளவேனில், முதுவேனில், பின்பனி - சிறுபொழுது நண்பகல்
 

  பெரும்பொழுது                     சிறுபொழுது

1) குறிஞ்சி                     -குளிர்காலம், முன்பனிக்காலம்    யாமம்
2) முல்லை                     -மழைக்காலம்     மாலை
3) மருதம்                       - ஆறுபெரும்பொழுதுகளும்     வைகறை
4) நெய்தல்                   - ஆறு பெரும்பொழுதுகளும்    எற்பாடு
5) பாலை                      - இளவேனில், முதுவேனில், 
பின்பனி                           நண்பகல்