tamilnadu

அரசுப் பள்ளிகளில் ஜூன் முதல் மின்னணு வருகைப் பதிவேடு முறை

நாமக்கல், மே 23-நாமக்கல் மாவட்டத்தில் 169 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியைகளின்வருகையை உறுதி செய்வதற்கான மின்னணு வருகைப் பதிவேடு முறை ஜூன் முதல் வாரத்தில் அமல்படுத்தப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 101 மேல்நிலைப் பள்ளிகள், 68 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 169 அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு, 3,474 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். 483 ஆசிரியரல்லாத பணியாளர்களும் உள்ளனர். இம்மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியைகளின் வருகை தொடர்பான சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. பணிக்கு வராதபோதும், வந்ததுபோல் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதாக அதிகாரிகளுக்கு புகார்சென்றது. குறிப்பாக, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கே செல்வதில்லை எனும் பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதற்காக, நிகழாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மின்னணு பதிவேடு முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா கூறியதாவது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மின்னணு வருகைப் பதிவேடு அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி திறக்கும் நாளிலோ அல்லது அரசு அறிவிக்கும் நாளிலோ இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலங்களில் இந்த நடைமுறையானது ஏற்கெனவே அமலில் இருக்கிறது. வரும் ஆண்டுகளில், நடுநிலை, தொடக்கப் பள்ளிகளிலும் மின்னணு வருகைப் பதிவேடு முறை அமலாக வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளிக்குள் நுழையும்போதும், பணி முடிந்து வீடு திரும்பும்போதும் இந்த மின்னணு வருகைப் பதிவேடு கருவியில் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும் என்றார்.

;